ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்-மிட்சுபிஷி உடைகிறது?

நீண்ட காலமாக கூட்டணியாக செயல்பட்டும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த முன்னேற்றும் இல்லாததால், கூட்டை முறித்துக்கொள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் மற்றும் மிட்சுபிஷி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 1998ம் ஆண்டு அம்பாசடர் புகழ் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் ஜப்பானை சேர்ந்த மிட்சுபிஷி நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டது. அம்பாசடர் கார் ஆலையில் மிட்சுபிஷி கார்கள் அசெம்பிளிங் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மற்ற வாகன நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி ராக்கெட் வேகமெடுத்த நிலையில், இந்த இரு கூட்டு நிறுவனங்களின் விற்பனை அதளபாதாளத்தில் இருந்து வருகிறது. மேலும், இரு நிறுவனங்களும் போட்டியை சமாளிக்கும் வகையில் புதிய கார் மாடல்களையும் அறிமுகப்படுத்தவில்லை.இதனால், இரு நிறுவனங்களின் வளர்ச்சி குறித்து வெளியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. இந்த நிலையில், இழந்த மார்க்கெட்டை திரும்ப பிடிக்கும் விதமாக நீளம் குறைக்கப்பட்ட புதிய அம்பாசடர் காரை விரைவில் அறிமுகம் செய்ய ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

இதுபோன்று, மிட்சுபிஷி நிறுவனம் சமீபத்தில் டோக்கியோ ஆட்டோ கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட மிராஜ் என்ற புத்தம் புதிய ஹேட்ச்பேக் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், இரு நிறுவனங்களும் கூட்டணியை முறித்துக்கொண்டு இந்திய சந்தையில் தனித்து களமிறங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இதனிடையே, டெல்லி கண்காட்சியில் அரங்கு அமைப்பதற்கான கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் டெல்லி ஆட்டோ கண்காட்சியில் பங்கேற்காது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி ஆட்டோ கண்காட்சியில் புதிய அம்பாசடர் காரை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் பார்வைக்கு வைக்கும் என்று ஆட்டோமொபைல் துறையினரும், வாடிக்கையாளர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில், டெல்லி ஆட்டோ கண்காட்சியில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் பங்கேற்காது என்று வெளியாகியுள்ள தகவல் அவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments: