சசி கும்பல் செய்த சகுனி வேலை


சோதனையான காலத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக இருந்த அ.தி.மு.க., பிரமுகர்கள் பலர், சசிகலா மற்றும் அவரது உறவினர்களால், திட்டமிட்டு சதி செய்து வெளியே அனுப்பி வைக்கப்பட்டது எப்படி என்ற தகவல்களை, அ.தி.முக.,வினர் மனக்குமுறலுடன் வெளியிட்டுள்ளனர்.

அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், அக்கட்சி இரண்டாக உடைந்தது. எம்.ஜி.ஆர்., மனைவி ஜானகியின் தலைமையில் ஒரு அணியும், ஜெயலலிதா தலைமையில் மற்றொரு அணியும் உருவானது. ஆரம்ப காலத்தில் ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக இருந்த திருநாவுக்கரசர், சாத்தூர் ராமச்சந்திரன் உட்பட யாருமே இப்போது அ.தி.மு.க.,வில் இல்லை. அவர்கள் கட்சியை விட்டு விரட்டப்பட்டதற்கு காரணம், ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்தது தான்.

கூட்டு சதியும்; தி.மு.க., ஆசியும்:அ.தி.மு.க.,வை கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான், சசிகலா குழுவிடம் ஆரம்பத்திலேயே இருந்தது. இதற்காக அவர்கள் கூட்டு சதிச் செயலை மேற்கொண்டனர். அதற்கு, தி.மு.க., ஆசியும் உண்டு என்பது தான் பகீர் பின்னணி.

ஜெயலலிதாவிற்கு மிகப்பெரும் நம்பிக்கை துரோகம் செய்து கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற அவர்கள் மேற்கொண்ட திடுக்கிடும் முயற்சிகள் வருமாறு: ஜெயலலிதாவின் விசுவாசிகளைப் பற்றி தவறான தகவல்களை ஜெயலலிதாவிடம் சொல்லி, அவரை நம்பும்படி செய்து, அவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றும் பணிகளையும் சசிகலா உறவினர்கள் கனகச்சிதமாக செய்து வந்தனர்.

மெச்சினால் நசுக்கினர் :கட்சிப் பிரமுகர்களின் இல்லத் திருமண விழாக்களில் சம்பந்தப்பட்ட கட்சியினரை ஜெயலலிதா புகழ்ந்து பேசினால், அந்த கட்சியினர் மீது தவறான குற்றச்சாட்டுகளை தெரிவித்து, அவர்களை ஜெயலலிதாவுக்கு எதிரியாக சித்தரித்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.சேடப்பட்டி முத்தையாவின் இல்லத் திருமண விழாவில் ஜெயலலிதா பேசிய போது, "விசுவாசத்திற்கு மறுபெயர் சேடப்பட்டி முத்தையா என்றும், கருப்பசாமி பாண்டியன் இல்லத் திருமண விழாவில் ஜெயலலிதா பேசிய போது, "விசுவாசமான தளபதி கருப்பசாமி பாண்டியன்' என்றும் பேசினார். ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டவர்கள் அனைவரும் சசிகலாவால் ஓரங்கட்டப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

கடந்த தி.மு.க., ஆட்சியில் அ.தி.மு.க.,வின் வட சென்னை மாவட்டச் செயலராக பணியாற்றிய சேகர்பாபு, ஐந்தாண்டுகளும் ஏராளமான போராட்டங்களையும், பொதுக்கூட்டங்களையும் நடத்தினார். கட்சிப் பணிகளில் மற்ற மாவட்டச் செயலர்களுக்கு உதாரணமாகத் திகழ்ந்த அவரையும் வெளியேற்றியதற்கு, சசிகலா உறவினர்கள் உடந்தையாக இருந்தனர். மாற்றுக் கட்சியில் இருந்து அ.தி.மு.க.,விற்கு வந்த சிலர், சசிகலா உறவினர்களை வளைத்துப் போட்டு, பொய்யான தகவல்களை ஜெயலலிதாவிற்கு வழங்கி, நடவடிக்கை எடுக்க வைத்தனர்.

இதே போல், அனிதா ராதாகிருஷ்ணன் வெளியேறுவதற்கு, சசிகலா உறவினர்கள் கொடுத்த நெருக்கடி தான் காரணம்.இதே பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.எம்.வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசர், முத்துசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், அரங்கநாயகம், வேலு, ஏ.சி.சண்முகம், ரகுபதி, தென்னவன், அழகு திருநாவுக்கரசு, சத்தியமூர்த்தி, இந்திரகுமாரி, கரூர் சின்னசாமி, செல்வகணபதி, சேடப்பட்டி முத்தையா, முன்னாள் எம்.பி., ஆஸ்டின் மற்றும் சேலம் கண்ணன், சேலம் அர்ஜுனன், உக்கம்சந்த், திண்டுக்கல் மாயத்தேவர் உள்ளிட்ட பலர், சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கத்தால் வெளியேற்றப்பட்டனர்; சிலர் மனம் வெதும்பி, மனப்புழுக்கத்துடன் தானாகவே வெளியேறினர்.எம்.ஜி.ஆர்., விசுவாசிகளையும் அ.தி.மு.க.,வில் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. திட்டமிட்டு அவர்களையும் வெளியேற்றினர். அவர்களில் சிலர் தற்போது தி.மு.க., - காங்., - தே.மு.தி.க., போன்ற கட்சிகளிலும் பணியாற்றி வருகின்றனர். வேறு சிலர், தனிக்கட்சி உருவாக்கி நடத்தி வருகின்றனர்.

ஜாக்பாட்: அ.தி.மு.க.,வில் இருந்து சசிகலா குழுவினரால் துரோகி என முத்திரை குத்தப்பட்டு அனுப்பபட்டவர்கள் தி.மு.க.,வில் உடனடியாக சேர்க்கப்பட்டனர். தி.மு.க., ஆட்சியின் போதும், அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. சசிகலா மீதோ, அவர்களது உறவினர்கள் மீதோ எந்த வழக்கும் கிடையாது. அதே நேரத்தில், அ.தி.மு.க.,வில் தொடர்ந்து இருக்கும் ஜெயலலிதா விசுவாசிகள் மீது மட்டும் வழக்குகள் பதியப்பட்டன. ஜெயலலிதாவிற்கு என அ.தி.மு.க.,வில் விசுவாசிகள் யாருமே இருக்கக் கூடாது, என்ற ஒரே நோக்கத்துடன் இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது.

தகதிமிதா:தி.மு.க.,வில் இப்போது முன்னணி தலைவர்களாக இருப்பவர்கள் அ.தி.மு.க.,விலிருந்து சென்றவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தி.மு.க.,வில் வாரிசுகளின் கோஷ்டி அரசியலை சகித்துக்கொள்ள முடியாமல் அக்கட்சியிலிருந்து வெளியேறுவதற்கு சிலர் தயாராக உள்ளனர். அவர்களை அ.தி.மு.க.,வில் இணைப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா தரப்பில், "கிரீன் சிக்னல்' கிடைக்குமா? என சிலர் எதிர்பார்க்கின்றனர்.

No comments: