ஜெ.வுக்கு மோடி அட்வைஸ் ?

ஜெயலலிதா, சசிகலா மோதலின் பின்னணியில் இதோ இன்னொரு காரணமாகச் சொல்லப்படுவது, ஜெயலலிதாவுக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கொடுத்த அறிவுரை தான் என்று செய்திகள் பரவியுள்ளன.

ஜெயலலிதா, சசிகலா பிரிவுக்கு பல காரணங்கள் புற்றீசல் போல கிளம்பி வந்து கொண்டே இருக்கின்றன. இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு பரபரப்பான சம்பவம் நடந்ததே இல்லை என்பது போல மாறி விட்டது இந்த இருபெரும் பெண்மணிகளின் பிரிவு.

இவர்களுக்குள் நடந்தது என்பதை விட இவர்களைச் சுற்றி பல சம்பவங்கள் நடந்துள்ளன என்பதுதான் உண்மை. அந்த சம்பவங்கள்தான் ஜெயலலிதாவை விட்டு சசியை துரத்தியடிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

சசிகலா-நடராஜன் கூட்டத்தினர் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனங்களில் பெருமளவி ல் தலையிட்டு கிட்டத்தட்ட தமிழகத்தின் ஆட்சியையே தங்கள் பக்கம் திருப்பி விட்டு விட்டதால் ஜெயலலிதாவால் முழுமையாக செயல்பட முடியவி்ல்லை என்கிறார்கள்.

அவரது முடிவுகளை அதிகாரிகள் சரிவர நிறைவேற்றாமல் வேண்டும் என்றே சொதப்பி வந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆருக்குக் கூட இப்படி ஒரு அமோக வரவேற்பை தமிழக மக்கள் அளித்ததில்லை. அப்படி ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வெற்றியை ஜெயலலிதா ஒரு முறை அல்ல இரண்டு முறை பெற்றவர். தமிழக அரசியலில் இப்படி ஒரு அருமையான ஆதரவை மக்கள் யாருக்குமே தந்ததில்லை. கடந்த முறை சட்டசபைத் தேர்தலில் கூட திமுகவுக்கு மக்கள் மைனாரிட்டி ஆதரவைத்தான் தந்தார்கள். ஆனால் ஜெயலலிதாவுக்கு கடந்த மே மாதத்தில் மக்கள் தந்த அமோகமான வரவேற்பை திமுகவினரே கூட எதிர்பார்க்கவில்லை. ஏன், மக்களே கூட எதிர்பார்க்கவில்லை, நாம் ஜெயலலிதாவுக்கு இப்படி ஒரு ஆதரவைத் தருவோம் என்று.

ஆனால் இவ்வளவு பெரிய ஆதரவைப் பெற்றும் கூட மக்களுக்காக எதையுமே செய்ய முடியாத பெரும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டார் ஜெயலலிதா. கிட்டத்தட்ட ஒரு பொம்மை முதல்வர் போன்ற நிலைக்கு அவர் தள்ளப்பட்டார் - நிரம்பி வழியும் பெரும்பான்மை ஆதரவை வைத்திருந்தும் கூட.

ஜெயலலிதாவின் இந்த நிலையை அவருக்கு சரியாக எடுத்துக் காட்ட பலரும் முயன்றனர். இருப்பினும் ஜெயலலிதாவை நெருங்கவே முடியாத நிலையால் அவர்கள் தவித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில்தான் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நேரடியாக ஜெயலலிதாவிடம் பேசி அவர் தற்போது உள்ள நிலையை எடுத்துக் கூறியுள்ளார் என்கிறார்கள்.

ஜெயலலிதாவுக்கும், மோடிக்கும் நல்லுறவு நீண்ட காலமாக நிலவுகிறது. அத்வானியிடம் கூட ஜெயலலிதா கோபித்துக் கொள்வார். ஆனால் மோடியிடம் அவர் ஒருபோதும் கோபித்துக் கொண்டதில்லை. காரணம்,மோடி மீது அவருக்கு அவ்வளவு மரியாதை.

ஜெயலலிதாவைத் தொடர்பு கொண்ட மோடி அவரிடம், உங்களுக்கு மக்கள் கொடுத்துள்ள ஆதரவை நீங்கள் வீணடித்து வருகிறீர்கள். ஆட்சியில் முழுமையாக ஈடுபட முடியாத நிலையில் உள்ளீர்கள். முதலில் சசிகலாவையும், அவரைச் சார்ந்தவர்களையும் வெளியேற்றுங்கள்.

உங்களது மாநிலத்தை முழுமையாக புதுப்பித்துக் கட்டமையுங்கள். குஜராத்தைப் போல தமிழகத்தையும் உருவாக்குங்கள். ஆட்சி நடைமுறைகளில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வாருங்கள். தொழில் முதலீடுகளுக்கு சாதகமானதாக தமிழகத்தை மாற்றுங்கள். அதிகாரவர்க்கத்தால் நடைபெறும் தாமதங்களை முழுமையாக தவிர்க்கும் வகையில் உங்களது கையில் அத்தனை அதிகாரங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று நீண்ட அறிவுரை கூறியுள்ளார்.

இதைக் கேட்ட பிறகுதான் சசிகலா குடும்பத்தாரை ஒதுக்கி வைக்க ஜெயலலிதா முடிவெடுத்ததாக சொல்கிறார்கள்.

No comments: