கரூர்-புலியூர் ரோட்டில் இலவச பிரசவம்

கரூர்-திருச்சி ரோட்டில் புலியூர் பகுதியில் செல்லும் போது கர்ப்பிணி பெண்களுக்கு "பிரசவம் இலவசம்' என்ற அளவில் உள்ள குண்டும், குழியுமாக உள்ள ரோடுகளால் பொதுமக்கள், பெண்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். கரூர் அருகே உள்ள புலியூர் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் தனியார் சிமெண்ட் ஆலை, இன்ஜியரிங் மற்றும் தனியார் பள்ளிகள் அதிகளவில் உள்ளன. மேலு ம், கரூர் நகரையொட்டி உள்ள புலியூர் டவுன் பஞ்சாயத்தில் நகரப்பகுதிகளுக்கு இணையாக தற்போது ஏராளமான குடியிருப்புகளும் உருவாகி வருகின்றன.

மேலும், காவிரியாற்று பகுதிகளில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் பகுதிகளுக்கு செல்லும் லாரிகளும், புலியூர் வழியாக சென்று வருகின்றன. இதனால் கரூர்-திருச்சி ரோட்டில் புலியூர் ரோட்டில் 24 மணி நேரமும் போக்குவரத்து பிஸியாக இருக்கும் நிலை உள்ளது.

இந்நிலையில் புலியூர் பகுதிகளில் உள்ள ரோடுகள் பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக பொதுமக்களை வாட்டி வதைக்கும் நிலையில் உள்ளது. குறிப்பாக டூவீலரில் செல்லுகிறவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி படுகாயமடைந்து வருகின்றனர். கரூரில் இருந்து திருச்சி உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளுக்கு பஸ்சில் செல்லும் பயணிகள், புலியூர் பகுதியில் செல்லும் போது, சீட்டில் எழுந்து நின்று கொள்ளும் அளவுக்கு பெரிய அளவிலான குழிகள் உள்ளன.

இதனால் மணல் லாரிகளின் "ஆக்சில் சாப்ட்' அடிக்கடி கட்டாகி நடுரோட்டில் நின்று விடுகிறது. அந்த நேரத்தில் புலியூர் பகுதியில் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குண்டும், குழியுமான சாலையால் கரூரில் இருந்து புலியூர் பகுதியை கடந்து செல்ல சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகிறது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலால் திருச்சி செல்லும் பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், புலியூர் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அதிகளவு வேகத்தடைகளால் அடிக்கடி வாகன ஓட்டிகள் கீழே விழுகின்றனர்.

பிரசவங்களுக்கு மருத்துவமனைக்கு செல்வதுக்கு பதிலாக, கரூர்-புலியூர் ரோட்டில் கர்ப்பிணிப் பெண்களை ஆட்டோ, கார்களில் அழைத்து சென்றாலே, இலவசமாக சுகப்பிரசவம் நடந்து விடும் என்று, குண்டும், குழியுமான சாலைகள் குறித்து பொதுமக்கள் பேசுமளவுக்கு, அந்த சாலையின் நிலை மோசமாக உள்ளது. எனவே, போக்குவரத்து நெரிசல் மிகுந்த புலியூர் பகுதியில் திருச்சி ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தேவையான இடங்களில் மட்டும் வேகத்தடைகள் அமைத்து குண்டும், குழியுமாக உள்ள ரோடுகளை சீரமைக்க உடனடியாக கரூர் மாவட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது எடுப்பது அவசியம். இல்லையேல் அதிகளவில் விபத்து நடக்கும் பகுதியாக புலியூர் ரோடு மாறி விடும் என்பதில் ஐயமில்லை.

No comments: