1,743 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்வேலைவாய்ப்பு அலுவலக மாநில பதிவு மூப்பின் அடிப்டையில் 1,743 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதற்கான பதிவு மூப்புப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நவம்பர் 14-ம் தேதி முதல் விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பூர்த்திசெய்த விண்ணப்பங்களை மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் வழங்குவதற்கான கடைசி தேதி நவம்பர் 23.


வரும் டிசம்பருக்குள் பணி நியமனத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுப்படி, தொடக்கப் பள்ளிகள், இடைநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்களைத் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


அதன் விவரம்:


மொத்தம் தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை 1,743 ஆகும். அவர்களுக்கான சம்பள விகிதம் ரூ.5,200 - ரூ.20,200 ஆகும்.இந்தப் பணியிடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 26.5 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவீதமும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 15 சதவீதமும், அருந்ததியினருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடும், பழங்குடியினருக்கு 1 சதவீதமும் இடஒதுக்கீடு இருக்கும். பொதுப்பிரிவில் 31 சதவீதம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அனைத்துப் பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் பணியிடங்களில் குறைந்தது 50 சதவீதம் பேர் பெண்களாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அதை புதுப்பித்திருக்க வேண்டும். ஒரு ஆசிரியர் பணியிடத்துக்கு 5 பேர் என்ற வீதத்தில் பதிவு மூப்பு தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.nic.in  இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் பார்வையிடலாம்.


பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்கள் இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பதிவு மூப்புத் தகுதி இருந்தும் பட்டியலில் யாரேனும் விடுபட்டிருந்தால், அவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து அவர்களது பதிவு மூ ப்பு தகுதிச் சான்றிதழையும், ஜாதி சான்றிதழையும் பெற வேண்டும்.
மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் அவற்றைக் காண்பித்து விண்ணப்பங்களைப் பெறலாம்.
விண்ணப்பதாரர்கள் 01.07.2011 தேதியின்படி 57 வயதுக்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.


விண்ணப்பங்கள் நவம்பர் 23-ம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பர் 23-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் வழங்கப்பட வேண்டும்.
பதிவு மூப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் மூலம் பணியமர்த்தப்படுவார்கள். ஒரு மாவட்டத்தில் பணியமர்த்தப்படும் இடைநிலை ஆசிரியர்கள், வேறு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் கோர முடியாது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


டிசம்பருக்குள் நியமனம்: இந்த 1,743 இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கும் பணி டிசம்பருக்குள் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பிறகே, நடப்பு கல்வியாண்டுக்கான ஆசிரியர் நியமன பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நடப்புக் கல்வியாண்டில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதுதவிர 20 ஆயிரத்துக்கும் அதிகமான சிறப்பு ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

No comments: