கல்யாணத்தை நிறுத்த சீப்பை ஒளித்து வைத்த சன் நியூஸ்

மாறன் சகோதர்களின் இல்லங்கள், சன் குழும அலுவலகங்கள், அவர்களோடு தொடர்புள்ள அப்பல்லோ குழும செயல்தலைவர் சுனிதா ரெட்டியின் வீடுகளில் சோதனை… இவை எதுவுமே சன் குழுமத்தின் எந்தச் சேனலிலும் இன்று கடைசி வரை காட்டப்படவே இல்லை!
அதை விட கொடுமை, தயாநிதி மாறன் வீடு, சன்டிவி அலுவலகம், கலாநிதி வீடுகளில் சோதனை நடந்த போது, அவர்களின் பிரதான செய்திச் சேனலான சன் நியூஸில் மார்பகப் புற்றுநோயைத் தடுப்பது குறித்து விலாவாரியாக பேசிக் கொண்டிருந்தார்கள் டாக்டரும் டெலிபோன் நோயாளிகளும்!
ஆக மாறன் சகோதரர்கள் மீடியாவை தங்கள் கைக்குள் வைத்திருப்பது எதற்காக என்பது மீண்டும் ஒரு முறை தெளிவாகியுள்ளது.
ஜெயா டிவி மட்டுமென்ன யோக்கியமா… ஜெயலலிதாவுக்கு எதிரான எந்த செய்தியையாவது போட்டிருக்கிறார்களா? என்று கேட்கலாம். ஜெயா டிவி அவருடைய ‘பர்சனல் ப்ளாக்’ மாதிரி ஆகிவிட்டது.  எனவே அதைப்பற்றிப் பேசுவது வீண்.
ஆனால் சன் குழும சேனல்கள் முற்றிலும் தொழில்முறையில் இயங்குபவை. மக்களுக்கான பொது சேனல்கள் என பிரகடனப்படுத்திக் கொண்டு களத்தில் இறங்கி முதலிடத்தைப் பிடித்துள்ளன. முன்பெல்லாம் டிவி அல்லது செய்தி என்றாலே தூர்தர்ஷன்தான். ஆனால் தமிழகத்தில் செய்தி என்றாலே ‘சன் டிவியைப் போடு’ எனும் அளவுக்கு மாறிவிட்டது.
மக்களின் இந்த நம்பிக்கையை தெரிந்தே தகர்த்துவிட்டார்கள் மாறன்கள். ஒரு நடுநிலையான அல்லது தொழில்முறை ஊடகத்தில் அனைத்துத் தரப்பு செய்தியும் இடம்பெற்றாக வேண்டும். அதுதான் ஊடக தர்மம். ஆரம்பத்தில் சன் டிவி, தினகரன் பத்திரிகையின் கிடுகிடு உயர்வைப் பார்த்து, ஒரு தமிழனின் வளர்ச்சியாக நினைத்து பெருமிதப்பட்டவர்கள் ஏராளம்.
இந்தியாவைப் பொறுத்தவரை, 10.10.11அன்று  நடந்த முக்கிய நிகழ்வாக மாறன் சகோதரர்களின் வீடு அலுவலக ரெய்டு முக்கியத்துவம் பெற்றது. ஆனால் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சாதித்துவிட்டது சன் டிவி (சிபிஐ வெறுங்கையோடு போனதால், அப்படியே விட்டுவிட்டார்களோ!) செய்திகள் மக்களுக்குத்தானே தவிர, இவர்களே வாசித்து இவர்களே கேட்டு திருப்திப்பட்டுக் கொள்ள அல்ல. கல்யாணத்தை நிறுத்த சீப்பை ஒளித்து வைத்த கதைதான்!
தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்டபோது, தங்கள் உறவினரான அழகிரிக்கு எதிராக எந்த அளவு கீழிறங்க முடியுமோ அவ்வளவு மோசமாக செய்திகளை வெளியிட்டன இவர்களின் குழும பத்திரிகைகள். ஆனால் இவர்களுக்குள் சமாதானமாகிவிட்டதும், அந்த விஷயத்தையே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். மூன்று அப்பாவிகளை அவர்களின் மதுரை அலுவலகத்துக்கு நரபலி கொடுத்ததாக எடுத்துக் கொண்டார்கள் போலிருக்கிறது.
தனக்கு பாதிப்பு என்றதும் குய்யோ முறையோ என கூப்பாடு போடுவதும், அந்தப் பிரச்சினையே தன்னால்தான் என்று தெரிந்துவிட்டால் கமுக்கமாக இருப்பதும்… சன் குழும சாம்ராஜ்யம் பெரிதாய் விரிந்துவிட்டாலும், தனிச்சுற்றுக்கு விடப்பட்ட ‘பூமாலை’ வீடியோ பத்திரிகை நடத்தும் நினைப்பிலேயே இன்னமும் இருக்கிறார்கள் மாறன் சகோதரர்கள்!
courtesy.envazhi

No comments: