துபாயின் சாதனையும் வேதனையும்


வேதனை
கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டுவந்த 2 இந்தியர்களுக்கு வெவ்வேறு குற்றச் செயல்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது.


 ஐக்கிய அரபு சிற்றரசு நாட்டின் நீதிமன்றம் இத் தீர்ப்பை விதித்தது. 2009-ம் ஆண்டு நடைபெற்ற இச் சம்பவத்தில், போட்டிக் குழுவைச் சேர்ந்த 2 இந்தியர்களை மற்றொரு கள்ளச் சாராய கோஷ்டி கடத்திச் சென்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி அடித்து உதைத்து சித்திரவதை செய்து இறுதியில் கொன்று எங்கோ புதைத்துவிட்டது என்று அரசுத் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.


 கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்ட இரண்டு கோஷ்டிகளிலுமே இந்தியர்கள் இருந்துள்ளனர். இச் சம்பவத்தில் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு வயது 20 முதல் 30 வரைதான் ஆகிறது. குடிபோதையில் இச் செயல்களை அவர்கள் செய்துள்ளனர்.
 முதலில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஒரு எதிரிக்குத்தான் மரண தண்டனை விதித்தார். அரசுத்தரப்பு மேல் முறையீடு செய்ததால் வழக்கில் மறுவிசாரணை நடந்தது.
 அதன் பிறகே இச் செயலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு மரண தண்டனையும் 2 பேருக்கு 15 ஆண்டுகள் சிறைவாசமும் 9 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.


 சிறை வாசம் விதிக்கப்பட்டவர்கள் தண்டனைக் காலம் முடிந்ததும் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுவர்.கொலை செய்யப்பட்டவர்கள், கொலை செய்ததாகக் கூறப்படுவோர் பெயர்களை நீதிமன்றம் வெளியிடவில்லை.


********************
சாதனை


 பணித் திறன் குறைந்த வேலைகளுக்கான ரோபோக்களைத் தயாரிக்க துபையைச் சேர்ந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. அபுதாபியில் உள்ள ராயல் குழும நிறுவனம் ஆள் உயரத்திலான ரோபோக்களைத் தயாரிக்க உள்ளது. மாதத்துக்கு 12 ரோபோக்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ராயல் குழுமத்தின் அங்கமான பார்சிலோனாவைச் சேர்ந்த பிஏஎல் ரோபாட்டிக்ஸ் இது தொடர்பான ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வந்தது. இதன் விளைவாக வர்த்தக ரீதியில் மனித உயரத்திலான ரோபோக்களை உருவாக்கியுள்ளது.


 இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்நிறுவனம் "ரீம்' எனப்படும் 1.65 மீட்டர் உயரமுள்ள ரோபோக்களை அறிமுகப்படுத்தியது. இந்த ரோபோக்கள் மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது. இந்த ரோபோவில் தாமாக செயல்படும் "நேவிகேஷன் சிஸ்டம்' உள்ளது. "டச் ஸ்கிரீன்' உள்ளது. எத்தகைய தரையிலும் செயல்படக்கூடியது. இதனால் திறமை தேவைப்படாத பணியாளர்களுக்குப் பதிலாக இதைப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் சரக்குகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்ல பயன்படுத்தலாம். சமீபத்தில் அபுதாபியில் நடைபெற்ற தேசிய கண்காட்சியில் இந்த ரோபோவின் செயல்பாடு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து 20 ரோபோக்களுக்கு உடனடியாக முன் பதிவு செய்யப்பட்டது. இப்போது இத்தகைய ரோபோக்களை தயாரிக்கும் பணியில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாதத்துக்கு 12 ரோபோக்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இந்த ஆலையின் உற்பத்தித் திறன் உயர்த்தப்படும் என்று நிறுவனத்தின் சந்தைப்பிரிவு மேலாளர் ஜோரியென் குய்ஜ் தெரிவித்தார்.


 இப்போது இந்நிறுவனம் தயாரிக்கும் ரோபோக்கள், வணிக வளாகங்கள், கண்காட்சி மையங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அடுத்த கட்டமாக மருத்துவமனைகள், விமான நிலையங்களில் பயன்படுத்தும் அளவுக்கு இதன் செயல்பாட்டை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 இதில் லித்தியம் பேட்டரி இருப்பதால் ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் இது 8 மணி நேரம் வரை செயல்படும். ஒரு ரோபோவின் விலை 2,69,157 டாலர். இந்திய மதிப்பில் ரூ. 1.44 கோடி. இத்தகைய ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும். ஆள் பற்றாக்குறை நிலவும் நாடுகளுக்கு இத்தகைய ரோபோக்கள் வரப்பிரசாதமாகும்.

No comments: