பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’



ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பனை மரங்களைப் பாதுகாக்க இயக்கம் நடத்திவருகிறது 'பசுமைத் தூய்மை அமைப்பு’. மேற்கு மண்டலத்தில் கைத்தமலை, சிவன்மலை, சென்னிமலை, ஜல்லிப்பட்டி, செஞ்சேரிமலை, நரசிபுரம், பவானி ஆகிய இடங்களில் 1 லட்சத்து 33 ஆயிரம் பனை மரங்களை நட்டுவருகின்றனர் இந்த அமைப்பின் தன்னார்வத் தொண்டர்கள்.
''பனை மரம் என்பது விலை மதிப்பான ஒரு பொக்கிஷம். ஒரு வளர்ந்த பனை மரத்தில் இருந்து, பனைப் பால், நுங்கு, பனை ஓலை, கருப்பட்டி என்று எவ்வளவோ பயன்கள் நமக்குக் கிடைக்குது. ஆனா, ஆயிரம் ரெண்டாயிரத்துக்காக சர்வ சாதாரணமா பனை மரங்களை வெட்டி, செங்கல் சூளைகளுக்கு வித்துடுறாங்க'' என்று தொடங்கினார் பசுமைத் தூய்மை அமைப்பின் இயக்குநர் செந்தில்குமார்.



''2004-ல் சுனாமி வந்தபோது கடற்கரை ஓரம் இருந்த தென்னை உள்ளிட்ட பெரிய மரங்கள் எல்லாம்கூட வேரோடு பெயர்ந்து வீழ்ந்துபோயின. ஆனால், ஒரு பனை மரம்கூட விழவில்லை. கடற்கரை ஓரங்களில் நிறையப் பனை மரங்களை நட்டாலே போதும். சுனாமி போன்ற பேராபத்துகள் வந்தால், மிகப் பெரிய அரணாக பனை மரங்கள் இருக்கும். இந்தியாவில் எட்டு கோடிப் பனை மரங்கள் இருக்கு. அதில் ஐந்து கோடிப் பனை மரங்கள் தமிழகத்தின் விருதுநகர், நாகப்பட்டினம் பகுதிகளில்தான் இருக்கு.

கொங்கு மண்டலத்தில் பனை மரங்கள் குறைவு. அதனால் பனை மரங்களை நிறைய வளர்க்கணும்னு முடிவு செஞ்சோம். தமிழர்களை உலக அளவில் தலை நிமிரவெச்ச உலகப் பொதுமறை நமக்குக் கிடைச்சிருக்குன்னா, அதுக்குக் காரணம் பனை ஓலைதான். கல்வெட்டு, பனை ஓலை ரெண்டைத் தவிர, வேறு எதில் எழுதப்பட்டு இருந்தாலும் திருக்குறள் அழிஞ்சுபோயிருக்கும். அதனால், 1,330 திருக்குறள்கள் மாதிரி 100 மடங்கு அதிகமா அதாவது, ஒரு லட்சத்து 33 ஆயிரம் பனை மரக் கன்றுகளை நடலாம்னு முடிவுசெஞ்சு, பல இடங்களில் இருந்தும் பனை விதைகளை வாங்கி நட்டுக்கிட்டு இருக்கோம்'' என்றார்.

இந்த இயக்கத்துக்கு உதவியாக இருப்பவர் கா.இரா.முத்துச்சாமி. இவர் 40 ஆண்டுகளாகப் பனை மரம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருபவர்.

''பனம் பால், தாய்ப் பாலுக்கு நிகரானது. கோடைக் காலத்தில் உடல் சூட்டைக் குறைக்கச்சிறந்த உணவு நுங்கு. பனை ஓலைகளில் கட்டப்படும் வீடுகள் கோடைக் காலத்தில் குளிர்ச்சியாகவும் குளிர் காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருக்கும். பல நன்மைகளைத் தருகிற பனை மர வளர்ப்பை அரசு ஊக்கப்படுத்தினால், நம் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லலாம்.

இன்னிக்கு பனை மரம் மட்டும் இல்லாமல், அந்த மரம் ஏறும் ஆட்களும் இல்லாமப் போயிட்டாங்க. நிலைமை இப்படியே தொடர்ந்தால், நாளை பனை மரத்தைப் படத்தில் மட்டுமே பார்க்க முடியும்!'' என்கிறார் முத்துச்சாமி கவலையுடன்!.

thx.vikatan

Post a Comment

0 Comments