பிரான்ஸ் புடவைகள் இந்திய சந்தையில் விற்பனை

அதிக விலைகொண்ட உயர்தர ஆபரணப் பைகள், சால்வைகள் போன்றவற்றை உருவாக்கிவரும் ஹெர்ம்ஸ் நிறுவனம், பிரான்சில் உருவாக்கப்பட்ட புடவைகளை இந்தியாவில் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது.


விலைகூடிய அதியுயர் ரகப் பொருட்களின் மீது இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஆர்வம் அதிகரித்துவரும் சூழ்நிலையை அது பயன்படுத்திக்கொள்ள முயல்கிறது.மொத்தத்தில் 28 வகைப் புடவைகளை ஹெர்ம்ஸ் அறிமுகப்படுத்துகிறது.


இப்புடவைகள் ஒவ்வொன்றும் ஆறாயிரம் முதல் எட்டாயிரம் டாலர்கள் வரை - அதாவது கிட்டத்தட்ட மூன்று லட்சம் முதல் நான்கு லட்சம் இந்திய ரூபாய் வரையில் விலையுடையவை.பிரஞ்சு நிறுவனமான ஹெர்ம்ஸ், ஏற்கனவே விற்றுவருகின்ற பிரபல பட்டுச் சால்வைகள் பலவற்றில் பாரம்பரிய இந்தியப் பட்டை அது பயன்படுத்தி வந்துள்ளது.


தற்போது அதே பட்டைக் கொண்டு ஐந்தரை மீட்டர் நீளம் கொண்ட இந்தியப் புடவைகளையும் உற்பத்தி செய்வது பொருத்தமாகத்தான் இருக்கும் எனக் கருதி இந்தப் புடவைகளை அந்நிறுவனம் உற்பத்தி செய்ய ஆரம்பித்துள்ளது.இந்தியா மீது தங்களுக்குள்ள மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமான இந்த புதிய உற்பத்திப் பொருட்களை தாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளதாக இந்த நிறுவனம் கூறுகிறது.


சொகுசுப் பொருட்களுக்கு இந்தியாவில் கிராக்கி அதிகரிக்கிறது வெளிநாட்டு சொகுசுப் பொருட்கள், விலைகூடிய பொருட்கள் எல்லாவற்றுக்கும் இந்திய நுகர்வோர் இடையில் ஆர்வம் அதிகரித்துவருகிறது.இந்தியாவில் புதிதாக பெருஞ்செல்வம் ஈட்டியுள்ளவர்கள் தங்களுடைய செழிப்பையும் தன்னம்பிக்கையும் வெளிக்காட்டிக்கொள்ளும் ஒரு வழியாக இந்த உயர்ரகப் பொருட்களைப் பார்க்கின்றனர்.


இந்தியச் சந்தையில் மேற்கத்திய ஆடைகளை விற்க முயலுவதைக் காட்டிலும் இந்திய ஆடையான புடவையையே அவர்களிடம் விற்பதென்பது சிறப்பான வியாபார யுக்தி என்று விற்பனை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


இந்தியாவின் நடுத்தர வர்க்கங்களிலும் செல்வச் செழிப்புமிக்க வட்டங்களிலும் அன்றாடம் அணிவதற்கு பெண்கள் மேற்குலக ஆடைகளை விரும்புகிறார்கள் என்றாலும், கல்யாணம், விழா என்று வரும்போது பெண்கள் புடவைகளைத்தான் விரும்பி அணிகிறார்கள்.
ஹெர்ம்ஸ் போலவே செல்வந்தர்களுக்கான பொருட்களை உற்பத்தி செய்யும் வேறுபல நிறுவனங்களும் இந்தியச் சந்தையில் காலூன்ற விரும்புகின்றன.
வெளிநாட்டுப் பொருட்களுக்கு இந்தியாவில் நாற்பது சதவீதம் வரியிலான இறக்குமதி வரி விதிக்கப்பட்டாலும், விலைகூடியப் பொருட்களுக்கு இந்தியாவில் கிராக்கி என்னவோ அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது.

Post a Comment

0 Comments