உணவு விலையுயர்வு எச்சரிக்கைஉலகளவில் உணவுப் பொருட்களின் விலை அதிகமாக உள்ளது என்றும் அது தொடர்ந்து உயரக் கூடும் எனவும் ஐக்கிய நாடுகள் கூறியுள்ளது. இதன் காரணமாக உலகெங்கும் உணவுப் பாதுகாப்பின்மை ஏற்படக் கூடும் எனவும் அது எச்சரித்துள்ளது.
ஐநாவின் மூன்று அமைப்புகள் சேர்ந்து வெளியிட்டுள்ள தமது வருடாந்திர அறிக்கையில், இறக்குமதிகளை மட்டுமே நம்பியிருக்கும், சிறிய நாடுகள் அதிலும் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகள் இந்த விடயத்தில் மிகுந்த ஆபத்துக்களை எதிர்நோக்குகின்றன என்று கூறப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு வாக்கில், உலகளவில் பசியினால் வாடுபவர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்கும் நோக்கில், தீட்டப்பட்ட புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சித் திட்டதின் இலக்குகளை எட்டுவதில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் பெரும் சவாலை ஏற்படுத்தும் எனவும் ஐ நா கூறுகிறது.
உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதி நாடான தாய்லாந்து, அங்கு ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளம் காரணமாக தனது நெல் விளைச்சல் இந்த ஆண்டு 15 சதவீத அளவுக்கு வீழ்ச்சி அடையக் கூடும் என எச்சரித்துள்ளது.
இது உணவுப் பொருட்களின் விலைகளின் மீதான அழுத்தங்களை மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: