திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி!

திருச்சி மேற்குத் தொகுதியை தக்க வைத்துக் கொண்டுள்ளது அதிமுக. அங்கு நடந்த இடைத் தேர்தலில் அதிமுகவேட்பாளர் மு.பரஞ்சோதி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்டதிமுகவின் கே. என்.நேருவை 14,608 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

திருச்சி மேற்குத் தொகுதிக்கு அக்டோபர் 13ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது. அதிமுக சார்பில் பரஞ்சோதியும், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவும் போட்டியிட்டனர். பிற முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடவும் இல்லை, யாரையும் ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ பிரசாரம் செய்யவும் இல்லை.

16 வேட்பாளர்கள் போட்டியிட்ட இத்தொகுதியில், நடந்த வாக்குப் பதிவில் 61.15 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப் பதிவுக்குப் பின்னர் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், பாதுகாப்புடன், திருச்சி-மதுரை சாலையில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டன.

காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் முதல் சுற்றிலிருந்தே அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி முன்னிலை வகித்து வந்தார். ஆரம்பத்தில் அவருக்கும், நேருவுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் போகப் போக வாக்கு வித்தியாசம் அதிகரித்தது. இதனால் ஒரு கட்டத்தில் பரஞ்சோதியின் வெற்றி உறுதியானது.

இறுதியில் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி 68 ஆயிரத்து 804 வாக்குகளைப் பெற்றார். அவருக்கு அடுத்து வந்த கே.என்.நேரு 54,196 வாக்குகளைப் பெற்றார். இதனால் 14,608 வாக்கு வித்தியாசத்தில் பரஞ்சோதி வெற்றி பெற்றார். இதன் மூலம் மீண்டும் இத்தொகுதியை அதிமுக கைப்பற்றியுள்ளது.திருச்சி மேற்கில் வெற்றி பெற்றுள்ள மு.பரஞ்சோதி கடந்த 2006ல் நடந்த தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் ஆவார். ஆனால் இந்த சட்டசபைத் தேர்தலில் அவர் தனது கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்காக தொகுதியை விட்டுக் கொடுத்தார். இதற்குப் பரிசாகத்தான் திருச்சி மேற்குத் தொகுதியில் சீட் கொடுத்து நிற்க வைத்தார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: