ரஜினி, கமல், த்ரிஷாவுக்கு கண்டனம்!!

உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்காமல் போன ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:

உள்ளாட்சி என்பது இதயம் போன்றது. மக்களுடன் நேரடி தொடர்பில் இருந்து பிரச்சினைகளை தீர்க்க கூடியது. இத்தேர்தலில் சிறப்பாக பணியாற்றக் கூடியவர்களை மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்வது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமையாகும்.

சாதாரண பிரஜைகளை விட பிரபலங்களாக இருப்பவர்கள் நிச்சயம் ஓட்டு போட்டு தங்களின் ஜனநாயக கடமைகளை ஆற்றுவது அவசியம். திரையுலகில் இருக்கும் ரஜினி, கமல், சூர்யா, கார்த்தி, ஆர்யா, திரிஷா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் தேர்தலில் ஓட்டு போடாதது வேதனை அளிக்கிறது.

திரைப்படங்களில் அரசியல்வாதிகள் தேர்தல் வாக்காளர்களின் கடமை போன்றவற்றை காட்சிப்படுத்துகின்றனர். ஓட்டு போடுவதன் அவசியத்தை வற்புறுத்துகின்றனர். மக்கள் பிரதிநிதிகளின் கடமைகளை போதிக்கின்றனர். நிஜ வாழ்க்கையிலும் நடிகர், நடிகைகள் அதுபோல் இருக்க வேண்டும். ஊருக்கு ஒரு உபதேசம், தனக்கு ஒரு உபதேசம் என்று இருக்கக்கூடாது என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நடிகர், நடிகைகள் தவறாமல் ஓட்டு அளிப்பது ரசிகர்களையும் ஜனநாயக கடமையாற்ற தூண்டுவதாக அமையும். அதை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: