மருத்துவமனையாகிறது புதிய தலைமைச் செயலகம்

"முந்தைய தி.மு.க., அரசு கட்டிய புதிய தலைமைச் செயலக கட்டடத்தில், "எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு நிகராக, பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும். அதே வளாகத்தில் கட்டப்பட்டு வரும், "பி' பிளாக் கட்டடத்தில், புதிய அரசு மருத்துவக் கல்லூரி துவக்கப்படும்'' என்று, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். சட்டசபையில், விதி 110ன் கீழ், முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
அனைத்து மக்களுக்கும், தரமான மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தவும், வசதிகளை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும், குறிப்பாக ஏழை, எளிய மக்கள், பல்வேறு நோய்களுக்கும், தரமான உயரிய சிகிச்சையை இலவசமாக பெறும் வகையில், பல துறை உயர் சிறப்பு மருத்துவமனையை (மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்) அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த மருத்துவமனை, சென்னையின் மையப் பகுதியான ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், முந்தைய தி.மு.க., அரசால், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக கட்டப்பட்ட 97 ஆயிரத்து 829 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட, "ஏ' பிளாக் கட்டடத்தில் அமைக்கப்படும்.


இந்த கட்டடம், சட்டசபை மற்றும் தலைமைச் செயலகத்தில் தற்போதுள்ள 36 துறைகளும் செயல்படுவதற்கு போதுமானதாக இல்லை. அத்துடன், பயன்படுத்தக்கூடிய இடம் மிகவும் குறைவாக இருப்பதால், அலுவலக பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இந்த கட்டடம் இல்லை. மேலும், இரு வேறு கட்டடங்களில் இருந்து தலைமைச் செயலகம் செயல்பட முடியாது. தற்போது, அரசினர் தோட்ட வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ள கட்டடம், ஏழை, எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்க, அரசு முடிவெடுத்துள்ளது. இந்த கட்டடத்தில், தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு, மருத்துவ வல்லுனர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டு, உயர்தர மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான நவீன உபகரணங்கள் வாங்கப்பட்டு, இந்த மருத்துவமனை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இந்த மருத்துவமனை, டில்லியில் உள்ள, "எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் விளங்கும். மேலும், தற்போது கட்டப்பட்டு வரும்,"பி' பிளாக் கட்டடங்களில், புதிதாக ஒரு அரசு மருத்துவக் கல்லூரி துவக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு முதல்வர் அறிவித்தார். முதல்வர், அறிவிப்பை வெளியிட்டதும், சபை உறுப்பினர்கள் கரவொலி எழுப்பி, மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். இது அடங்குவதற்கு நீண்ட நேரம் ஆனது. முதல்வர் அறிவிப்பிற்கு, சபை உறுப்பினர்கள் சார்பில், சபாநாயகர் ஜெயக்குமார் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.
இதற்குப் பின், உணவு மற்றும் கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் துவங்கி, ஒரு உறுப்பினர் பேசி முடித்த நிலையில், முதல்வர் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து, சட்டசபை கட்சித் தலைவர்கள் பேசினர்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசும்போது,"தி.மு.க., அரசு, அரக்கு மாளிகையைப் போல், புதிய தலைமைச் செயலக வளாகத்தைக் கட்டியது. எதற்கும் பயன்படாமல் இருந்த அந்த கட்டடத்தில், நவீன மருத்துவமனை அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது' என்றார். மற்ற கட்சிகளின் தலைவர்களும், முதல்வர் அறிவிப்பை வரவேற்றனர். பா.ம.க., சார்பில், அக்கட்சி உறுப்பினர் கலையரசு, முதல்வர் அறிவிப்பை வரவேற்றுப் பேசினார்.

மார்ச் 12, 2010ல் திறப்பு விழா : அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் மூடுவிழா கண்ட புதிய தலைமைச் செயலகம், முந்தைய தி.மு.க., ஆட்சியில், 450 கோடி ரூபாயில் கட்டப்பட்டது. "ஏ, பி' என, இரு பிளாக்குகளாக கட்ட திட்டமிடப்பட்டு, முதலில், "ஏ' பிளாக் வளாகம் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் 12ம் தேதி மாலை நடந்த விழாவில், புதிய சட்டசபை வளாகத்தை, பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார். அந்த விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா, அப்போதைய முதல்வர் கருணாநிதி மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த பிளாக்கில் தான், அதிநவீன மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. "பி' பிளாக் கட்டடம் தற்போது கட்டப்பட்டு வருகிறது. இதற்கும், 450 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிடப்பட உள்ளது. இந்த கட்டடப் பணிகள் முடிந்ததும், இங்கு புதிய அரசு மருத்துவக் கல்லூரி துவக்கப்படும்.

No comments: