பொருளாதார வீழ்ச்சியால் சரிந்த தன் செல்வாக்கை மீட்டெடுக்கும் யாத்திரையை தொடங்கியுள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அமெரிக்க பொருளாதார மீட்சி தொடர்பான ஆய்வு என்ற பெயரில் ஒபாமா மேற்கொண்டுள்ள இந்த பஸ் பயணத்திற்காக ரூ. 5 கோடியில் அதி நவீன வசதிகள் கொண்ட சொகுசு பஸ்சை உருவாக்கியுள்ளனர்.
அமெரிக்காவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி கண்டு வருகிறது. இதனால், அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமா கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார். சரியான திட்டமிடுதல் இல்லாத அவரது கொள்கைகளின் காரணமாகவே பொருளாதாரம் வீழ்ச்சி கண்டதாக அமெரிக்கா முழுவதும் அவர் மீது அதிருப்தி அலை வீசுகிறது.
இந்த நிலையில், தனது செல்வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்தும் வகையில் மக்களை நேரில் சந்தித்து கருத்துக்களை கேட்க அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பல மாகாணங்களில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதால், அவருக்காக நவீன பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சொகுசு வசதிகள் நிறைந்த பஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. பார்க்க நம்ம ஊர் சென்னை டூ பெங்களூர் ஆம்னி பஸ் போலத்தான் இது தெரிகிறது.
ஆனால் பக்கா பாதுகாப்பு வசதிகளுடன் இதை வடிவமைத்துள்ளனர். இந்த பஸ்சில்தான் அவர் தற்போது பயணம் மேற்கொண்டுள்ளார். முழுக்க முழுக்க கறுப்பு வண்ணத்தில் இந்த பஸ் மிளிர்கிறது. ரசாயண தாக்குதல் மற்றும் குண்டுவெடித்தால்கூட பஸ்சில் ஒரு சிறு துரும்பு கூட சேதமடையாது. புல்லட் புரூப் கொண்ட கண்ணாடி மற்றும் பாகங்களால் பஸ்சின் பாடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
டயர்களும் பஞ்சர் புரூப் தொழில்நுட்பம் கொண்டது. தவிர, பஸ்சுக்குள் சிறிய ரத்த வங்கி, கூட்ட அரங்கம், சிறிய சமையலறை, ஓய்வு அறை ஆகிய வசதிகளையும் கொண்டுள்ளது. வயர்லெஸ் டெலிபோன் மற்றும் செயற்கைகோள் தொடர்பு வசதிகளும் இருக்கிறது.
இந்த பஸ்சை கனடாவை சேர்ந்த பிரபல பஸ் பாடி பில்டிங் நிறுவனமான பிரெவோஸ்ட் வடிவமைத்துள்ளது. உள்ளலங்காரம் மற்றும் வசதிகளை ஹெம்பில் பிரதர்ஸ் கம்பெனி வடிவமைத்துள்ளது. ரூ.5 கோடி மதிப்பில் இந்த பஸ் கட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க புலனாய்வு துறையினரின் ஒரு டஜன் கார்கள் புடைசூழ அதிபர் ஒபாமா இந்த பஸ்சில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
0 Comments