இன்பச் சுற்றுலாவுக்கு பெண்களை அனுப்பி வை

"நான், காஷ்மீருக்கு இன்பச் சுற்றுலா செல்லத் திட்டமிட்டுள்ளேன்; உனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் இரு பெண்களை, என்னுடன் அனுப்பி வை' என, கோவை ஆடிட்டருக்கு, அரசு உயரதிகாரி பெயரில் தந்தி அனுப்பியதாக, கோவை, "மாஜி' உதவி நகரமைப்பு அலுவலர் நேற்று கைது செய்யப்பட்டார்.

கோவை-சத்தி ரோட்டிலுள்ள, அலமு நகரில் வசிப்பவர் பரமசிவம்; ஆடிட்டர். இவருக்கு, சென்னையில் பணியாற்றும் அரசு உயரதிகாரி ஒருவரின் பெயரில், தந்தி ஒன்று சமீபத்தில் வந்தது. அதில், "நான் வட மாநிலங்கள் மற்றும் காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளேன். என்னுடன் உங்கள் பகுதியில் வசிக்கும் இரு பெண்களை (பெயர் குறிப்பிட்டு) அனுப்பி வை' என, குறிப்பிடப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த பரமசிவம், சம்பந்தப்பட்ட அதிகாரியைத் தொடர்பு கொண்டு விசாரித்த போது, முன்விரோதம் காரணமாக, யாரோ ஒரு நபர் தந்தி அனுப்பி, இரு பெண்களையும் மன ரீதியான டார்ச்சருக்கு உள்ளாக்க முயன்றது தெரியவந்தது. இச்சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில், அலமு நகரில் வசிக்கும் மேலும் சில பெண்களுக்கு, "பழனிச்சாமி' என்ற பெயரில் கடிதங்கள் வந்தன. கடிதத்தில், அப்பகுதி பெண்கள் சிலரை, மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்தும், வேறு சில நபர்களுடன் பாலியல் தொடர்புபடுத்தியும், வாசகங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

தந்தி மற்றும் கடிதங்கள் இரண்டும், சென்னை நகரில் இருந்து வந்திருந்ததால், பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ளிட்டோர், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இவர்களது மனு, மாநகர மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், போலி பெயர்களில் தந்தி மற்றும் கடிதங்களை அனுப்பியது, அலமு நகரில் வசிக்கும் தங்கவேலு,50, என தெரியவந்தது. இவர், கோவை மாநகராட்சியில் உதவி நகரமைப்பு அலுவலராகப் பணியாற்றி, லஞ்ச முறைகேடு குற்றச்சாட்டுகளின் பேரில், "டிஸ்மிஸ்' செய்யப்பட்டவர். நேற்று காலை, கோவை அலமு நகருக்கு வந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள், தங்வேலுவை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது: கைது செய்யப்பட்டுள்ள தங்கவேலுக்கும், அலமு நகரில் வசிப்போருக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளது. தங்கவேலு, அஸ்வத் நகரில் உள்ள ரிசர்வ் சைட்டை ஆக்கிரமித்து வைத்திருந்தது தொடர்பாக, அப்பகுதி மக்கள் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து, சட்டப்படியாக நிலத்தை மீட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் வசிப்போரை பழிவாங்கும் விதமாகவும், பெண்களுக்கு மன ரீதியாக டார்ச்சர் கொடுக்கும் விதமாகவும், போலி பெயரில் தந்தி, ஆபாசக் கடிதங்களை அனுப்பியுள்ளதாக, விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் பேரில், அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 419 - ஆள் மாறாட்டம், 467 - போலி ஆவணம் தயாரித்தல், 506(2) - கொலை மிரட்டல், பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். தங்கவேலு, கோவையில் இருந்து சென்னை வந்து பிரபல ஓட்டலில் தங்கியிருந்ததற்கான சில ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளோம். இவ்வாறு, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments