நிறம் மாறும் கோவை மாநகரம்

கோவை மாவட்டத்தில் பெருகி வரும் கொலை மற்றும் நகைப்பறிப்பு சம்பவங்களால், மக்கள் அச்சத்தில் தவிக்கின்றனர்.கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில் சில சம்பவங்கள் நகைப் பறிப்பு, பணம் பறிப்பு என ஆதாயக் கொலைகளாக நடந்துள்ளன.

சில நாட்களுக்கு முன் சிங்கநல்லூரில் பதுங்கி இருந்த சோமசுந்தரம் என்பவரை சிலர் முன்பகையை தீர்க்க, வெட்டி கொலை செய்தனர்.அதேபோல சரவணம்பட்டியில் பிளஸ் 2 மாணவியிடம் நகை பறித்த 3 பேர் அவரைக் கொடூரமாகக் கொலை செய்தனர். இந்த சம்பவங்களில் சில குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும், கொலை சம்பவங்கள் குறைந்தபாடில்லை.சமீபத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் நெருங்கிய நண்பர் கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். இப்படி கொலைச் சம்பவங்கள் ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில் மறு புறம் கற்பழிப்புகளும் அதிகரித்து வருகின்றன.

அமைதியான நகராக அறியப்படும் கோவையில் இப்படி கொலை, கொள்ளை, கற்பழிப்பு என குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது கோவை மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது. கோவை மாவட்ட மக்கள், உயிர் பயத்தில் தவித்து வருகின்றனர்.இதற்கிடையே, கோவையில் பல்வேறு தொழிற்சாலைகள், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் வட இந்திய தொழிலாளர்கள் பலர் பெருமளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.தொழில் நகரமான கோவையில், வெளிமாநிலத்தை சேர்ந்த அதிகளவிலான தொழிலாளர்கள் வேலைகளில் ஈடுபடுகின்றனர். குறைந்த சம்பளம் மற்றும் கடினமான வேலைகளையும் சளைக்காமல் செய்யும் இவர்களை கம்பெனி உரிமையாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பணிக்கு நியமித்து கொள்கின்றனர். இவர்களை வேலைக்கு சேர்க்கும் ஏஜென்டுகள் அவர்களிடம் கமிஷன் வாங்கிக் கொண்டு சரியான சம்பளத்தைக் கூறாமல் வேலைக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர். இப்படி வரும் வடமாநில பணியாளர்களுக்கு வருமானம் குறையும் போதோ, அல்லது வேலையில் இருந்து நீக்கப்பட்டலோ சிலர் திருட்டு மற்றும் ஆதாய கொலை குற்றவாளிகளாக மாறிவிடுகின்றனர்.

பீகார், அசாம், ஒரிசா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள்தான் பெருமபாலும் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்கள் குற்றத்தை செய்து விட்டு சொந்த மாநிலங்களுக்கு ஓடி விடுவதால் அவர்களைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.வடமாநிலத்தவரை குற்ற சம்பவங்களில் கைது செய்தாலும், இவர்களுக்கு மொழி பிரச்சனையும் உள்ளதால், விசாரணை நடத்துவதில் போலீசாருக்கு தாமதமாகிறது.கோவையில் குற்றங்களை குறைக்க போலீசார் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் வெளி மாவட்டத்தினர் மற்றும் வெளிமாநிலத்தவரை பணியில் சேர்க்கும் போது, அவர்களை குறித்த விவரங்களை தெரிந்து வைத்திருப்பது அவசியமாகிறது. இதன்மூலம் குற்றப் பின்னணி கொண்ட நபர்களை குறித்து, விரைவில் தகவல்களை திரட்டி குற்ற சம்பவங்களை குறைக்க முடியும்.

Post a Comment

1 Comments

ஒவ்வொரு நிறுவனகளிலும் வேலைக்கு ஆட்கள் சேர்க்கும் போது, அவர்கலுடைய சரியான் விலாசத்தை வாங்கிக்கொண்டு பிறகு தான் அவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும். விழிப்புணர்வுள்ல பகிர்வுக்கு நன்றி.