அண்ணா ஹசாரே - வரலாறு


கிசன் பாபுராய் ஹசாரே என்பது இவரின் முழுப்பெயர். 1937, ஜூன் 15ல் மகாராஷ்டிராவின் அகமத்நகர் மாவட்டத்தின் ரிலேகான் சித்தி என்ற கிராமத்தில் பிறந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியிலே நிறுத்தி விட்டு "பூ' விற்கும் வேலைக்கு சென்றார். அவசர காலத்தின் போது அதிகளவில் ராணுவத்துக்கு இளைஞர்களை இந்தியா தேர்வு செய்தது. 1962ல் 25 வயதில் இந்திய ராணுவத்தில் ஹசாரே சேர்ந்தார். அங்கு டிரைவராக பணியை துவக்கினார்.

1965ல் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரின் போது பஞ்சாப் மாநில எல்லையில் இவர் பணியாற்றினார். அப்போது பாகிஸ்தான் ராணுவத்தின் பீரங்கி தாக்குதலில் நண்பரை இழந்தார். இச்சம்பவத்தை அடுத்து வாழ்க்கையின் மீது வெறுப்படைந்தார். அப்போது டில்லி ரயில்வே ஸ்டேஷனில் உள்ள ஒரு புத்தக கடையில் சுவாமி விவேகானந்தரின் "தேசத்தை தட்டியெழுப்ப இளைஞர்களை ஒன்று திரட்டுங்கள்' என்ற புத்தகத்தை படித்தார். இது இவரது வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது. மகாத்மா, வினோ பாவே போன்றவர்களின் வாழ்க்கை சரித்திரத்தை படித்தார். இதிலிருந்து ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொணடார். இதன் காரணமாக, 1978ல் 38வது வயதில் இந்திய ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். சொந்த கிராமத்துக்கு சென்ற ஹசாரே, கிராம மக்கள் வறுமை, சுகாதாரமின்மை போன்ற அடிப்படை வசதிகள் இன்றி கஷ்டப்படுவதை கண்டு அதற்காக அகிம்சை வழியில் போராட்டத்தில் இறங்கினார். கள்ளச்சாராயத்துக்கு எதிராக சக கிராமத்து இளைஞர்களை திரட்டி, போராட்டம் நடத்தினார். தானிய வங்கி ஒன்றை துவங்கி, வசதி படைத்தவர்களிடமிருந்து தானியத்தை பெற்று, ஏழைகளுக்கு வழங்கினார். விவசாயம், பால் உற்பத்தி, கல்வி, நீர்நிலைகளில் ரிலேகான் கிராமம் தன்னிறைவு பெற்றதற்காக மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வெற்றி கண்டார்.

முக்கிய போராட்டங்கள்:

"கரப்ஷன்' என்ற ஆங்கில வார்த்தை லஞ்சம் வாங்குவதை மட்டும் குறிப்பிடுவதில்லை. நேர்மை தவறுதல், முறைகேடு போன்றவற்றையும் குறிக்கிறது. இதற்கு எதிராக போராட்டத்தை ஹசாரே துவங்கினார்.
* ரிலேகான் கிராமத்தில் மர வியாபாரிகளுக்கும், வன அலுவலர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. ஹசாரேயின் போராட்டத்தால் வன அலுவர்கள் இட மாற்றம் செய்யப்பட்டனர்.
* 1995 - 96ல் சிவசேனா - பா.ஜ., ஆட்சியின் போது ஊழலில் ஈடுபட்ட 2 அமைச்சர்களை பணி
நீக்கம் செய்ய போராடி வெற்றி கண்டார்.
* 2003ல் தேசியவாத காங்., அமைச்சர்கள் நான்கு பேர் மீது ஊழல் குற்றம் சாட்டினார். இதற்காக உண்ணா
விரதம் இருந்தார். இறுதியில் அந்த அமைச்சர்களையும் பதவி விலகச் செய்தார்.
* மகராஷ்டிரா அரசு, வலுவான தகவல் உரிமை பெறும் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார்.
* வலுவான ஜன லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய வலியுறுத்தில், ஏப்.,5 ல் டில்லியில் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினார். மத்திய அரசு இவருடன் பேச்சுவார்த்தை நடத்தி, மசோதாவை தாக்கல் செய்ய சம்மதித்தது. இதையடுத்து, ஏப்., 9ல் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
* மத்திய அரசு பார்லிமென்ட்டில் தாக்கல் செய்ய உள்ள லோக்பால் மசோதாவில் பிரதமர், நீதிபதி உள்ளிட்டவர்களையும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி, நேற்று முதல் மீண்டும் உண்ணாவிரத்தை துவங்கினார்.

ராம்லீலா மைதானம் : மதம் சார்ந்த விழாக்கள், அரசியல் கட்சிகளின் பேரணி மற்றும் கூட்டங்கள், கலைநிகழ்ச்சிகள் என மக்கள் கூட்டம் கண்ட ராம்லீலா மைதானம், சமீப காலமாக ஊழலுக்கு எதிரான கூட்டங்கள் மற்றும் பேரணிகளால் நிரம்பி வழிகிறது. புதுடில்லி ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள, ராம்லீலா மைதானம், டில்லியில் உள்ள பெரிய மைதானங்களில் ஒன்று. ஒரே நேரத்தில் 88 ஆயிரம் பேர் அமரலாம். ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்காக இம்மைதானத்தை சுத்தம் செய்யும் பணியில் 400 ஊழியர்கள் ஈடுபட்டனர். 500 டன் குப்பைகள் இங்கிருந்து அகற்றப்பட்டன. கலைக்கப்பட்ட உண்ணாவிரதம்: கடந்த ஜூன் 4ம் தேதி, யோகா குரு பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிராக இம்மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தார். 10 ஆயிரம் பேர் இதில் கலந்து கொண்டனர். பின் போலீசார் மேற்கொண்ட அடக்கு முறையால் உண்ணாவிரதப் போராட்டம் கலைக்கப்பட்டது.

நிறுத்தப்படுமா தசரா கொண்டாட்டம்?: பாரதிய முக்தி மோர்சா மற்றும் ராம்லீலா கமிட்டியை சேர்ந்த உறுப்பினர் தசரா கொண்டாட்டத்திற்காக செப்., 1 முதல் இம்மைதானத்தை பதிவு செய்து வைத்துள்ளனர். ஹசாரே 15 நாட்களுக்கு உண்ணாவிரதம் இருக்கும் நிலை ஏற்படுமானால், தசரா கொண்டாட்டம் தடை செய்யப்படுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

No comments: