நில அபகரிப்பு தடுப்பு பிரிவை' ஏற்படுத்த, தமிழக அரசு உத்தரவு


தனியார், கோவில் நிலங்களை அபகரித்தோர் மீது, நடவடிக்கை எடுக்க, மாவட்டந்தோறும், "நில அபகரிப்பு தடுப்பு பிரிவை' ஏற்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க., ஆட்சியில், உரிமையாளர்களை மிரட்டி தனியார், கோவில் நிலங்களை, ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் அபகரித்தனர். இக்கும்பலுக்கு தி.மு.க.,வினரும் துணை நின்றனர். சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, "நில அபகரிப்பு கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்.இதற்காக, நில அபகரிப்பில் ஈடுபட்ட தி.மு.க.,வினர், ரியல் எஸ்டேட்காரர்கள் குறித்த விவரத்தை, உளவுத்துறை மூலம் அரசு சேகரித்தது. இந்த அறிக்கையை பார்த்த முதல்வர் ஜெ., இதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டார்.அதன்படி, மாவட்ட வாரியாக, 1 கோடி ரூபாய்க்கு மேல் நடந்த நில பரிமாற்ற விவரங்களை போலீசார் சேகரித்தனர். அவற்றில், உரிமையாளரை மிரட்டியதாக போலீஸ் ஸ்டேஷன்களுக்கு புகார் வந்திருந்தால், அதன்மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக, மாவட்டங்களில், "நில அபகரிப்பு தடுப்பு பிரிவு' உடனே ஏற்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "டி.எஸ்.பி., தலைமையில் இயங்கும் இப்பிரிவிற்கு, மாவட்ட அளவில் தி.மு.க., ஆட்சியில் ஸ்டேஷன்களுக்கு வந்த நில அபகரிப்பு புகார்கள் பற்றிய விவரம் சேகரிக்கப்படும். புகார் தந்தவர்களிடம் விசாரணை நடத்தி, மிரட்டியோர் யாராக இருந்தாலும், அவர்களை கைது செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது' என்றார்.

சேலத்தில் 60 வழக்குகள்: "மேற்கு மண்டலத்தில் உள்ள சேலத்தில் மட்டும், 60 நில மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது' என, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., வன்னியபெருமாள் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், கோபி போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வுப்பணிக்காக வந்த மேற்கு மண்டல ஐ.ஜி., வன்னியபெருமாள், நிருபர்களிடம் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில் தான், அதிகளவில் வாகன விபத்துகளும், உயிரிழப்பும் ஏற்படுகிறது. விபத்து நடக்கும் இடங்களில், எந்த மாதிரியான வாகனங்களால், எந்த சூழலில் விபத்து நடக்கிறது என்பதை, போக்குவரத்து போலீசார் இனி கண்காணிப்பர்.ஈரோடு மாவட்டத்தில், மூன்று நிலமோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், இரண்டு வழக்கில், தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வழக்கில் விசாரணை நடக்கிறது. மேற்கு மண்டலத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் தான், அதிகளவாக, 60 நில மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

என்னிடம் நேரடியாக நிலமோசடி குறித்த புகார்கள் அதிகம் வருகிறது. கோபி பகுதியில், ஒரு பெண்ணிடம், ஐந்து ஏக்கர் நிலம் மோசடி செய்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடக்கிறது.ஈரோடு மாவட்டத்தில், ஒரு கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களது செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.கோவை மண்டல அளவில் கோவை, சேலம், திருப்பூரில் குற்றவழக்குகள் அதிகம் பதிவாகி உள்ளன. ஈரோடு, திருப்பூர் மாவட்ட எல்லைப்பகுதியில் அதிகம் வழிப்பறி நடந்துள்ளது. வழிப்பறி சம்பவத்தை தடுக்க முனைப்புடன் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.இவ்வாறு வன்னியபெருமாள் கூறினார்.

Post a Comment

0 Comments