வறட்டு கவுரவ வாழ்க்கையினால் ஊழல் பெருகுகிறது.

by 11:04 AM 0 comments

"மக்களிடம் உள்ள நீதி, நேர்மை குறைபாடு, வறட்டு கவுரவ வாழ்க்கையினால் ஊழல் பெருகுகிறது. ஊழலை ஒழிக்க, மக்கள் எளிமையாக வாழ பழக வேண்டும்,'' என்று, தமிழக தலைமை தேர்தல் முன்னாள் அதிகாரி நரேஷ் குப்தா பேசினார்.

கரூரில், ஊழல் எதிர்ப்பு இயக்கம் துவக்க விழா நேற்று நடந்தது. தமிழக தலைமை தேர்தல் முன்னாள் அதிகாரி நரேஷ் குப்தா, இயக்கத்தைத் துவக்கி வைத்து பேசியதாவது:பல ஆண்டுகளாக லோக்பால் மசோதா நிறைவேற்றப்படாமல் இருந்தது. அன்னா ஹசாரே உண்ணாவிரதத்துக்குப் பிறகு, லோக்பால் மசோதா வரைவு கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. கமிட்டியில் இடம்பெற்றுள்ளோர் மீது, சில குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது. எப்படி இருந்தாலும் ஊழலை எதிர்க்கும் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது, பிரதமரின் கையில் தான் இருக்கிறது.மத்திய அரசு அளவில் மட்டுமல்லாது, மாநிலங்களிலும் அடிமட்டம் முதல் மேல்மட்டம் வரை லோக்பால் அமல்படுத்த வேண்டும். அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா மட்டுமல்லாது ஆப்ரிக்கா போன்ற ஏழை நாடுகளிலும் ஊழல் உள்ளது.

டெண்டர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஊழல் இருக்கும் அரசு, நல்ல அரசாக இருக்காது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அரசின் பல துறைகளில் செயல்படுத்துவது இல்லை. ஒளிவு மறைவற்ற வெளிப்படையான ஆட்சி நிர்வாகம் நடக்க வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் எவ்வளவு நாட்களுக்குள் பதில் கிடைக்கும் என்பதை தெளிவாக அரசு அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.இந்திய பிரதமரே, "ஊழல், புற்றுநோய் போல் பரவியுள்ளது' என்கிறார். முன்னாள் பிரதமர் இந்திரா, "இந்தியா மட்டுமல்லாது உலகமெங்கும் ஊழல் பரவியுள்ளது' என்றார்.

ஊழலுக்கு எல்லைகள் கிடையாது. அதனால், ஊழலை ஒன்றும் செய்ய முடியாது என்று நினைக்கக் கூடாது. வறுமை உள்ள இடத்தில் தான் ஊழல் அதிகமாக உள்ளது.பணக்காரர்கள் பணத்தைக் கொண்டு தங்களது காரியங்களை சாதித்துக் கொள்கின்றனர். பணம் இல்லாததால், ஏழைகள் தான் ஊழலால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.எல்லா இடங்களிலும் ஊழலும், வறுமையும் கைகோர்த்து நடக்கிறது. மக்களிடம் உள்ள நீதி, நேர்மை குறைபாடு, வறட்டு கவுரவ வாழ்க்கையினால் ஊழல் பெருகுகிறது. ஊழலை ஒழிக்க, மக்கள் எளிமையாக வாழ பழக வேண்டும்.

ஊழலை வேரறுக்க, பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு ஊழலுக்கு எதிரான போதனையை வீட்டில் இருந்து துவங்க வேண்டும். அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் என்று குறிப்பிட்ட நபர்களை குறை சொல்லக் கூடாது.ஊழலுக்கு எதிரான மாற்றம் உங்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்பட வேண்டும். நமக்குள் கட்டுப்பாட்டை வளர்க்க வேண்டுமே தவிர, யாரையும் மிரட்டக் கூடாது.இவ்வாறு நரேஷ் குப்தா பேசினார்.

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments: