2011-அதிமுக கூட்டணி அமோக வெற்றி (the Mummy Returns)

by 10:33 AM 0 comments
அதிமுக தலைமையிலான கூட்டணி தமிழக சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்கிறார்.அ.தி.மு.க. தான் போட்டியிட்ட 160 தொகுதிகளில் 135 இடங்களில் வெற்றி பெற்றது. மேலும் 16 இடங்களில் முன்னிலையில் உள்ளது.அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவையும் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. புதிய தமிழகம் கட்சி போட்டியிட்ட இரண்டு தொகுதிகளையும் வென்றுள்ளது. இந்தக் கூட்டணி ஏறத்தாழ 200 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.அதே நேரத்தில், தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் படுதோல்வியைச் சந்தித்துள்ளன. திமுக 119 இடங்களில் போட்டியிட்டு 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அந்தக் கட்சியின் மூத்த அமைச்சர்களான க.அன்பழகன், வீரபாண்டி எஸ்.ஆறுமுகம், க.பொன்முடி, பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.


தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு ஏப்ரல் 13-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. மே 13-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டன. காலை 10 மணி அளவில் அதிமுக கூட்டணி வெற்றி உறுதியானது.அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட அந்தக் கூட்டணியின் முன்னணி தலைவர்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளனர்.அ.தி.மு.க. 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் தனித்து ஆட்சி அமைக்கிறது. தேமுதிக போட்டியிட்ட 41 தொகுதிகளில் 27 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 12 தொகுதிகளில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வெற்றி பெற்று 4 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிட்டு 7 தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது. 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
கருணாநிதி வெற்றி:திமுக தலைவர் கருணாநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி ஆகிய ஒரு சிலரைத் தவிர அமைச்சர்கள் அனைவரும் தோல்வியடைந்துள்ளனர்.
கருணாநிதிக்கு இணையான அனுபவம் கொண்ட மூத்த தலைவரும் திமுக பொதுச் செயலாளருமான க. அன்பழகன் வில்லிவாக்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜே.சி.டி. பிரபாகரனிடம் 10,782 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
மூத்த அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, நேரு, பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.
கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் வெற்றி கடைசிவரை இழுபறியாகவே இருந்தது.
இந்தத் தோல்வி திமுக தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் படுதோல்வியைச் சந்தித்துள்ளன.காங்கிரஸ் கட்சி மொத்தம் 63 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது.
30 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 2 தொகுதிகளில் வெற்றி பெற்று ஒரு தொகுதியில் முன்னணியில் இருந்தது.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளது.திமுக கூட்டணி கட்சித் தலைவர்களான தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு, பாமக தலைவர் ஜி.கே. மணி ஆகியோரும் தோல்வியடைந்துள்ளனர். மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஞானசேகரன், பீட்டர் அல்போன்ஸ், யசோதா ஆகியோர் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.
தகர்ந்தது தி.மு.க. கோட்டை: திமுக கோட்டை என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வந்த சென்னை நகரம் இப்போது அதிமுக கோட்டையாக மாறியுள்ளது. சென்னை நகரில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தவிர மற்ற எல்லா தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது.கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றுபெற்றுள்ளது.
இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சனிக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதைத் தொடர்ந்து புதிய எம்.எல்.ஏ.க்கள் பட்டியலுடன் மாநில ஆளுநர் எஸ்.எஸ். பர்னாலாவைச் சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.
புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வெற்றிச் செய்தியை அடுத்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜெயலலிதா, ஒன்றரை ஆண்டுக்குள் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.வாக்கு எண்ணிக்கை தாமதம்: பல புதிய விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டதால் கடந்த தேர்தலை ஒப்பிடும்போது வாக்குகளை எண்ணுவதற்கு காலதாமதமானது. இதனால் இரவு 9.30 மணி அளவில்தான் 201 தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments: