பேஸ்புக், ஓர்குட் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரை ஏமாற்றும் வேலைகள்


பேஸ்புக், ஓர்குட் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரை இலக்குவைத்து நடத்தப்படும் ஏமாற்று வேலைகள் பெரிய அளவில் அதிகரித்து இருப்பதாக இணைய பாதுகாப்பு தொடர்பில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.

ஃபிஷிங் என்று சொல்லப்படும் ஏமாற்று வேலைகள் அதிகரித்துவருவதை கணினி மென்பொருள் உற்பத்திப் பெருநிறுவனமான மைக்ரோசாஃப்ட் நடத்தியுள்ள ஆய்வு காட்டுகிறது. ஃபிஷிங் என்பது பெரும்பாலும் நண்பர்களிடம் இருந்து வருகின்ற அழைப்பு போலவோ அல்லது தகவல் போலவோ அமைந்திருக்கும். ஆனால் இவை உண்மையில் இணையத்தில் குற்றச்செயல்களை செய்ய முயலும் ஆட்களிடம் இருந்து வருபவை. வலைத்தளத்தைப் பயன்படுத்துவோரை ஏமாற்றி அவர்களிடம் இருந்து முக்கியமான பிரத்யேகத் தகவல்களைப் பெறுவது இந்த அழைப்பு மற்றும் தகவல்களின் நோக்கமாகும்.

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் எல்லாம் இப்போது மிகவும் பிரபலம் அடைந்து ஏராளமனவர்களால் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தமது கைவரிசையைக் காட்ட இந்த இணையத்தளங்களை அதிகம் இலக்கு வைக்கிறார்கள் என்பதில் ஆச்சரியம் இல்லை.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆறு மாதத்துக்கு ஒரு முறை நடத்துகின்ற இணையப் பாதுகாப்பு பற்றிய ஆய்வு கடைசியாக வெளியிட்டுள்ள அறிக்கை இந்தப் பிரச்சினையையின் தீவிரத்தன்மையை எடுத்துரைப்பதாய் அமைந்துள்ளது. அறுபது கோடி கணினிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பார்க்கையில் கடந்த ஒருஆண்டில் மட்டும் சமூக வலைத்தளங்கள் வழியாக நடத்தப்படுகின்ற ஃபிஷிங் மோசடி வேலை முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 12 மடங்கு அதிகரித்துள்ளது.

ஃபிஷிங் எமாற்று வேலை என்பது, பொதுவாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது நாம் அறிந்த ஒருவர், அதாவது நமது நண்பர் அல்லது உடன் பணியாற்றுபவர் ஒருவரிடம் இருந்து வருகின்ற செய்திபோல வரும். நண்பர் கேட்பதுபோல நம்முடைய பிரத்யேகத் தகவல்களை, தனிநபர் தகவல்களைக் கேட்கும். அப்படி நாம் தகவல்களைக் கொடுத்தால் அது கிரிமினல்கள் கைகளில் கிடைத்துவிடும். அதனைப் பயன்படுத்தி அவர்கள் வங்கிக் கணக்கு, இணைய வர்த்தக கணக்கு போன்றவற்றில் மோசடி வேலைகளைச் செய்து பணம் திருடுவார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் இப்படியான ஃபிஷிங் மோசடி மின் அஞ்சல்களில் பெரிய அளவில் நடந்துவந்தது. ஆனால் இப்போது இத்தகைய மோசடிகள் பெருமளவு சமூக வலைத்தளங்களை இலக்குவைத்து நடத்தப்படுகிறது.

ஒரு ஆண்டுக்கு முன்புவரை சமூக வலைத்தளங்களில் நடந்த பல விதமான ஏமாற்று வேலைகளில் பத்து சதவீதத்துக்கும் குறைவாகவேதான் இந்த ஃபிஷிங் மோசடி வேலைகள் நடந்ததாக ஆய்வுகள் காட்டியிருந்தன. ஆனால் மொத்த மோசடிகளில் 85 சதவீதத்தை தொடும் அளவுக்கு சென்ற ஆண்டு கடைசியில் இவ்வகையான மோசடிகள் அபரிமிதமாக அதிகரித்து விட்டுள்ளன என்று இந்த புதிய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

Post a Comment

0 Comments