இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவியிலிருந்து கிர்ஸ்டன் விலகினார்

by 5:20 PM 1 comments


இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்து வந்த தென் ஆப்பிரிக்காவின் கேரி கிர்ஸ்டன் இன்று முறைப்படி தனது பொறுப்பை விட்டு விலகினார்.

இந்தியா வில் எனது வேலை முடிந்து விட்டது. இந்திய வீரர்கள் செய்துள்ள சாதனைக்காக பெருமைப்படுகிறேன். இப்போது நான் கிளம்பும் நேரம் வந்து விட்டது. எனது குடும்பத்தினருக்காக நான் நேரத்தை செலவிட வேண்டியதுள்ளது. எனவே இனியும் என்னால் இங்கு நீண்ட காலம் தங்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு எத்தனையோ பயிற்சியாளர்கள் வந்து போய் விட்டனர். ஆனால் அத்தனை பேருமே ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கினார்களே தவிர இந்திய அணியை சாதனைக்குள்ளாக்க முடியவில்லை. ஆனால் கிர்ஸ்டன் சத்தம் போடாமல், இந்திய அணியை சாதிக்க வைத்து விட்டார்.

உலகக் கோப்பைப் போட்டியுடன் கிர்ஸ்டனுனான ஒப்பந்தம் முடிவதால், அவர் தொடர்ந்து நீடிப்பாரா என்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்தியா உலகக் கோப்பையை வென்றுள்ளதால், கிர்ஸ்டன் தொடர்ந்து பயிற்சியாளராக நீடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.

ஆனால் தான் தொடர்ந்து நீடிக்கப் போவதில்லை என்று கிர்ஸ்டன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் அளித்த ஒரு பேட்டியில், எனது வேலை முடிந்து விட்டது. நான் தொடர வேண்டும் என்று சச்சின் , யுவராஜ் உள்ளிட்ட பலரும் கேட்டுக் கொண்டனர். ஆனால் என்னால் முடியாது. காரணம், எனது குடும்பத்தினர் நான் அவர்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதை நான் நிராகரிக்க முடியாது.

எனது குடும்பத்தினருடன் நான் நேரத்தை செலவிட விரும்புவதால் தொடர்ந்து வீரர்களுடன் இருக்க வாய்ப்பில்லை. அத்துடன் வேலையும் முடிந்து விட்டது. எனவே கிளம்பும் நேரம் வந்து விட்டதாகவே உணர்கிறேன்.

நான் தொடர்நது நீடிக்க வேண்டும் என்று அனைவரும் கோருவது என்னை நெகிழ வைத்துள்ளது. இதை எனக்குக் கிடைத்த கெளரவமாக உணர்கிறேன். தற்போது 3 ஆண்டு பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டேன். எனக்கு இரு மகன்கள் உள்ளனர். தந்தையுடன் இருக்க அவர்கள் விரும்புகின்றனர். அதை நான் புறக்கணித்து விட முடியாது என்றார் கிர்ஸ்டன்.

இந்த நிலையில் இன்று முறைப்படி தனது பதவியிலிருந்து விலகினார் கிர்ஸ்டன். தனது விலகல் குறித்து அவர் கூறுகையில், நான் ஒரு வெளிநாட்டுக்காரனாக இருந்தாலும் கூட என்னை தங்களில் ஒருவராக வரித்துக் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியினருக்கும், இந்திய மக்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகும். அவர்கள் காட்டிய அன்பிலும், மரியாதையிலும் நான் நெகிழ்ந்து போயுள்ளேன்.

கடந்த மூன்று ஆண்டு காலம் நான் பணியாற்றியது மிகப் பெரிய அனுபவம். இந்தியர்கள் என்னை ஏற்றுக் கொண்டது அதை விட மிகப் பெரிய அனுபவம். இந்திய மக்கள் கிரி்ககெட்டை மிகவும் நேசிக்கிறார்கள். இந்திய ரசிகர்களிடமிருந்து வீரர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு மிகவும் அபாரமானது, சிறப்பானது.

இந்தியா நிச்சயம் மிக அழகிய நாடு. இங்கு எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர். அது பெருமை தருகிறது.

எனது ஊருக்கு நான் திரும்புகிறேன். அங்கு எனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன். இப்போதைக்கு வேறு எந்த வேலையையும் நான் ஒப்புக் கொள்ளவில்லை. இருப்பினும் எதிர்காலத்தில் ஏதாவது ஒன்றில் நான் கட்டாயம் ஈடுபடுவேன்.

எனது வாழ்க்கையில் இந்திய அணிக்கு பயிற்சி கொடுத்ததுதான் மறக்க முடியாத அனுபவமாகும். இதை என்றுமே நான் மறக்க மாட்டேன்.

நடந்து முடிந்த உலகக் கோப்பைப் போட்டி மறக்க முடியாதது. இந்தப் போட்டியில் ஒவ்வொரு ஆட்டத்திலும் இந்தியா கடுமையாக உழைத்தது. சிறப்பாக ஆடியது. எதுவுமே எங்களுக்கு எளிதாக இருக்கவில்லை. எந்த ஒரு வீரரும் தனக்கென இதில் ஆடவில்லை என்பதுதான் முக்கியமானது. ஒட்டுமொத்த அணியாக அவர்கள் ஆடினார்கள். இதனால்தான் கோப்பை அவர்களது கையில் உள்ளது. இந்திய வீரர்கள் விளையாடிய விதம் என்னை வியப்படைய வைத்துள்ளது, பெருமை தந்துள்ளது.

ஒவ்வொரு வீரரும் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற துடிப்புடன் ஆடினர். ஒருவருக்கொருவர் ஆதரவாக, உறுதுணையாக இருந்தனர்.

நான் நிச்சயம் மீண்டும் இந்தியாவுக்கு வருவேன். ஐபிஎல்லில் பயிற்சியாளராக செயல்படுவது என்பது அபாரமானது. நல்ல ஒரு வாய்ப்பும் கூட. இருப்பினும் இப்போதைக்கு நான் எந்த வேலையையும் ஒப்புக் கொள்ளவில்லை.

இந்திய கிரிக்கெட் தற்போது ஆரோக்கியமான நிலையில் உள்ளது. வேகப்பந்து வீச்சு மட்டுமே சற்று கவலைக்குரியதாக உள்ளது. இருப்பினும் அது புதிதல்ல. மற்றபடி பார்த்தால் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பானதாகவே உள்ளது.

இந்திய அணி தொடர்ந்து சிறப்பாக செயல்படத் தேவையான அடித்தளம் போடப்பட்டு விட்டது. இதை அவர்கள் தொடர்ந்து கடைப்பிடித்தால் நிச்சயம் மிகச் சிறந்த அணியாக அவர்கள் தொடருவார்கள். புதிதாக வரப் போகும் பயிற்சியாளர் அந்தக் கோணத்தில் வழி நடத்திச் செல்வார் என்று எதிர்பார்க்கிறேன்.

இந்திய அணியில் விராத் கோலி, சுரேஷ் ரெய்னா, சட்டேஸ்வர் பூஜாரா ஆகியோருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் தயாராகி விட்டார். பிரகாசமான எதிர்காலம் அவருக்கு உள்ளது. பெரிய போட்டிகளில் சிறப்பாகவே ஆடியுள்ளார்.

சுரேஷ் ரெய்னாவும் அற்புதமான வீரர். மிக் சிறப்பாக ஆடுகிறார். அதேபோல பூஜாராவும் டெஸ்ட் போட்டிகளில் நல்ல எதிர்காலத்தைக் கொண்டுள்ளார். பிரக்யான் ஓஜாவும் சிறந்த பந்து வீச்சாளரே. இருப்பினும் தான் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் அறிந்து கொள்ள வேண்டும்.

இந்திய அணி உடனடியாக நல்ல வேகப்பந்து வீச்சாளரைக் கண்டறிவது அவசியம். ஒன்று அல்லது 2 வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியாவுக்கு நிச்சயம் தேவை.

முனாப் படேல் சிறப்பாக பந்து வீசுகிறார். ஆசிஷ் நெஹ்ராவும் சிறப்பாக இருக்கிறார். ஜாகிர்கான் நீண்ட காலமாக முன்னணியில் இருக்கிறார். இவர்களுக்கு உதவியாக இன்னும் ஒன்று அல்லது 2 வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை.

ஸ்ரீசாந்த் நல்ல திறமைசாலிதான். இருப்பினும் ஸ்திரத்தன்மையை அவர் கற்றுக் கொள்ள வேண்டும். அது அவசியம். அடுத்த கட்டத்துக்கு மாற ஸ்ரீசாந்த் முயல வேண்டும். இல்லாவிட்டால் வீணடிக்கப்பட்ட திறமைசாலியாக அவர் மாறி விட அவரே காரணமாக அமைந்து விடுவார் என்றார் கிர்ஸ்டன்.

இந்திய அணியினருக்கு அவர்களுக்கிடையே இருந்த பூசலை, ஈகோவை நீக்கி, உள்ளுக்குள் மறைந்திருந்த திறமைகளையும் உணர வைத்து பெருமைக்குரியவர் கிர்ஸ்டன். அந்த வகையில் இந்திய அணியினருக்கு கிர்ஸ்டனின் சேவை மிகப் பெரியதே.

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

1 comments:

ரேவா said...

உள்ளுக்குள் மறைந்திருந்த திறமைகளையும் உணர வைத்து பெருமைக்குரியவர் கிர்ஸ்டன். அந்த வகையில் இந்திய அணியினருக்கு கிர்ஸ்டனின் சேவை மிகப் பெரியதே...

கண்டிப்பாக அவர் சேவை பாராட்டுக்குரியதே... நல்ல பதிவு நண்பரே...வாழ்த்துக்கள்...