ஆறு ஆண்டுகளில் 100 மில்லியன் டாலர்

பிரபல ஐடி நிறுவனமான மைன்ட் ட்ரீயின் இணை நிறுவனமும் தலைவருமான அசோக் சூதா, அந்த நிறுவனத்திலிருந்து விலகிய ஐந்தே நாட்களில் புதிய நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

ஹேப்பியஸ்ட் மைன்ட்ஸ் என்னும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக அசோக் சூதா பதவி ஏற்றுள்ளார்.அடுத்த ஆறு ஆண்டுகளில் 100 மில்லியன் டாலர் வருவாயை ஈட்டுவதே இந்த நிறுவனத்தின் முதன்மை இலக்கு என்று அறிவித்துள்ளார்.இந்த புதிய நிறுவனம் அனைத்து வித ஐடி பணிகள், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகள், சாப்ட்வேர் தொழில்நுட்பப் பணிகள், கணிணி தொழில் நுட்பத்துக்கான உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் ஆலோசனைப் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்பத் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய நிறுவனம் இந்த ஹேப்பியஸ்ட் மைன்ட்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.ஹேப்பியஸ்ட் மைன்ட்ஸ் நிறுவனத்தை அறிவித்ததிலிருந்து 100-க்கும் மேற்பட்ட மைன்ட் ட்ரீ பணியாளர்கள் இந்த புதிய நிறுவனத்தில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனராம். மேலும், மைன்ட் ட்ரீயில் உள்ள தனது பங்குகளை குறிப்பிட்ட அளவு விலக்கிக் கொள்ளவும், புதிய நிறுவனத்துக்கு ஆரம்ப முதலீடு பெறவும் திட்டமிட்டுள்ளதாக அசோக் சூதா தெரிவித்தார்.

இதற்கிடையே, சூதா விலகியதால் மைன்ட் ட்ரீயின் இப்போதைய தலைவராக ஆல்பர்ட் ஹிரானிமஸ் பொறுப்பேற்றுள்ளார்.

Post a Comment

0 Comments