"குடிகாரத் தமிழ்நாடு" என்று எழுத கஷ்டமா இருக்கு -குவார்ட்டர்களுக்கு கொலை-திருந்துமா தமிழ்நாடு?

இந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையம் மீது உண்மையிலேயே கடும் கோபத்திலிருக்கிறார்கள் குடிமகன்கள். இரண்டு நாட்கள் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதால் மொத்தமாக மது வாங்கி ஸ்டாக் வைக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு நேற்று ஆளாகிவிட்டதால் கோபம் இது!

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி நாளை வரை டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்படுவதால், மது பாட்டில்களை வாங்கி வைத்துக்கொள்வதற்காக, குடிமகன்கள் அலைமோதினார்கள். எந்த டாஸ்மாக் கடையைப் பார்த்தாலும் அப்படியொரு கூட்டம். இதனால் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.60 கோடிக்கும் அதிகமாக மது பாட்டில்கள் விற்றுத் தீர்ந்தன. நாகர்கோயில் அருகே மதுவாங்குவதில் நடந்த தகராறில் இளைஞர் ஒருவரும் கொல்லப்பட்டார். தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. தேர்தலின்போது அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுப்பதற்ககாக நேற்று மாலை 5 மணியுடன் மதுக்கடைகள் மூடப்பட்டன. இன்றும், தேர்தல் நாளான நாளையும் மூடப்பட்டிருக்கும்.தேர்தலுக்கு மறுநாள் காலை 10 மணிக்குத்தான் மீண்டும் கடைகள் திறக்கப்படும்.இரண்டு நாளைக்கு மது அருந்தக் கூடாது என்பதற்காகத்தான் இந்த உத்தரவே பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இவர்களோ மொத்தமாக வாங்கிப் போய் ஸ்டாக் வைத்துக் குடிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மொத்தம் 6 ஆயிரத்து 700 மதுக்கடைகள் உள்ளன. கடந்த சனிக்கிழமை மட்டும் இந்த கடைகளில் ஏறத்தாழ 2 லட்சம் கேஸ் (24 லட்சம்) மது பாட்டில்கள் விற்பனையாகி இருந்தன. இது மது விற்பனையில் புதிய சாதனையாகும்.
சாக்கு மூட்டைகளில் வாங்கிச் சென்ற குடிமகன்கள்...நேற்று மாலை முதல் கடைகள் மூடப்படும் என்பதால் காலையில் இருந்தே மதுக் கடைகள் முன்பு குடிமகன்கள் கூட்டம் அலைமோதியது. முதலில் ஒருவருக்கு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் மதுபாட்டில்கள் வழங்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

ஆனால், அப்படி உச்சவரம்பு எதுவும் விதிக்கப்படவில்லை என்று தெரிந்ததும், குடிமகன்களும் அரசியல் கட்சி பிரமுகர்களும் கடைகள் மூடப்படும் நாட்களுக்கு சேமித்து வைப்பதற்காக பெரிய பை, அட்டைப் பெட்டிகள் மற்றும் சாக்குமூட்டைகளில் மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர். அந்த அளவுக்கு கடைகளுக்கு தேவையான 'சரக்கு'களும் சப்ளை செய்யப்பட்டு இருந்தன.

கட்டுக்கடங்காத கூட்டம்

வழக்கமாகவே விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் மதுக்கடை கவுண்டர்களில் அதிக கூட்டம் காரணமாக தள்ளு முள்ளு நடைபெறுவது வழக்கம். எனவே நேற்று மாலை கடைகளை மூடுவதற்கு முன்பு கட்டுக்கடங்காத அளவில் மதுப் பிரியர்கள் குவிந்தனர். கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் போலீசார் தலையிட்டு (ப்ரெண்ட்லியாகத்தான்!)கூட்டத்தை சமாளிக்க வேண்டிய அளவுக்கு கடைசி நேர விற்பனை இருந்தது.சில கடைகளில் முன்கூட்டியே சரக்குகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன. பல கடைகளில் கடை ஊழியர்களுக்கும் குடிகாரர்களுக்கும் காரசார வாக்குவாதமே நடைபெற்றது. இந்த தகராறு காரணமாக சில கடைகளில் 5 மணிக்குப் பிறகும் கடையில் கூடியிருந்தவர்களுக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன.

ரூ.60 கோடிக்கு மேல் விற்பனை..

வழக்கமாக தமிழ்நாடு முழுவதும் சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.50 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் விற்பனையாகும். நேற்றைய விற்பனை பற்றி இன்னும் முழுமையாக கணக்கிடப்படவில்லை என்றாலும், 25 முதல் 30 சதவீதம் விற்பனை அதிகரித்து இருக்கும் என்று கருதப்படுவதால் நேற்று ஒரே நாளில் ரூ.60 கோடி முதல் 65 கோடி ரூபாய் வரை விற்பனை ஆகி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் போலீஸ் பாதுகாப்பு

சென்னையில் நேற்று மாலை 4 மணி அளவிலேயே பல கடைகளில் சரக்குகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டதால் திண்டாடிய மதுப்பிரியர்கள் மற்ற கடைகளை தேடி அலைந்தனர். சென்னை திருவல்லிக்கேணி, மைலாப்பூர், தியாகராயநகர், கீழ்ப்பாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் நேற்று மதியமே சரக்குகள் விற்று தீர்ந்து விட்டன.

நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலைமோதியபடியே இருந்தது. ஆங்காங்கே டாஸ்மாக் கடைகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கள்ள மார்க்கெட்டில்

குடி மகன்களை அதிகமாக மதுபாட்டில்களை அள்ளிச் சென்றவர்கள் கள்ளமார்க்கெட்டில் அதை விற்பவர்கள்தான். கடை அடைத்திருக்கும் 2 நாட்களில் கள்ள மார்க்கெட்டில் இரட்டை விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்யக்கூடும் என்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கள்ள வியாபாரிகள் நேற்று இரவு முதல் தங்கள் வீடுகளில் வைத்து மிகவும் தெரிந்த நண்பர்களுக்கு மட்டும் சரக்கு சப்ளை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

டாஸ்மாக் நெரிசலில் சிக்கி இளைஞர் பலி

இதற்கிடையே மது வாங்கும்போது நடந்த தகராறில் இளைஞர் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டார்.

குமரி மாவட்டம் குலசேகரம் பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் மாகின். இவரது மகன் சதாம் உசேன் (வயது19). இவர் அந்த பகுதியில் உள்ள பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை 3.30 மணியளவில் குலசேகரம் சந்தை அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது வாங்க சென்றார்.

அப்போது, பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த ஜெயசிங் (40) என்பவர் மது வாங்க அதே கடைக்கு வந்தார். இவர் ஒரு இறைச்சி வியாபாரி.

தேர்தலை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு நேற்று மாலை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், நேற்று மாலை டாஸ்மாக் கடையில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இதில் வாலிபர் சதாம் உசேனும், ஜெயசிங்கும் முண்டியடித்து கொண்டு, மது வாங்க முயன்றனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதில் ஆத்திரமடைந்த ஜெயசிங் கையில் இருந்த கத்தியால் சதாம்உசேனின் காது அருகே குத்தியதாக கூறப்படுகிறது. கத்தி ஆழமாக பதிந்ததால் சதாம்உசேன், வலியால் துடித்து மயங்கி விழுந்தார். உடனே, அருகில் நின்றவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே ஜெயசிங்கை சுற்றி பிடிக்க பொதுமக்கள் முயன்றனர். ஆனால், அவர் கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்.

தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவானீஸ்வரி சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இது குறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிணத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பினர். தப்பிஓடிய ஜெயசிங்கை தேடி வருகிறார்கள்.

Post a Comment

0 Comments