ரஜினி-கமலுடன் என்னை ஒப்பிட்டுப் பேசாதீர்கள்!


ரஜினி, கமல் என்ற சிகரங்களுக்கு முன் நான் மிக மிக சிறியவன். என்னை அவர்களுடன் ஒப்பிட வேண்டாம், பத்திரிகையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கன்னட திரையுலகில் முக்கிய நடிகராகத் திகழ்பவர் சுதீப். இவர் நடித்து இயக்கி வெளிவந்த 'கெம்பே கவுடா' கர்நாடகத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் படம் வெளியான பிறகு, ஒரு தனி பாடலை ஷூட் செய்து படத்தில் இணைத்தார். இந்தப் பாடலில் அவர் எட்டு கெட்டப்புகளில் நடித்துள்ளார்.பாட்ஷா படத்தில் ஒரே பாடலில் 13 வேடங்களில் நடித்திருப்பார் ரஜினி. அதேபோல சிவாஜியில் 4 வித ஹேர் ஸ்டைல்கள் செய்திருந்தார். கமல் தசாவதாரத்தில் 10 வேடங்களில் நடித்தார். மைக்கேல் மதனகாமராஜனில் ஒரே பாடலில் நான்கு வேடங்களில் நடித்திருப்பார். எனவே ரஜினி, கமலுக்கு அடுத்து ஒரு பாடலில் அதிக வேடங்களில் நடித்தவர் சுதீப்தான் என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. ரசிகர்களும் ரஜினி - கமலுடன் சுதீப்பையும் இணைத்து போஸ்டர்கள் அடிக்க, உடனடியாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் சுதீப்."ரஜினி, கமல் இருவரும் திரையுலகில் சாதனையாளர்கள். இரு பெரும் சிகரங்கள். நான் அவர்களுக்கு முன் மிகவும் சிறியவன். எனவே அவர்களுடன் என்னை ஒப்பிடுவது தவறு. அந்த சாதனையாளர்களை அவமதிப்பது போன்றது. எனவே என்மீதுள்ள அன்பில் இந்த தவறு செய்பவர்கள் இனி அதை நிறுத்திக் கொள்ள வேண்டும்," என்றார்.

No comments: