டாஸ்மாக் கடைகள், எந்நேரமும் மூடப்படலாம் ?

வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள், மதுபானம் வாங்கிக் கொடுப்பதை தடுக்கும் வகையில், "டாஸ்மாக்' கடைகள், எந்நேரமும் மூடப்படலாம் என, தகவல் பரவியுள்ளதால், ஊழியர்கள் கலக்கமடைந்துள்ளனர். தமிழகத்தில், தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கும், ஏப்ரல் 13ம் தேதிக்கு முன், 10 நாள், "டாஸ்மாக்' கடைகளை மூடும்படி தேர்தல் கமிஷன் கடந்த வாரமே அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியது. இந்நிலையில், கடை மூடும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தால், அது பதுக்கலுக்கு வழி வகுத்து விடும் என, அதிகாரிகள் எதுவும் கூறாமல் மவுனம் சாதித்து வருகின்றனர்.தமிழகம் முழுவதும், 7,434 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இந்த கடைகள் மூலம், ஆண்டுக்கு சராசரியாக, 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. தேர்தல் ஓட்டுப் பதிவு அமைதியாக நடக்கும் வகையில், டாஸ்மாக் கடைகள், தேர்தல் பிரசாரம் முடியும் நாளில் மூடப்படுவது வழக்கம். தற்போது, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, தேர்தல் கமிஷன் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதிரடி சோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது. தேர்தல் ஓட்டுப் பதிவை முன்னிட்டு, ஏப்ரல் 10ல் மாநில எல்லைகளை சீல் வைத்து கடும் சோதனைகள் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது. தேர்தல் அமைதியாக நடைபெறவும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாதவாறும், டாஸ்மாக் கடைகள், இரண்டு நாட்களுக்கு முன், (ஏப்., 11ம் தேதி) மூடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்து தகவல்கள் ஊழியர்கள் மத்தியிலும் பரவியது.இந்நிலையில், கடை மூடப்படும் தேதி அறிவிக்கப்பட்டால், பதுக்கல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அரசியல் கட்சிகள் மொத்தமாக சரக்குகளை கொள்முதல் செய்வர். சரக்குகளை வழங்க மறுக்கும் ஊழியர்கள் மீது தாக்குதல் சம்பவங்களும் நடக்கக் கூடும் என, அதிகாரிகளுக்கு ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் நலனை கருத்தில் கொண்டு, "டாஸ்மாக்' கடைகளை எவ்வித முன் அறிவிப்பும் இன்றி அதிகாரிகள் மூட முடிவு செய்துள்ளனர். ஓட்டுப் பதிவுக்கு ஒரு வாரத்துக்கு முன், அதாவது, ஏப்ரல் 5ம் தேதி மாலையில், கடைகள் அனைத்தையும் அதிகாரிகளே அதிரடியாக சீல் வைக்க முடிவு செய்துள்ளனர். இந்த உத்தேச தேதிக்கு முன்னதாக கடைகளை மூடவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால், ஊழியர்கள் கலக்கமடைந்துள்ளனர். "டாஸ்மாக்' கடைகள் மட்டுமின்றி அதனுடன் இணைந்து செயல்படும் பார்கள், லைசென்ஸ் பெற்ற மதுபான பார்களையும் மூட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.அதிகாரிகளின் திட்டத்தின்படி, கடைகள் மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டு, அனைத்து சாவிகளும் மாவட்ட மேலாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. கடையின் பாதுகாப்பு கருதி, ஒவ்வொரு கடைக்கும் ஊழியர்களில் ஒருவர், போலீசாரையும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

No comments: