இந்திய மக்கள் தொகை 121 கோடி

இந்திய மக்கள் தொகை கடந்த பத்தாண்டுகளில் சுமார் 18 கோடி அதிகரித்து, தற்போது நாட்டின் மொத்த மக்கள் தொகை 121 கோடியை எட்டியிருக்கிறது என்று நாட்டில் தற்போது எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஆரம்பக்கட்ட புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் இந்தியர்கள்.

ஆனால் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து எப்போதைய கணக்கெடுப்பிலும் இல்லாதவாறு, மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் மந்தமாகி இருக்கிறது என்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இந்தக் கணக்கெடுப்பு இந்திய அரசு எதிர்கொள்ளும் சவால்களின் அளவையும், வெற்றிகளையும் தோல்விகளையும், காட்டுகிறது.

கடந்த பத்தாண்டுகளில், இந்திய மக்கள் தொகை, பிரேசிலின் மொத்த மக்கள் தொகை அளவுக்கு அதிகரித்துள்ளது. மேலும் இந்தியா 2030ம் ஆண்டு வாக்கில் சீனாவையும் முந்திக்கொண்டு, உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

இந்தியா மேலும் செல்வந்த நாடாகிக்கொண்டிருக்கும் போதே, அதன் பிறப்பு விகதும் குறைந்துள்ளது.மக்களின் கல்வியறிவு விகிதமும் மேம்பட்டுள்ளது.

ஆயினும் இந்தியர்கள் பலர் இன்னும் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளையே பெறவேண்டும் என்று பலமாக விரும்புவது கவலைக்குரிய செய்தியாகவே இருக்கிறது. இந்தப் போக்கு நாடெங்கிலுமே ஏறக்குறைய இருக்கிறது.

பெண் கருக்கலைப்பு, பெண் சிசுக்கொலை போன்றவைகளுக்கு எதிராக இயக்கங்கள் நடத்தியும், கர்ப்பத்தில் இருக்கும் சிசு ஆணா பெண்ணா என்பதை அறிந்துகொள்ள நடத்தப்படும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் போன்றவைகளை சட்டவிரோதமாக்கியும்கூட இந்தப் போக்கு நீடிக்கிறது.

ஆறு வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகள் விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகள் என்ற அளவிற்கு வீழ்ந்துள்ளது.

அரசு அதிகாரிகள், இந்த விஷயத்தில் தங்களது கொள்கைகள் தோல்வியடைந்து கொண்டிருப்பதாக ஒப்புக்கொண்டு, அவைகளை மறு பரீசீலனை செய்வோம் என்று கூறுகிறார்கள்.

Post a Comment

0 Comments