சீனாவில் மன நோயாளர்கள்

சீனாவின் வடமேற்கில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் தொழிற்சாலை ஒன்றில் அடிமைகள் போன்று நடத்தப்பட்டு வேலை வாங்கப்பட்டு வந்துள்ளனர் என்று வந்துள்ள தகவல்கள் தொடர்பில் அந்நாட்டின் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களை தொண்டு நிறுவனம் ஒன்று அத்தொழிற்சாலையிடம் விலைக்கு விற்றிருப்பதாய்த் தெரிகிறது. அத்தொழிலாளிகளுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் மிகக் கேவலமான சூழல்களில் வாழ்ந்துவந்துள்ளனர் என்றும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அடிமைகள் போன்றதொரு வாழ்க்கையையே இந்த மனநலம் பாதிக்கப்பட்ட தொழிலாளிகள் வாந்துவந்திருக்கின்றனர். அவர்கள் செய்த வேலைக்கு சம்பளம் இன்றியும், செய்யும் வேலைக்கு ஏற்றதுபோன்ற பாதுகாப்பான ஆடைகள் இன்றியும், வருடக்கணக்கில் குளிக்கக்கூட வழியின்றியும் இவர்கள் இருந்துவந்துள்ளனர் என்றும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தொழிற்சாலை முதலாளியின் நாய் சாப்பிட்ட அதே சாப்பாட்டைத்தான் இத்தொழிலாளிகளும் சாப்பிட்டு வந்ததாகத் தெரிகிறது.

இந்த அவல நிலையில் இருந்து தப்பிச்செல்ல முயன்றபோது தன்னைப் பிடித்து கண்மூடித்தனமாக அடித்து உதைத்திருந்தார்கள் என்றும் ஒரு தொழிலாளி கூறுகிறார்.மனநலம் பாதிக்கப்பட்டு சிச்சுவான் பிராந்தியத்தில் திரிந்துகொண்டிருந்த இந்நபர்களை தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்துவதாகக் கூறிக்கொண்ட நபர் ஒருவர் பிடித்துச் சென்று நாட்டின் வடமேற்கிலுள்ள ஜின் ஜியாங் மாகாணத்தில் கட்டுமானத் தொழில்துறைக்கு பொருட்களை உற்பத்திச் செய்யும் தொழிற்சாலை ஒன்றுக்கு விற்றுவிட்டுள்ளார்.இவர்களை விற்ற நபர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுவிட்டார் என்றாலும், இன்னும் அத்தொழிற்சாலையின் முதலாளி பிடிபடவில்லை. பொலிசார் அவருக்கு வலை வீசிவருகின்றனர். விசாரணைகளை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் அத்தொழிற்சாலைக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.

சீனாவில் இப்படியான விஷயங்கள் வெளிவருவது என்பதும் இது முதல் தடவைதான் என்றில்லை.மூன்று வருடங்களுக்கு முன்பு ஷான்ஸி பிராந்தியத்தில் செங்கல் சூளை ஒன்றில் கிட்டத்தட்ட நூறு தொழிலாளிகள் அடிமைபோல வேலைவாங்கப்பட்டு வந்திருந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.இப்படியான அவலங்கள் மறுபடியும் நடக்காமல் தடுத்து நிறுத்துவோம் என பொலிசார் அச்சமயம் வாக்குறுதியளித்திருந்தனர்.ஆனால் பொலிசார் அதிலே வெற்றியடையவில்லை என்பதை இந்தச் சம்பவம் காட்டுகிறது.

Post a Comment

0 Comments