ரயில்களில் ஐந்து இலக்க எண்கள்

அனைத்து ரயில்களிலும் இன்று முதல் ஐந்து இலக்க எண்கள் அமல்படுத்தப்படுகின்றன. இந்தியா முழுவதும் 17 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரயில்கள் நான்கு இலக்க எண்களிலும், சாதாரண பாசஞ்சர் ரயில்கள் ஒவ்வொரு மண்டலத்திலும் மூன்று இலக்க எண்களிலும், புறநகர் மின்சார ரயில்கள் ஊர்களின் பெயரின் முதல் ஆங்கில எழுத்துக்களுடன், ஒரு இலக்கம் அல்லது இரண்டு இலக்க எண்களுடனும் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில்களில் பயணிகள் போக்குவரத்து அதிகரித்து வருவதையொட்டி தேவைக்கேற்ப வழக்கமான ரயில்களுடன், புதிய ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருவதால், ரயில்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரயில்களின் சர்வீஸ் பல ஆயிரமாக உயர்ந்ததால் இந்த நடவடிக்கை. நான்கு இலக்க எண்களை ஐந்து இலக்க எண்களாக மாற்றியமைத்தால் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரயில் இயக்கத்திலும் வசதிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், ரயில்களுக்கு ஐந்து இலக்க எண்கள் அமல்படுத்த ரயில்வே அமைச்சகம், முன்பே முடிவு செய்திருந்தது. இதையொட்டி எக்ஸ்பிரஸ், மெயில், சூப்பர் பாஸ்ட் மற்றும் சாதாரண பயணிகள் ரயில்கள் மற்றும் புறநகர் மின்சார ரயில்களின் எண்கள் இன்று முதல் ஐந்து இலக்கங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 2633 என்ற நான்கு இலக்க எண்ணில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் எண் முன்பாக 1 என்ற எண் சேர்க்கப்பட்டு 12633 என்று ஐந்து இலக்க எண்ணாக மாற்றப்பட்டுள்ளது. இதே போல நான்கு இலக்க ரயில் எண்கள் அனைத்துக்கும் முதலில் 1 என்ற எண் சேர்க்கப்பட்டு ஐந்து இலக்க ரயில் எண்களாக மாற்றப்பட்டுள்ளது. இதே போல பாசஞ்சர் ரயிலுக்கு முன்னால் 5 என்ற எண்ணை தொடர்ந்து அடுத்த நான்கு எண்கள் வரும்படி எண்கள் இடம் பெறுகின்றன. சென்னை எழும்பூர் புதுச்சேரி பாசஞ்சர் ரயில் (பழைய எண் 103) இனி 56037 என்ற ஐந்து இலக்க எண்ணுடன் இயக்கப்படும். புதுச்சேரி எழும்பூர் (பழைய எண்.104) பாசஞ்சர் ரயில் இனி 56038 என்ற ஐந்து இலக்க எண்ணுடன் இயக்கப்படும். இதே போல அனைத்து பாசஞ்சர் ரயில்களின் எண்களும் ஐந்து இலக்கங்களில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அனைத்து சிறப்பு ரயில் எண்களுக்கு முன், '0' என்ற எண் சேர்க்கப்பட்டு ஐந்து இலக்கங்களில் எண்கள் இடம்பெறுகின்றன. நீண்ட தூரம் செல்லும் புறநகர் மின்சார ரயில்களில் (எம்.இ.எம்.யு., மெயின் லைன் எலக்ட்ரிக்கல் மல்டிபிள் யூனிட்) முதல் எண் '6' என்ற எண்ணில் துவங்குகிறது. சென்னை - திருப்பதி நீண்டதூர மின்சார ரயில் எண் (பழைய எண்.189) 66021 என ஐந்து இலக்கங்களில் மாற்றப்பட்டுள்ளது. இத்தகைய ரயில்களுக்கு இதே போல ஐந்து இலக்கங்களில் எண்கள் வரிசைப்படி மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments