ஆன்லைன் வேலையா ?-இணையதளத்தில் ஹவாலா கும்பல்,ஜாக்கிரதை !

by 9:47 AM 2 comments
கோவை, ராம்நகர், நேரு வீதியில் வசிப்பவர் சிலம்பரசன்(24); சொந்த ஊர், சிவகங்கை மாவட்டம். இவர், கோவை நகரிலுள்ள தனியார் கல்லூரியில் பி.பி.டி., (பிசியோதெரபி) இறுதியாண்டில் படித்துக்கொண்டே, பகுதி நேர வேலை தேடினார்.வேலைவாய்ப்பு இருப்பதாக இணையதளம் ஒன்றில் வெளியான விளம்பரத்தை பார்த்து, "ஆன்-லைன்' முறையில் விண்ணப்பித்தார். அடுத்த இரு நாட்களில், easyjobforyou@hotmail.com என்ற, "இ-மெயில்' முகவரியில் இருந்து சிலம்பரசனுக்கு ஒரு தகவல் அனுப்பப்பட்டது.

அதில், வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்வதற்கான, "மார்க்கெட்டிங் எக்சிகியூடிவ்' பணி வழங்குவதாகவும், பொருட்களை விற்றால், 100 ரூபாய்க்கு 15 ரூபாய் கமிஷன் வழங்குவதாகவும் கூறப்பட்டிருந்தது.இதை நம்பிய சிலம்பரசன், தன் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை, "இ-மெயில்' செய்தார். ஆனால், பொருட்களை விற்பதற்கான வேலை எதுவும் தரப்படவில்லை. மாறாக, சிலம்பரசனின் வங்கிக் கணக்குக்கு, வேறு ஒரு வங்கிக் கணக்கில் இருந்து 50 ஆயிரம் ரூபாய், "டிரான்ஸ்பர்' செய்யப்பட்டிருந்தது. இப்பணத்தை, தாங்கள் குறிப்பிடும் நபரின் ரஷ்ய வங்கிக் கணக்குக்கு, "நெட் பாங்கிங்' மூலம் மாற்றிவிடும்படி உத்தரவு வந்தது. காரணம் புரியாத சிலம்பரசனும் அவ்வாறே செய்தார். அதே போன்று, மீண்டும் ஒரு முறை 50 ஆயிரம் ரூபாயையும், பின்னர், 1.30 லட்ச ரூபாயையும் இவரது வங்கிக் கணக்குக்கு ஏதோ ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மர்ம நபர்கள் டிரான்ஸ்பர் செய்தனர்.

பொருட்களை விற்றுக்கொடுத்தால் கமிஷன் தருவதாகக் கூறிய, "இ-மெயில்' தொடர்பாளர்கள், வெறுமனே பணப் பரிமாற்றத்துக்காக மட்டுமே தன்னை பயன்படுத்துவதை அறிந்த சிலம்பரசன், சந்தேகமடைந்தார்.தன் வங்கிக் கணக்குக்கு கடைசியாக வந்த தொகையை, வேறு வங்கிக் கணக்குக்கு டிரான்ஸ்பர் செய்யாமல் தவிர்த்தார். மறுநாளே இவருக்கு, "இ- மெயில்' அனுப்பிய மர்ம நபர்கள், தாங்கள் கூறுவது போல செயல்படாவிடில் போலீசில் புகார் அளித்து நிதிமோசடி வழக்கில், "உள்ளே தள்ளி' விடுவோமென மிரட்டியுள்ளனர். பயந்துபோன இவர், அந்நபர்கள் கூறியவாறே செய்தார். அதன்பிறகு, சிலம்பரசனுடனான தொடர்பை அவர்கள் துண்டித்துக் கொண்டனர்.இந்நிலையில், "நெட் பாங்கிங்' வசதி மூலம், வேறு ஒரு நபரின் கணக்கில் இருந்து இரண்டு லட்சம் ரூபாயை சிலம்பரசன் திருடிவிட்டதாகக் கூறி, இந்தியன் வங்கி அதிகாரிகள், கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.மோசடியில் சிலம்பரசன் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறிய போலீசார், இந்தியன் வங்கிக்கு சேரவேண்டிய இரண்டு லட்சம் ரூபாயை உடனே செலுத்துமாறு எச்சரித்துள்ளனர்.

தன் நண்பர்கள் மூலம், 25 ஆயிரம் ரூபாய் வரை திரட்டிய சிலம்பரசன், போலீஸ் கூறியபடியே இந்தியன் வங்கியில் செலுத்தினார். மேலும், 1.75 லட்சம் ரூபாய் கேட்டு வங்கி அதிகாரிகள் நிர்பந்தம் செய்ததால், வேறுவழியின்றி போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார் அளித்துள்ளார்.இவரை போன்றே கோவை, ஆவராம்பாளையத்தில் வசிக்கும் ஆனந்த கிருஷ்ணன் என்ற கல்லூரி மாணவரும் மோசடி கும்பலிடம் சிக்கி மீள முடியாமல் தவித்து வருகிறார். இவரும், போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.சிலம்பரசன் கூறுகையில், ""வேலைவாய்ப்பு அளிப்பதாகக் கூறிய மோசடி நபர்கள், இணையதளம் வழியே மோசடி செய்துவிட்டனர். என்னைப் போன்றே, மேலும் பல மாணவர்கள் ஏமாற்றப்பட்டிருக்கலாம். மோசடி நபர்களை போலீசார் கண்டறிந்து கைது செய்ய வேண்டும்,'' என்றார்.

கல்லூரி மாணவர் ஆனந்த கிருஷ்ணன் கூறுகையில், ""சிலம்பரசனை போன்றே, நானும் ஏமாற்றப்பட்டேன். மோசடி நபர்கள், என் வங்கிக் கணக்குக்கு ஏதோ ஒரு வங்கியில் இருந்து பணத்தை டிரான்ஸ்பர் செய்தனர். அந்த தொகையை, அந்நபர்கள் கூறியபடி வேறு வங்கிக் கணக்குக்கு டிரான்ஸ்பர் செய்தேன். நான் கணக்கு வைத்திருந்த வங்கியின் அதிகாரிகள், என்னை குற்றவாளி போல கருதி விசாரணை நடத்தினர். இதனால், போலீசில் புகார் அளித்துள்ளேன்,'' என்றார்.

"ஹவாலா' கும்பலின் வேலை : போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:வேலை வாய்ப்பு இருப்பதாக இணையதளத்தில் விளம்பரம் செய்து, ஆள்பிடிக்கும் ஹவாலா கும்பல், முதலில் வங்கிக் கணக்கின் விவரங்களை பெற்றுக்கொள்வர். பிறகு, அவற்றில் லட்சக்கணக்கில் பணத்தை செலுத்தி, அந்த தொகையை தாங்கள் கூறும் வெளிநாட்டு நபர்களின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு, "நெட் பாங்கிங்' மூலம், டிரான்ஸ்பர் செய்ய வற்புறுத்துவர்.இப்படி, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மூலம், இந்தியாவில் இருந்து பல கோடி ரூபாயை வெளிநாடுகளில் வசிக்கும் நபர்களுக்கு எளிதாக மாற்றிவிடுவர்; இதுவும் ஒரு வகையில் ஹவாலா பணப் பரிமாற்றம் தான்.மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் அல்லது வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள், அதிக தொகையை வங்கிக் கணக்கில் இருப்பு வைத்திருக்கும் நபர்களின் பணத்தை நூதனமாக திருடி, வெளிநாட்டுக்கு அனுப்பும் முயற்சியாகவும் இருக்க வாய்ப்புள்ளது.வங்கி வாடிக்கையாளர்கள், தங்களது ரகசிய எண்களை பாதுகாப்பாக வைத்திருக்காவிட்டால் இது போன்ற பிரச்னைகளுக்கு உள்ளாக நேரிடும்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.