கொலவெறிப்பாட்டு'க்கு எதிராக, யாழ்ப்பாண இளைஞர்

சகோதரா மன்னித்துவிடு... தனுஷின் கொலவெறிப்பாட்டை அங்கீகரித்த ஒட்டு மொத்த தமிழர் சார்பிலும் மன்னிப்பு கோருகிறேன்...

- தனுஷின் 'தமிழ் கொலவெறிப்பாட்டு'க்கு எதிராக, யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் அட்டகாசமான தமிழில் எழுதி அதே மெட்டில் பாடியிருக்கும் 'என் தமிழ் மேல் உனக்கேனிந்த கொலவெறிடா?' என்ற பாட்டைக் கேட்ட பிறகு பலரும் உதிர்த்த கமெண்ட் இது!

நாடே தனுஷின் கொலவெறி பற்றி பேசிக் கொண்டிருக்க, மொழி ஆர்வலர்கள், தமிழ் உணர்வாளர்களின் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது இந்தப் பாடல்.

இந்தப் பாட்டைக் கண்டிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து எஸ் ஜே ஸ்டாலின் உருவாக்கியுள்ள 'கொலைவெறிப் பாடலுக்கு’ அனைத்து தரப்பினர் மத்தியிலும் ஏக வரவேற்பு. 

தமிழ் உணர்வாளர்களும் புலம்பெயர் ஈழத் தமிழர்களும் இந்தப் பாடலை உருவாக்கிய ஸ்டாலினை பாராட்டித் தள்ளிக் கொண்டுள்ளனர்.

'என் தமிழ் மொழி மேல் உனக்கேன் இந்தக் கொலைவெறிடா’ என்று தொடங்கும் அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் பப்பா பப்பா என பாடிக் கொண்டிருக்கும் தனுஷை 'தப்பு தம்பி தப்பு' என தலையில் குட்டுவது போல அமைந்துள்ளன. இந்தப் பாடல் இணையதளத்தில் வெளியான மூன்று நாட்களுக்குள் 1.30 லட்சம் பேர் கேட்டு ரசித்திருக்​கிறார்கள். இன்றைய நிலவரப்படி 1.70 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ள பாடல் இது. 

யாழ் நகரைச் சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்கள் இந்தப் பாடலை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் பாடலை இயற்றி, பாடி, இசையமைத்த எஸ்.ஜெ.ஸ்டாலினுக்கு, உலக அளவில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. 

இந்தப் பாடலில் ஈழத் தமிழர்களின் அடையாளங்கள், மண் சார்ந்த நினைவூட்டல்கள் அழகாக இடம்பெற்றுள்ளது இன்னொரு சிறப்பு.

'கொலவெறிடா - யாழ்ப்பாணம் பதிப்பு' என்ற தலைப்பில் வந்துள்ள அந்தப் பாடலின் வரிகள் முழுமையாக:

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…

கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா…
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா…

செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்…

கம்பனின் வரிகள்…
வள்ளுவன் குறள்கள்…
பாரதி கவிகள் எங்கே?
தொன்று தொட்டு…
பழமை பாடும்…
தமிழர் பெருமை எங்கே?

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா…? – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா

யேசு, புத்தன்,
காந்தி சொன்ன
அகிம்சை வழியைக் கேளு – தினம்

தமிழின் செழுமை
படித்து வந்தால்
தணியும் கொலவெறி பாரு..!
ஆஸ்கார் வாங்கிய
தமிழன் சபையில்
பெருமை சேர்த்தான் தமிழில்
செம்மொழி பாடிய
புரட்சிக் கவிஞன்
தன்னுயிர் கலந்தான் தமிழில்..!

தமிழை வாழவை இல்லை வாழவிடு
இன்னும் தாங்காதடா மனசு
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு

தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பை இழந்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்…

பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல – அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா

யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா – தமிழா
எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா…

தமிழ்க் கொலையாளிகளுக்கு இதைவிட ஒரு வன்மையான கண்டனத்தை யாரும் சொல்லிவிட முடியாது!

Post a Comment

0 Comments