பணவீக்கத்தைக் கட்டுப்படுத்திய ஆர்பிஐ

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதற்கு எதிர்பார்த்த பலன் கிடைத்தது. எதிர்க்கட்சியினரும், தொழில்துறையினரும் வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும், அதைப் பொருட்படுத்தாமல் இலக்கை பணப்புழக்கத்தைக் குறைப்பதன் மூலம்தான் பணவீக்கத்தைக் குறைக்க முடியும் என்ற நிலையில் உறுதியாக இருந்தது ரிசர்வ் வங்கி. ஓராண்டில் 13 முறை வட்டி விகிதத்தை உயர்த்தியதில் ஆண்டு இறுதியில் பணவீக்கம் எதிர்பார்த்த அளவுக்குக் குறைந்துள்ளது.


வட்டி விகிதத்தை உயர்த்தியதால் பொருளாதார வளர்ச்சி உயர்ந்ததாகவும், தொழில்துறை உற்பத்தி சரிந்ததாகவும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு புத்தாண்டில் வட்டி விகிதத்தைக் குறைத்து பதில் அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.


கடந்த ஆண்டில் 6 முறையும் நடப்பாண்டில் 7 முறையும் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்திய போதிலும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவதைத் தடுக்க முடியவில்லை. அன்னியச் செலாவணி சந்தையில் தலையிடுவதில்லை என்ற ரிசர்வ் வங்கியின் அணுகுமுறை காரணமாக ரூபாயின் மதிப்பு பெருமளவு குறைந்ததாக ரிசர்வ் வங்கி கவர்னர் டி. சுப்பாராவ் குறிப்பிட்டுள்ளார். கடந்த டிசம்பர் 16-ம் தேதி காலாண்டு அறிக்கை வெளியிடும்போது, இனி பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று ஆர்பிஐ கவர்னர் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த ஜனவரியில் 16 சதவீதமாக இருந்த பணவீக்கம் இப்போது ஒரு சதவீதத்துக்கும் குறைவாக சரிந்துள்ளதற்கு ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைதான் காரணம் என்பதை மறுக்க முடியாது. அதேசமயம் அத்தியாவசிய பொருள்களின் விலை ஓரளவு குறைந்துள்ளதும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்குக் கிடைத்த பலனாகும்.


வங்கித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களையும் செய்துள்ளது. சேமிப்புக் கணக்கில் உள்ள தொகைக்கு தினசரி வட்டி விகிதத்தைக் கணக்கிட வேண்டும் என்ற முறையைக் கொண்டு வந்துள்ளது.
இது தவிர, முன் கூட்டியே வீட்டுக் கடன் தொகையை செலுத்தும் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் தொகை வசூலிக்கக்கூடாது என்ற நிபந்தனையையும் ஆர்பிஐ விதித்து பல வாடிக்கையாளர்களை நிம்மதி பெருமூச்சுவிடச் செய்துள்ளது.


இது தவிர வங்கித் துறையில் பெரும் நிறுவனங்கள் ஈடுபடுவதற்கு ஆகஸ்ட் 29-ல் ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. ஆனால் இதற்கு இன்னமும் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை.
இத்தகைய நிதிச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு மேலும் பல காலம் ஆகும் என்றே தோன்றுகிறது.

Post a Comment

0 Comments