பணத்தை சேமிக்க யோசனைகள்


ன்றைக்கு பலரும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார்கள்.  பல்வேறு நோய்களை நமக்கு தரும் இந்த பழக்கத்திற்காக நிறையவே பணம் செலவாகிறது. ஒரு நாளைக்கு ஆறு சிகரெட் குடிப்பவர்கள், அதை நிறுத்தினாலே நிறைய காசை மிச்சப்படுத்தலாம்.  

இன்றைக்கு மது குடிக்கும் பழக்கமும் பலரையும் தொற்றிக் கொண்டிருக்கிறது. நல்லதோ, கெட்டதோ உடனே 'உற்சாக பானத்தை’ அருந்த ஆரம்பித்து விடுகிறார்கள் பலர். இதனால் நம் உடலுக்கு மட்டுமல்ல, நம் பர்ஸுக்கும் பலத்த பாதிப்பு. மாதத்திற்கு ஒருமுறை 'உற்சாக’மாவதை நிறுத்தினால்,  பெரும் பணம் மிச்சமாகும்.

சிகரெட், மது அளவுக்கு டீ, காபி மோசமில்லைதான் என்றாலும் நம் பணத்திற்கும் உடலுக்கும் பாதிப்பு என்பதால் முடிந்தவரை இதையும் குறைக்கலாம்.

இரு வாரத்திற்கு ஒருமுறை சினிமாவுக்குப் போவதை நிறுத்திவிட்டு, மாதத்திற்கு ஒருமுறை போவது நல்லது.  

மாதமொருமுறை குடும்பத்துடன் ஓட்டல் சென்று சாப்பிடுவதை விட்டுவிட்டு, எப்போதாவது ஒருமுறை போனால், ரசித்து சாப்பிடலாம்.

வீட்டில் மின் சாதனங்களை நன்கு பராமரித்து வருவதன் மூலம் 15-20% சதவிகித மின்சாரச் செலவைக் குறைக்கலாம். இதற்கு தேவை சோம்பேறித்தனம் பார்க்காத உடலுழைப்பு கொஞ்சமாக.

செல்போனில் ஓயாமல் பேசுவதை இன்றைக்கு பலரும் ஒரு பழக்கமாகவே ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் நம் பணம் அநியாயமாக செலவாகிறது. அடிக்கடி பேசுவதைவிட இடைவெளி விட்டு பேசினால் உறவும் பலப்படும்; காசும் மிச்சமாகும்.

பள்ளியிலிருந்து குழந்தைகள் ஆட்டோவில் வருவதைவிட நாமே டூவீலரில் போய் அழைத்து வந்தால் ஆட்டோ காசு மிச்சமாகும். (ஒருவர் மட்டுமே வேலைக்குச் செல்லும் குடும்பங்களில் இது சாத்தியம்.)  அதே போலவே மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு நாமே பாடம் சொல்லித் தந்தால் டியூஷன் செலவும் மிச்சம்.

கிரெடிட் கார்டு கடன்களை தவிர்ப்பது அவசியத்திலும் அவசியம். நிதிச் சிக்கலில் இருப்பவர்கள் கண்டிப்பாக ஷாப்பிங் செல்லும் போது கிரெடிட் கார்டுகளை எடுத்துச் செல்வதைத் தவிர்க்கவும்.

தேவை இருக்கிறதோ, இல்லையோ, பலர் வாரம்தோறும் பொழுதுபோக்காக ஷாப்பிங் செல்கிறார்கள். அப்படி செல்லும் போது, கண்ணில் படுவதை எல்லாம் வாங்கி வீட்டையும் குப்பையாக்கி, காசையும் கரைத்து விடுகிறார்கள்.

பெட்ரோல் விலை அதிரடியாக உயர்ந்து வரும் நிலையில் அத்தியாவசிய, அவசரத் தேவைகளுக்கு மட்டும் கார், பைக்குகளை பயன்படுத்தலாம். மற்ற நேரங்களில் பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துவது நல்லது.  
இதில் சிலவற்றை நீங்கள் கடைபிடித்தாலே போதும், உங்கள் பணம் மிச்சமாவதோடு, மருத்துவச் செலவும் கணிசமாகக் குறைந்து, நிம்மதியாக இருக்கலாம்.
தேவையில்லாத செலவுகளைக் குறைப்பதன் மூலம் மாதத்திற்கு குறைந்தபட்சமாக 2,400 ரூபாய் மிச்சமாகும். எப்படி?

சிகரெட் -  ரூ.250
உற்சாக பானம் - ரூ.250
டீ/காபி -   ரூ.200
சினிமா -   ரூ.400
ஓட்டல் சாப்பாடு - ரூ.250
மின்சாரம் - ரூ.50
செல்போன் - 200
டியூஷன்   ரூ. 100
கிரெடிட் கார்டு ரூ. 250
ஷாப்பிங் ரூ. 250
போக்குவரத்து ரூ. 200

இத்தகைய தேவையில்லாத செலவுகளைச் சேர்த்தால் மாதத்துக்கு மொத்தம் 2,400 ரூபாய் வருகிறது. இதில் பாதிச் செலவு பலருக்கு பொருந்தாது என்று வைத்துக் கொண்டாலும், மீதமுள்ள வீண்செலவுகளைத் தவிர்த்தால், ஒவ்வொரு மாதமும் சுமார் 1,000 ரூபாயையாவது சேமிக்க முடியும். இந்த ஆயிரம் ரூபாயை பத்து வருடங்களுக்கு வங்கி ஆர்.டி-யில் போட்டு வந்தாலே 1,81,300 ரூபாய் கிடைக்கும். இதுவே 12% வருமானம். எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்ட் ஃபண்டில் முதலீடு செய்தால் 2,24,000 ரூபாய் கிடைக்கும். 
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
source- நாணயம் விகடன்

Post a Comment

0 Comments