டோனி பீல்டிங் வியூகம் சரியில்லை: அக்ரம் பாய்ச்சல்


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 122 ரன்னில் தோற்றது. இந்த தோல்விக்காக இந்திய அணி கேப்டன் டோனி மீது பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்னணையாளருமான வாசிம் அக்ரம் பாய்ந்துள்ளார். எதிர்மறையான கேப்டன் ஷிப் என்று குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
 
இங்கிலாந்தில் இந்திய அணிக்கு ஏற்பட்ட தோல்விக்கு பிறகு டோனி சிறந்த கேப்டன் அதில் இருந்து பாடம் கற்றுக்கொள்வார் என்று நான் தெரிவித்து இருந்தேன். ஆனால் மெல்போர்ன் டெஸ்டில் அவரது செயல்பாடு சரியில்லை.
 
பீல்டிங் வியூகம் சரியாக அமைக்க வில்லை. அவரது திட்டம் என்னவென்றே புரியவில்லை. அதிகமாக எழும்பும் ஆடுகளத்துக்கு ஏற்றவாறு அவர் பீல்டர்களை நிறுத்தவில்லை. பவுலர்களை உற்சாகப்படுத்துவது அவரிடம் குறைவாகவே உள்ளது.
 
விக்கெட்டுக்கு பின்னால் இருக்கும் அவர் பவுலர்களை சில வார்த்தைகள் கூறியே பாராட்டுகிறார். பவுலர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களை உற்சாகப்படுத்திக்கொண்டு இருக்க வேண்டும். இனிவரும் போட்டிகளில் டோனி தனது தவறுகளில் இருந்து பாடம் கற்று கொள்வார் என்று நம்புகிறேன்.
 
3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்து இருந்தது. மைக்ஹஸ்சி களத்தில் இருந்தார். 4-வது நாள் ஆட்டம் தொடங்கிய சில ஓவர்களிலேயே உமேஷ்யாதவ் பந்தில் ஹஸ்சி அவுட் ஆகி இருக்க வேண்டியவர். ஆனால் இந்திய வீரர்கள் யாருமே `அப்பீல்' கேட்கவில்லை. அப்பீல் கேட்டு இருந்தால் விக்கெட் கீப்பிங் கேட்ச் முறையில் ஹஸ்சி ஆட்டம் இழந்து இருப்பார்.
 
ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் குறித்து அறிய இந்திய வீரர்கள் 4 வாரங்களுக்கு முன்பே ஆஸ்திரேலியா சென்று இருக்க வேண்டும். 15 நாட்களில் தயார் நிலையில் இருப்பது என்பது சவாலானதே.
 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரரான வாசிம் அக்ரம் 104 டெஸ்டில் 414 விக்கெட்டும், 356 ஒருநாள் போட்டியில் விளையாடி 502 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார். டோனி தலைமையிலான இந்திய அணி வெளிநாட்டில் 17 டெஸ்டில் விளையாடி 7-வது தோல்வியை சந்தித்து உள்ளது.
 
மெல்போர்ன் டெஸ்டில் ஏற்பட்டது 5-வது தோல்வி ஆகும். இங்கிலாந்தில் 4 டெஸ்டிலும் தோற்று இருந்தது.

No comments: