இந்திய அணிக்கு அசத்தலான இரண்டாவது வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. தில்லியில் பெரோஷா கோட்லா மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 48.2 ஓவர்களில் 237 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அடுத்து விளையாடிய இந்தியா 36.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் வினய் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். விராட் கோலி 112 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தொடக்கமே சரிவு

முன்னதாக இங்கிலாந்து அணியில் கேப்டன் அலெஸ்டைர் குக், கீஸ்வெட்டர் ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினர். பிரவீண் குமார் வீசிய முதல் ஓவரின் 4-வது பந்திலேயே குக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 4 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
வினய் குமார் வீசிய இரண்டாவது ஓவரிலும் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 2-வது ஓவரின் 5-வது பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து கீஸ்வெட்டர் வெளியேறினார். அவரும் ரன் ஏதும் எடுக்கவில்லை. இதனால் ஒரு ரன்கள் கூட சேர்க்காமல் 2 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தத்தளித்தது.

பீட்டர்சன் போராட்டம்

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த டிராட்டும், பீட்டர்சனும் அணியை மீட்கப் போராடினர். டிராட் வேகமாக விளையாடி ரன் சேர்த்தார். 10 ஓவர்களில் 48 ரன்கள் சேர்த்திருந்தபோது, 34 ரன்கள் எடுத்திருந்த டிராட் வெளியேறினார். அப்போது இங்கிலாந்தின் ஸ்கோர் 48.
அடுத்து வந்த போபாரா, பீட்டர்சனுடன் இணைந்து நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். 22 ஓவர்களில் இங்கிலாந்து 100 ரன்களைக் கடந்தது. 25-வது ஓவரில் ஸ்கோர் 121 ஆக இருந்தபோது போபாரா 36 ரன்களில் வெளியேறினார். அஸ்வின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவர் ஆட்டமிழந்தார்.

அடுத்த ஓவரிலேயே உமேஷ் யாதவ் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து பீட்டர்சன் (46 ரன்கள்) அவுட் ஆனார். அப்போது இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து பெய்ர்ஸ்டவ், படேல் ஜோடி சேர்ந்து இங்கிலாந்தின் ஸ்கோர் உயர ஓரளவுக்கு உதவினர். பெய்ர்ஸ்டவ் 35 ரன்களும், படேல் 42 ரன்களும் எடுத்து கடைசி கட்டத்தில் ஸ்கோர் உயர உதவினர். பின்னர் பிரெஸ்னன் 12, ஸ்வான் 7, டெர்ன்பேச் 3 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 48.2 ஓவர்களில் 237 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

வினய் குமார் 4 விக்கெட்

இந்திய அணியில் வினய் குமார் 30 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவே அவரது சிறந்த பந்து வீச்சு. உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், பிரவீண் குமார், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

கோலி, கம்பீர் அபாரம்

அடுத்து ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் பார்த்திவ் படேல் 12 ரன்களுக்கும், ரஹானே 14 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கோலியும், கம்பீரும் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். கோலி அதிரடியாக விளையாடி பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பினார். இதனால் 18 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களைக் கடந்தது. இந்த ஜோடியை இங்கிலாந்து வீரர்களால் பிரிக்க முடியவில்லை.
கோலி 45 பந்துகளிலும், கம்பீர் 62 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தனர். 89 பந்துகளில் கோலி சதமடித்தார். 36.4 ஓவர்களில் இந்தியா 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. கோலி 112 ரன்களுடனும் (98 பந்துகள்), கம்பீர் 84 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இரு அணிகளுக்கு இடையிலான அடுத்த ஒருநாள் போட்டி மொஹாலியில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

தில்லி ரசிகர்களுக்கும் ஆர்வம் குறைந்தது

இந்தியா - இங்கிலாந்து இரண்டாவது ஒருநாள் போட்டியைப் பார்க்க தில்லி ரசிகர்களும் பெருமளவில் ஆர்வம் காட்டவில்லை. சுமார் 48 ஆயிரம் பேர் வரை அமரும் வசதியுள்ள தில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் சுமார் 20 ஆயிரம் ரசிகர்களே போட்டியைக் காண வந்திருந்தனர். மைதானத்தில் 50 சதவீதம் அளவு இடம் மட்டுமே நிரம்பியிருந்தது.
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் சுமார் 15 ஆயிரம் டிக்கெட்டுகள் இலவச பாஸ்களாக பல்வேறு தரப்பினருக்கு வழங்கப்பட்டிருந்தன. அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களும் பெருமளவில் காலியாகவே இருந்தன.
முன்னதாக ஹைதராபாதில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியைப் பார்க்கவும் ரசிகர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. மைதானத்தில் பாதியளவு இடம் வெறிச்சோடியே காணப்பட்டது.
முன்பெல்லாம் தில்லியில் கிரிக்கெட் நடைபெற்றால், மைதானமே நிரம்பி வழியும். மைதானத்துக்கு வெளியே கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸôர் பெருமளவில் குவிக்கப்படுவர். ஆனால் இந்தப் போட்டிக்கு அந்த அளவுக்கு பாதுகாப்பும் தேவைப்படவில்லை. அதிக அளவில் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுவதும், இந்திய அணி சமீபத்தில் சந்தித்த தொடர் தோல்விகளும்தான் ரசிகர்களுக்கு கிரிக்கெட் மீதான ஆர்வம் குறைந்ததற்கு காரணம் என்று கருதப்படுகிறது.

வெளியேற பீட்டர்சன் தயக்கம்

இங்கிலாந்தின் கேவின் பீட்டர்சன் 46 ரன்களில் எடுத்திருந்தபோது உமேஷ் யாதவ் பந்தில் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
எனினும் கேட்ச் தரையில் படாமல் சரியாகப் பிடிக்கப்பட்டதா என்பதில் சந்தேகம் ஏற்பட்டது. தோனி கேட்ச் பிடித்து விட்டதை உறுதி செய்தார். எனினும் பீட்டர்சன் மைதானத்தில் இருந்து வெளியேறாமல், எல்லைக் கோடு அருகில் நின்று கொண்டிருந்தார்.
டி.வி. ரீபிளேயில் கேட்ச் சரியாக பிடிக்கப்பட்டது தெரியவந்தது. பீட்டர்சன் அவுட் என்பதை 3-வது நடுவர் உறுதி செய்தார். இதையடுத்து பீட்டர்சன் பெவிலியன் திரும்பினார்.













Post a Comment

0 Comments