குழந்தை வளர்ப்பது எப்படி ?

by 10:16 PM 1 commentsஇவ்வுலகில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, மனிதனுக்கு துணைபுரியும் ஒரு மாபெரும் அம்சம் சுய உந்துதல்.
இவ்வுலகில் பிரளயம், பூகம்பம் மற்றும் இன்னபிற இயற்கைப் பேரிடர்கள் பல ஏற்பட்டாலும், இந்த சுய உந்துதலே ஒவ்வொரு உயிரினத்தையும் நிலைத்து பிழைக்கச் செய்கிறது. மத நூல்கள் உட்பட, பலவிதமான நன்னெறி நூல்களிலும் இந்த சுய உந்துதல் போதிக்கப்பட்டுள்ளது.
* உலகின் ஒவ்வொரு சாதனையாளரையும் சாதிக்க வைத்தது இந்த சுய உந்துதலே.
* மூட நம்பிக்கையால் சீரழிந்து கிடந்த சமூகத்திற்கு பகுத்தறிவையும், மனித முயற்சிகளின் மாண்பையும் உணர்த்தி, ஏமாற்றுக் கூட்டத்தாரிடம் இருந்து மக்களைப் பாதுகாக்க புத்தரைத்(உலகின் ஜோதி) தூண்டியது சுய உந்துதல்தான்

.
* இந்த சுய உந்துதல் என்பது ஒரு மனிதனை சாதாரண நிலையிலிருந்து அசாதாரண நிலைக்கு மாற்றுகிறது. இந்த உந்துதல்தான் நமது உள்ளார்ந்த திறன்களை நமக்குப் புரியவைத்து, நமது பலவீனங்களை மறக்கச் செய்கிறது.
* உங்களின் குழந்தை சாதனையாளராக வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், இந்த சுய உந்துதல் பண்பை உங்கள் குழந்தையிடம் ஏற்படுத்தவும்.
* ஒவ்வொரு குழந்தையும் இயற்கையிலேயே  ஓரளவு சுய உந்துதல் பண்போடுதான் பிறக்கின்றன. ஏனெனில், அந்தப் பண்பு, ஒரு மனிதன் உயிரோடு வாழ்வதற்கான அடிப்படை சக்தியாகும்.
குழந்தையின் சுய உந்துதலை அதிகரிப்பதற்கான சில முக்கிய யோசனைகள்
* வீட்டில், ஆரோக்கியமான, ஆர்வமூட்டும் கற்றல் சூழலை குழந்தைக்கு ஏற்படுத்திக் கொடுக்கவும்.
* உங்கள் குழந்தையின் மூளையானது, எப்போதுமே நேர்மறையான செயல்பாடுகளில் ஆழந்திருக்கும்படி வாய்ப்புகளை உருவாக்கவும்.
* நேர்மறை எண்ணம் உள்ளவர்களுடன் மட்டுமே உங்களின் குழந்தையை பழக விடவும். எதிர்மறை எண்ணம் கொண்டவர்களின் தொடர்பைத் தவிர்க்கவும்.
* தனக்குள்ளேயே முடியும் - நம்மால் முடியும் என்ற வகையில் பேசிக் கொள்வது சுய உந்துதலை அதிகரிப்பதற்கான வழியாகும்.
* உங்கள் குழந்தையிடம் எப்போதுமே படைப்பாக்க சிந்தனைகளைத் தூண்டவும். ஏற்கனவே இருக்கும் விஷயங்களையே திரும்ப திரும்ப பேசி சிலாகிப்பதை விட்டுவிட்டு, புதிதாக உருவாக்கும் எண்ணத்தை குழந்தையிடம் உருவாக்கவும்.
* உலகில் புதிதாக சாதனைப் புரிந்தவர்கள், படைப்பாளிகள், புகழ்பெற்ற தலைவர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அனுபவக் குறிப்புகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தவும்.
பெற்றோர் பங்கு
ஒரு குழந்தையின் சுய உந்துதல் மேம்படுவதில் பெற்றோரின் பங்கு பற்றி விழிப்புணர்வு அவசியம் இருக்க வேண்டும். ஏனெனில், குழந்தையின் முதல் ஆசிரியர்கள் பெற்றோர்தான். பள்ளியில் ஒரு குழந்தைக் கற்பதைவிட, பல மடங்கு வாழ்க்கைப் பாடங்களை வீட்டில்தான் கற்றுக்கொள்கிறது. எனவே, வீடு மற்றும் சுற்றியுள்ள சமூக சூழல்களில்தான் ஒரு குழந்தையின் மனப்பாங்கு உருவாக்கப்படுகிறது.
ஒரு குழந்தையின் திறன் மேம்பாட்டினால் அது பெரும் நற்பெயரில், பெற்றோர்களுக்கு சமபங்கு கிடைக்கிறது. எனவே அதற்கேற்ப பெற்றோர் தங்களின் செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். எதிர்மறை செயல்பாடுகளைத் தவிர்த்து, உங்கள் குழந்தையிடம் நேர்மறையாகவே செயல்படுங்கள். குழந்தை செய்யும் தவறுகளைத் திருத்துவதில் நேர்மறை அணுகுமுறையைக் கடைபிடியுங்கள். கடுமையான அணுகுமுறையைத் தவிர்க்கவும். உங்களிடமிருந்து கிடைக்கும் உற்சாகம், பாராட்டுதல்கள் மற்றும் பரிசுகளை குழந்தைகள் எப்போதுமே எதிர்பார்க்கின்றன. உங்களின் குழந்தை அசாத்திய அறிவைக் கொண்டிருக்கவில்லை என்றாலும்கூட, உங்களின் அணுகுமுறையே அவர்களை சிறப்பானவர்களாக மாற்றிவிடும். ஏனெனில் எல்லாக் குழந்தைகளுமே பிறவி மேதைகளாகப் பிறப்பதில்லை. உங்கள் குழந்தையின் வளரும் செயல்பாட்டில் நீங்களும் எவ்வளவோ கற்றுக்கொள்கிறீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.
உலகம் கைப்பற்றுவதற்கே!
மனச் சிறையிலிருந்து உங்கள் குழந்தையை விடுதலைப் பெறச் செய்யுங்கள். சுதந்திரமான மற்றும் தனித்துவம் வாய்ந்த சிந்தனைகள் உங்கள் குழந்தையிடம் பெருகி வரட்டும். இளம் வயதிலேயே செயல்பட உங்களின் குழந்தைக்கு கற்றுக் கொடுக்கவும். உங்களின் இல்லமானது, போக்குவரத்து தடைகளற்ற ஒரு சீரான மற்றும் விசாலமான நெடுஞ்சாலைப் போன்று இருக்க வேண்டும். இதற்கு அர்த்தம் என்னவென்றால், அவர்களின் புத்தாக்க சிந்தனைகளுக்கு வேண்டாத கட்டுப்பாடுகளை சுமத்தக்கூடாது என்பதுதான். அந்தக் கட்டுப்பாடுகள் உங்கள் குழந்தைக்குள் ஒரு மேதை உருவாவதை தடுத்துவிடும்.
உங்கள் குழந்தையைப் பொறுத்தவரை, உலகம் என்பது வெல்வதற்கானது! மாறாக, அடங்கி வாழ்வதற்கல்ல.
அவர்களே செய்யட்டும்
உங்கள் குழந்தைகளுக்கான வேலையை அவர்களையே செய்ய விடுங்கள். சில தடுமாற்றங்கள் ஆரம்பத்தில் இருந்தாலும், எல்லாம் போகப் போக சரியாகிவிடும். உங்களின் குழந்தை ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், தடை செய்யாதீர்கள். அந்த விஷயத்தின் அடிப்படைகளை சொல்லிவிட்டு, அவற்றை குழந்தையே செய்ய அனுமதியுங்கள். அடிக்கடி போய் நச்சரிக்காதீர்கள். உங்களது பாணியையே பின்பற்ற வேண்டும் என்றும் நினைக்க வேண்டாம். உதாரணமாக, ஒரு குழந்தை சமையல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால், அதற்கான முயற்சிகளுக்கு அனுமதியுங்கள். விளைவுகள் விரும்பியபடி இல்லாவிட்டாலும், கவலையில்லை. நாளாவட்டத்தில், உங்களின் குழந்தை நன்றாக சமைக்கப் பழகியிருக்கும்

.
தோல்விகூட புதுவகை வெற்றிக்கு வழி
உங்கள் குழந்தையின் செயல்பாட்டில் ஏற்படும் தோல்விகளை எண்ணி வைத்துக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் குழந்தைப் பருவத்தை நினைத்துப் பார்த்தால், உங்களின் தவறுகள் நினைவுக்கு வரும்.
சில சமயங்களில் தவறுகள்கூட புதிய செயல்முறைகளுக்கு வழிவகுக்கும். பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் தவறான செயல்பாடுகள் புதிய சாதனைகளுக்கு வித்திட்டுள்ளன. உங்களின் குழந்தை தனது செயல்பாட்டில் சிறுசிறு தவறுகள் செய்வதால் உலகமே ஒன்றும் தலைகீழாகி விடப்போவதில்லை. எனவே, குழந்தையின் தவறுகளை எக்காரணம் கொண்டும் தூற்றாதீர்கள்.
உங்கள் குழந்தை ஒரு ரோபோவாக இருக்க முடியாது. அது தனித்துவமாக செயல்பட வேண்டுமெனில், தனது முயற்சிகளில் புதுப்புது அம்சங்களை செய்து பார்க்கும். அதை தடைசெய்யாதீர்கள்.
உங்கள் குழந்தை நீங்கள் அல்ல!
"உங்கள் குழந்தை உங்களின் வழியாக பிறக்கிறதே தவிர, அது நீங்கள் அல்ல"
என்று ஒரு பொன்மொழி உண்டு.

எனவே, உங்களின் ஆசை-அபிலாஷைகளை அதனிடம் திணிக்க வேண்டாம். ஏனெனில் அவர்கள் தனித்துவமான அம்சங்களுடன் உலகில் பிறக்கிறார்கள். உங்களைப் போன்றே அவர்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களின் வழி எதுவோ, அதில் அவர்களை செல்ல விடுங்கள்.
இலக்கு நிர்ணயித்தல்
ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏதாவது ஒரு வகையான இலக்கு இருந்துகொண்டே இருக்கும். இலக்கு இல்லாவிட்டால், மனித வாழ்வு சுத்தமாக கலையிழந்துவிடும். ஒவ்வொருவரின் வாழ்விலும் இலக்கு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் இலக்கை மையமாக வைத்தே இயங்குகிறது.
உங்கள் குழந்தைக்கும் ஆரம்பத்திலிருந்தே ஏதேனும் ஒரு இலக்கைக் கொடுத்துப் பழக்குங்கள். அந்த இலக்கை முடித்தவுடன், பரிசுகளையும், பாராட்டுகளையும் வழங்குங்கள். அதேசமயத்தில், கொடுக்கப்படும் இலக்கானது குறிப்பிட்ட காலத்தில் அடையக்கூடியதாக இருக்கட்டும். குழந்தை, மிரண்டு போகுமளவிற்கு எந்த இலக்கையும் தந்துவிட வேண்டாம்.
இலக்கை நிர்ணயித்துப் பழக்குவதன் மூலம், பிற்காலத்தில், தனது லட்சியத்தை அடைய, குழந்தைகள் தங்களுக்குப் பொருத்தமான இலக்கை, தாங்களே நிர்ணயித்துக் கொள்வார்கள்.
குறிப்பு

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு சூழ்நிலை இருக்கும். அதன்மூலம் பெற்றோர் மற்றும்  குழந்தையின் வாய்ப்புகளும் மாறுபடும். குழந்தையின் சுதந்திர சிந்தனையை வளர்ப்பது என்றால், அதன் இஷ்டத்திற்கு விட்டுவிடுவதல்ல. நல்லது - கெட்டதை சரியாக புரிய வைப்பது பெற்றோர்களின் கடமை. உலகின் நிலையை தெளிவாக அவர்களுக்குப் புரிய வைப்பதும், சமூகத்தின் சவால்களை தெரிய வைப்பதும் முக்கியமானவை. அப்போதுதான் ஒரு குழந்தை சுதந்திரமாக செயல்படும்போது, சரியான பாதையில் செல்லும். இல்லையெனில், சுதந்திரம் என்ற பெயரில், ஒரு குழந்தையின் எதிர்காலம் முற்றிலும் சீரழிந்துவிடும். ஏனெனில், நம்மைச் சுற்றிலும் நல்ல விஷயங்களைவிட, தீமைகளே எங்கும் நிறைந்துள்ளன என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.


source:dinamalar

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

1 comments:

தங்கம்பழனி said...

நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்..!