நூறு வயதில் மாரத்தான் ஓடி உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் இந்தியாவில் பிறந்து பின்னர் பிரிட்டிஷ் குடியுரிமைப் பெற்றவரான ஃபூஜா சிங்.
கனடாவில் நடந்த டொரொண்டோ வாட்டர்ஃபிரண்ட் மாரத்தான் போட்டியில் 42 கிலோமீட்டர் தூரத்தை இவர் 8 மணி நேரங்கள் 25 நிமிடங்களில் ஓடிக் கடந்துள்ளார்.மாரத்தான் பந்தய தூரமான 42 கிலோ மீட்டர்களை முழுமையாக ஓடிக் கடந்த மிக அதிக வயதுடைய மனிதர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.தனது 93ஆவது வயதில் டொரொண்டோ மாரத்தனை சிங் 5 மணி நேரம் 40 நிமிடங்களில் ஓடியிருந்தார்.இந்தப் பந்தயத்தில் ஓடியவர்களில் 3850ஆவது இடத்தில்தான் இந்தப் பெரியவர் வரமுடிந்தது என்றாலும், இவர் கடைசி ஆள் அல்ல. இவருக்கு பின்னால் வந்தவர்கள் ஐந்து பேரும் இருந்தனர்.
11 ஆண்டுகளுக்கு முன் தனது 89ஆவது வயதில்தான் பெரியவர் சிங் ஓடவே ஆரம்பித்திருந்தாராம்.
தனது மனைவியும் மகனும் இறந்ததை அடுத்து சோகத்திலிருந்து மீளுவதற்கான ஒரு வழியாக ஓட்டப்பயிற்சியை ஆரம்பித்த இவர், ஒவ்வொரு நாளும் பதினாறு கிலோமீட்டர்கள் ஓடி பயிற்சி பெற்று வந்துள்ளார்.
1911ல் பஞ்சாப்பில் பிறந்தவரான சிங் 1960கள் வாக்கில் பிரிட்டனில் குடியேறிருந்தார்.
0 Comments