கரண்ட் ஷாக் குடுத்தால் மூளைதிறன் அதிகரிக்கும்


மின்சாரத்தின் உதவியுடன் மனித மூளையை தூண்டச்செய்து அதன் மூலம் ஒருவரின் கற்கும் திறனை அதிகப்படுத்தலாம் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த விஞ்ஞானிகள் செய்திருக்கும் ஆய்வில், மனித மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில், குறைந்த அளவு மின்காந்தப்புல தூண்டுதலை குறிப்பிட்ட கால கட்டத்திற்கு செலுத்துவதன் மூலம் மூளையின் செயற்திறனை அதிகரிக்க முடியும் என்றும், அதன் மூலம் ஒருவரது கற்கும் திறனை-- குறிப்பாக ஒருவரின் கற்கும் வேகத்தை அதிகப்படுத்தலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஆரோக்கியமான மனிதர்களின் மூளை மற்றும் ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையின் செயற்பாடுகள் இந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்களின் மூளையின் செயற்பாடுகளை கூர்மையாக ஆராய்ந்த இவர்களுக்கு மனித மூளையின் நெகிழ்வுத்தன்மை பெரிய வியப்பை தந்தது.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மனித மூளையின் பாதிக்கப்பட்ட பகுதிகள் உரிய மருத்துவ சிகிச்சைக்குப்பிறகு தனது முந்தைய செயற்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் செயற்படுத்தத் துவங்கும் விதத்தை இவர்கள் விரிவாக ஆராய்ந்தனர்.

அப்படியான மூளையின் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் செயற்பட வைப்பதற்காக அந்த பகுதிகளுக்கு குறைந்த அளவான மின்காந்தப்புலத்தை, உரிய உபகரணங்களை கொண்டு செலுத்தும் சிகிச்சை முறையை இவர்கள் கண்காணித்தனர்.

இந்த குறிப்பிட்ட சிகிச்சை முறையை ஆரோக்கியமான மனிதர்களின் மூளையில் செய்தபோது விஞ்ஞானிகளுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அதாவது அப்படி செலுத்தப்பட்ட மூளையின் குறிப்பிட்ட பகுதியின் செயற்பாட்டின் வேகம் அதிகரித்ததை கவனித்த விஞ்ஞானிகள், மனிதர்களின் கற்றல் திறனை கட்டுப்படுத்தும் மூளையின் குறிப்பிட்ட பகுதியில் இந்த பரிசோதனையை செய்தபோது அப்படிப்பட்டவர்களின் கற்கும் வேகம் அதிகரிப்பதை இவர்கள் கண்டறிந்தனர்.

இதன் மூலம், கட்டுப்படுத்தப்பட்ட மின்காந்த தூண்டுதலால் மனித மூளையின் செயற்திறனை அதிகரிக்கச்செய்ய முடியும் என்பதை தங்கள் பரிசோதனையின் முதல்கட்ட முடிவுகள் காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் மேலதிக பரிசோதனைகளின் முடிவில், மூளையின் செயற்திறனை, குறிப்பாக கற்கும் திறனை அதிகரிக்கச்செய்யும் மின் காந்த கருவி ஒன்றை உருவாக்க முடியும் என்றும் இவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

Post a Comment

0 Comments