காந்தி பற்றி புதிய புத்தகம் சர்ச்சையில்


அமெரிக்க எழுத்தாளர் , ஜோசப் லெலிவெல்ட் எழுதிய , “ கிரேட் சோல், மகாத்மா காந்தி அண்ட் ஹிஸ் ஸ்ட்ரக்ல் வித் இண்டியா” ( Great Soul- Mahatma Gandhi and His Struggle with India) என்ற புதிய வாழ்க்கை சரிதப் புத்தகம், இந்தியாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
இந்தப் புத்தகத்தில் இந்தியாவின் தேசத் தந்தை என்று கருதப்படும் காந்தியை ஓரினச் சேர்க்கையாளர் மற்றும் இனவெறியர் என்று காட்டும் வகையில் சில கருத்துக்கள் சொல்லப்பட்டிருப்பதாக , சில பத்திரிகைகளில் வெளிவந்த மதிப்புரைகள் இந்த சர்ச்சையைத் தூண்டியிருக்கின்றன.

இந்தியாவில், காந்தி பிறந்த மாநிலமான, குஜராத் அரசு, இந்த புத்தகத்தைத் தடை செய்திருக்கிறது. இந்தியாவின் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியும்,இந்தப் புத்தகம் தேசிய அளவில் தடை செய்யப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார்.ஆனால், மகாத்மா காந்தி பற்றிய ஜோசப் லெலிவெல்ட்டின் புத்தகம் இன்னும் இந்தியாவில் பிரசுரமாகவில்லை,விற்பனைக்கு வரவில்லை.ஆனால் பத்திரிகைகள் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் பிரசுரங்களில் வெளியான இந்த புத்தகம் குறித்த மதிப்புரைகளை மறு பிரசுரம் செய்துள்ளன.காந்திக்கும், ஜெர்மானிய கட்டிடக்கலைஞரும், உடற்பயிற்சி செய்வதில் விருப்பம் உள்ளவருமான ஒருவருக்கும் இடையே இருந்த நெருக்கமான உறவைஇந்த புத்தகத்தின் சில பகுதிகள் கோடிட்டுக் காட்டியிருந்தன.

இந்த ஜெர்மானியர் ஓரின உறவை கடைப்பிடித்தவராக இருந்திருக்கலாம் அல்லது இல்லாமலும் இருந்திருக்கலாம்.காந்தி ஆப்ரிக்கர்களைப் பற்றி இனத்துவேஷமான சில கருத்துக்களைக் கூறினார் என்றும் இந்த புத்தகம் கூறுவதாக இந்த பத்திரிகை மதிப்புரைகள் கூறுகின்றன.இவை எல்லாம், காந்தி பிறந்த மாநிலத்துக்காரர்களுக்கு தாங்கமுடியாதவைகளாகிவிட்டன.இந்த புதிய வாழ்க்கைச் சரிதம் விற்பனை செய்யப்படுவதற்கு தடை விதிக்க புதன்கிழமை குஜராத் மாநில சட்டப்பேரவை ஒரு மனதாக வாக்களித்தது.

மத்திய சட்டத்துறை அமைச்சர், இந்தப் புத்தகத்தை, அடிப்படையற்ற, உணர்ச்சிகளைக் கிளப்பும் நிந்தனை, ஒரு தேசத்தலைவரை இழிவுபடுத்தும் புத்தகம் என்று வர்ணித்து, மத்திய அரசும் இதே போன்ற தடையை விதிக்கவேண்டும் என்று கூறினார்.ஆனால் , நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், புலிட்சர் விருது பெற்றவருமான, ஜோசப் லெலிவெல்ட், காந்தியை, இருபால் உறவுக்காரர் என்றோ அல்லது இனவெறியர் என்றோ தான் எந்த இடத்திலும் வர்ணிக்கவில்லை என்றார்.மேலு, தன்னை ஒரு ஜனநாயக நாடாகக் கூறிக்கொள்ளும் ஒரு நாடு, ஒரு புத்தகத்தை அந்த நாட்டில் எவரும் படிப்பதற்கு முன்னமேயே தடை செய்வது அவமானகரமானது என்றும் அவர் கூறினார்.

“ தடை ஜனநாயக விரோதமானது”—காந்தியக் கல்வியாளர்

காந்தி குறித்த இந்தப் புத்தகத்தின் மீது குஜராத் அரசு விதித்துள்ள தடையும், இந்திய அமைச்சரின் கருத்துக்களும், தேசப்பிதா என்று கருதப்படும் காந்தி மற்றும் அவரைப்போன்ற தலைவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களாகப் பார்க்கப்படவேண்டும் என்ற மனோபாவத்தைக் காட்டுகிறதா என்று , அமைதி மற்றும் அஹிம்சைக்கான சர்வதேச காந்தி கழகம் என்ற அமைப்பைச் சேர்ந்தவரும், மதுரைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான, டாக்டர் எஸ்.ஜெயப்பிரகாசம் அவர்களைக் கேட்டபோது, தேசத்தலைவர்களை இதிகாச புருஷர்களாகப் பார்க்கும் மனோபாவம், சர்வாதிகார மனப்பாங்கையே காட்டுகிறது. இது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல என்றார்.

இந்தியாவில் ஜனநாயகம் என்பது இன்னும் பல நிலைகளில் வளரவேண்டியிருப்பதாகக் குறிப்பிட்ட ஜெயப்பிரகாசம், குடும்பம், குழு, தனிநபர் என்ற பல நிலைகளில் நாம் மக்களாட்சிப் பண்போடுதான் நடந்துகொள்கிறோமா என்பது சிந்திக்க வேண்டிய விஷயம் என்றார்.

இந்த மாதிரி ஒரு புத்தகத்தைத் தடை செய்வது என்பது ஜனநாயகப் பண்புக்கு விரோதமாகவே கருதப்படும் என்றார் அவர்.காந்தியின் பெயரை சந்தர்ப்பவாத அரசியலுக்கு பயன்படுத்துவதாக இதைக் கருதலாம் என்று கூறிய அவர், ஒரு புத்தகத்தை மக்கள் படித்து விட்டு அதோடு உடன்படலாம் அல்லது நிராகரிக்கலாம், ஆனால் அதைத் தடை செய்வது ஒரு தீர்வாகிவிடாது என்றார்.மகாத்மா காந்தியின் வாழ்க்கையை முழுமையாகப் படித்தால்தான் அவர் ஒரு சாதாரண ஆத்மாதான், அவர் பல விஷயங்களில் வெற்றி பெற்றார், சிலவற்றில் தோல்வி கண்டார் என்பதை உணர்ந்து கொண்டு, வெற்றி தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்தால்தான், அவரது வாழ்க்கையிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்றார் ஜெயப்பிரகாசம்.

Post a Comment

0 Comments