(வாழ்க்கையில்)”பட்ட”தாரி..

இளங்கலை (BCOM) வணிகவியல் முடித்திருந்தான்
நமது கதையின் “நாயகன்”.
பட்டம் வாங்கிய பழக்கம் தன் பரம்பரைக்கே
இல்லை என்பதனால்..
பசுமாட்டை விற்றுவிட்டு நம் நாயகனை கல்லுரிக்கு
அனுப்பினார் - நாயகனின் தந்தை.

நம் நாயகனோ,பத்து அரியர்கள் வைத்துவிட்டு - மற்றவற்றில்
மட்டும் பார்டரை தாண்டி பக்கத்தில் நின்று இருந்தான்(50%)
அனைத்து செமஸ்டரிலும் அதிகம் படிக்காவிட்டாலும்
பார்டரை கைப்பற்றும் நம் நாயகன்..
இறுதியாண்டில் மட்டும் - காதல் தலைக்கேறி
கயல்விழியின் பின்னால் காவலனாய் அழைந்தான்.

வழக்கம்போல், காதல் கவிதைகள் வரைந்தான் -அதனால்
தனக்கு செமஸ்டர் இருப்பதை மறந்தான்.
பாவம்- பத்து பேப்பரில் கவிழ்ந்தான்.

அரியர் பற்றற்ற எதிரிகள் (நன்றாக படிப்போர் சங்கம்)
ஆன் கேம்பஸ் வழியே “ஐடி”க்குள்
பக்காவாக புகுந்து பீட்டர் ஆங்கிலம் பேசினர்.
அரியர் தாண்டிய நண்பர்களும் கூட கொஞ்சம்
தடுமாறி பின்பு தன்னை கரையேற்றிக் கொண்டனர்.

சுமாராய் படித்த கயல்விழி கூட ஆன்சைட் சென்றிருந்தாள்
“ஐடி” வேலைக்கு…
கதையின் நாயகி கயல்விழி என்று நினைத்தால்..
நேயர்களே… ஏமாற்றமே அடைவீர்.

கயல்விழிக்கு கல்யாணமானதை கூட நண்பனின்
மூலமாக நேற்றுதான் அறிந்திருந்தான்
நமது காதல் நாயகன்.

கயல்விழியைப் பொருத்தவரை, நாயகனுக்கும்
அவளுக்கும்- கல்லூரியில் படித்ததைத் தவிர
வேறெந்த உறவும் இல்லை.

நாயகனைப் பொருத்தவரை காதல்
என்பதோ புனிதத்தின் எல்லை - ஆனால்
கயல்விழியிடம் அவன் தன் காதலை
எப்போதும் சொன்னதே இல்லை (!!).

இல்லாத ஒன்றை இருப்பதாய் எண்ணி வாழ்க்கையோடு
சேர்த்து - வயதையும் தொலைத்த நம் நாயகனுக்கு…

சரித்திரத்தில் மட்டுமல்ல - இந்த கதையில் கூட
அவன் பெயர் குறிப்பிடப்படவில்லை.

http://karurkirukkan.blogspot.com

படைப்பு : க.பிரகாஷ் ,கோவை

இந்த படைப்பை 04.09.10 தினமணியில் வெளியிட்டு ஊக்கபடுதியதற்கு மிக்க நன்றி , தினமணிக்கு.தொடர்ந்து ஊக்கம் தந்து கொண்டு இருக்கும் தினமணிக்கு மனமார்ந்த நன்றிகள்

Post a Comment

0 Comments