உள்நாட்டு சட்ட விதிமுறைகளை மீறியதாக உள்ள பதிவுகளை நீக்க வேண்டும் என்று ஃபேஸ்புக் நிறுவனத்திடம் நாடிய உலக நாடுகளில் இந்தியா முதலிடம் வகித்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்திடம் இத்தகைய இந்திய அரசின் கோரிக்கைகளின் எண்ணிக்கையை கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால், இப்போது 3 மடங்கு அதிகரித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
ஃபேஸ்புக் நிறுவனம் வழக்கமாக தங்களது பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை எந்த அரசுக்கும், புலனாய்வு ஏஜென்சிகளுக்கும் தருவதில்லை. எனினும், தங்கள் பயனாளர்களில் குற்றப் பின்னணிக்கான முகாந்திரம் உள்ளவர்கள் தொடர்பான தகவல்களை அளிக்கும் நடைமுறையை 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஃபேஸ்புக் நிறுவனம் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் பல நாடுகள் கேட்ட பயனாளர் குறித்த தகவல்களின் எண்ணிக்கையும், பதிவுகளை நீக்குவதற்கு விடுக்கப்படும் கோரிக்கைகளும் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஃபேஸ்புக்கின் விவர அறிக்கை இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இது, நடப்பாண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்துக்கு உட்பட்டதாகும்.
அந்த அறிக்கையின்படி, தங்களது பயனாளர்கள் தொடர்பாக, உலக நாட்டு அரசுகள் கேட்கும் தகவல்கள் தற்போது 18 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு கடைசி 6 மாதத்தில் 35,051 பேரின் தகவல்களை உலக நாடுகள் கேட்டிருந்தன. இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 41,214 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உள்ளூர் சட்டங்களை மீறிய 20,568 பேரின் பதிவுகள் நீக்கப்பட்டுவிட்டன. இது கடந்த ஆண்டின் கடைசி 6 மாதத்தில் நீக்கியதை விட 2 மடங்காகும்.
முகநூல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் 1.4 பில்லியனில் இருந்து தற்போது 1.55 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதில் தனிநபர்கள் குறித்த தகவல்கள் வழங்குமாறு அமெரிக்காவிடம் இருந்துதான் அதிகமாக கோரிக்கைகள் வந்துள்ளன. மொத்தம் 26,579 பேரின் தகவல்களை அமெரிக்க அரசு புலனாய்வு நிறுவனங்கள் கேட்டுள்ளன. அதற்கடுத்த நிலையில், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகள் அதிக தகவல்கள் கேட்டுள்ளன.
பதிவுகளை நீக்கக் கோருவதில் இந்தியா முதலிடம்
இந்தியாவை பொறுத்தவரையில், உள்நாட்டு சட்ட விதிமுறைகளை மீறியதாக உள்ள பதிவுகளை நீக்க வேண்டும் என்று ஃபேஸ்புக் நிறுவனத்திடம் வைத்த கோரிக்கைகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 3 மடங்கு அதிகரித்துள்ளது.
தற்போது இந்தியாவில் 190 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் சட்டவிரோதமாக கருத்துகளை பதிவு செய்த வகையில், இந்த ஆண்டு 15,155 பேரின் கருத்துப் பகிர்வுகள் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
ஃபேஸ்புக்கின் நிறுவனங்களான வாட்ஸ்ஆப், மெசஞ்சர் ஆப்ஸ் மற்றும் புகைப்படப் பகிர்வுத் தளமான இன்ஸ்டாகிராம் ஆகியவையும் இதில் அடங்கும்.
உலக அளவில் பதிவுகள் நீக்கக் கோரிக்கைகளை முன்வைத்த நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள துருக்கி 4,496 பதிவுகளையும், மூன்றாம் இடத்திலுள்ள பிரான்ஸ் 295 பதிவுகளையும் நீக்கக் கோரியிருந்தன.
ஒட்டுமொத்தமாக, இந்த 6 மாதங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்கக் கோரி, 92 நாடுகள் முறையிட்டிருந்தாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக்கில் சட்டவிரோதமாக பலர் கருத்துகள், படங்களை வெளியிட்டு வருகின்றனர். அரசுக்கு எதிரான விமர்சனங்களை பதிவிடுகின்றனர். இதனால் பல நாடுகள் சட்டம் - ஒழுங்கை காக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஃபேஸ்புக்கில் சட்டவிரோதமாக தகவல்கள், படங்கள் வெளியிடுவோரின் விவரங்களை சம்பந்தப்பட்ட நாடுகள் அந்நிறுவனத்திடம் கேட்டு பெறுகின்றனர். அல்லது, சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்கவோ தடை செய்யவோ வலியுறுத்துகின்றன.
தனிநபர் தகவல்கள் பாதுகாப்புக்கு ஃபேஸ்புக் நிறுவனம் உத்தரவாதம் அளித்திருந்தாலும், அதிகாரம் மிக்க அரசுகள் கேட்கும்பொழுது தகவல்களை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க உளவு நிறுவனத்தை சேர்ந்த எட்வர்ட் ஸ்நோடன் பல நாடுகளின் ரகசியங்களை இணையதளத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்திய பின், செல்போன், இணையதள நிறுவனங்களிடம் இருந்து வாடிக்கையாளர்களின் தகவல்களை திரட்டும் நடவடிக்கைகளில் பல நாட்டு அரசுகள் மும்முரமாக உள்ளது கவனிக்கத்தக்கது.
source.hindu
0 Comments