செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு உயிரை விட்ட மாணவன்!

                   மின்னல் வேகத்தில் பறந்த காரில் செல்பி எடுக்க ஆசைப்பட்ட கல்லூரி மாணவன், விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். நண்பர்கள் 3 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த சுண்டைக்காய் பாளையம், சின்ன பீளமேடு பகுதியை சேர்ந்த சகாபுதீன் என்பவரின் மகன் பாஸில் (20). இவர், வண்டலூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த சனிக்கிழமை விடுமுறை என்பதால், தன்னுடன் படிக்கும் சக நண்பர்களான சபீர் அகமது, பாஜில், சமீர் ஆகிய மூவருடன் மாமல்லபுரத்திற்கு காரில் சென்றுள்ளார். காரை பாஜில் ஓட்டியுள்ளார். பாஸில் முன் சீட்டில் அமர்ந்துள்ளார். இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் பட்டிபுலம் நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, ஓடும் காரில் இருந்தபடியே செல்ஃபி எடுக்க பாஸில் ஆசைப்பட்டார்.


பின்னர், நண்பர்களிடம் ஓடும் காரில் இருந்து வெளியே தலையை நீட்டுங்கள், நாம் செல்ஃபி எடுக்கலாம் என்றார். நண்பர்களும் செல்ஃபி எடுக்கும் ஆசையில் வேகமாக சென்ற காரின் உள்ளே இருந்து தலையை வெளியே நீட்டியுள்ளனர். செல்ஃபி எடுக்கும் மோகத்தில் பாஜிலும் தலையை வெளியே நீட்டியபடியே, காரை வேகமாக ஓட்டியுள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் மின்னல் வேகத்தில் பறந்தது. அதற்குள் கார் சென்ற வேகத்தில் சாலையில் பலமுறை பல்டி அடித்து விபத்துக்குள்ளானது.

இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து காரில் சிக்கிக் கிடந்தவர்களை வெளியே இழுத்தனர். பின்னர் 4 பேரையும் கேளம்பாக்கம் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாஸில் நேற்று உயிரிழந்தார். நண்பர்கள் 3 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சபீர் அகமது புகாரின் பேரில் மாமல்லபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments