கூட்டுக்குடும்ப வாழ்வை பறைசாற்றிய ‘தொட்டி கட்டு வீடுகள்


கொங்கு நாட்டில் புகழ்பெற்ற ‘தொட்டி கட்டு வீடுகள்’ எப்போது அதன் பொலிவை இழந்ததோ, அப்போதே கூட்டுக்குடும்ப வாழ்க்கை சிதையத் தொடங்கியது என்கிறார் நாட்டுப்புறவியல் கள ஆய்வாளர் சு.வேலுச்சாமி.
கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு நாட்டில், முன்பு சமசதுர அளவில் அல்லது செவ்வக வடிவில் கட்டப்பட்ட வீடுகள் ‘தொட்டி கட்டு வீடுகள்’ அல்லது ‘பண்ணை வீடுகள்’ என்றழைக்கப்பட்டன. இவை கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையை பறைசாற்றும் விதமாக இருந்தன.
உறவு, பாசம், பண்பு ஆகியவை நடைமுறை பழக்க வழக்கங்கள் மூலமும், கதைகள், பாடல்கள், பழமொழிகள் மூலமும் பெரியவர்களால் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டன. மிகவும் பழமைவாய்ந்த கிராமங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் என கொங்கு பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அதில் பெரும்பாலானவை சிதிலமடைந்த நிலையில் உள்ளன. கூட்டுக்குடும்ப வாழ்வை பறைசாற்றிய ‘தொட்டி கட்டு வீடுகள்’ அதன் பொலிவை இழந்து வருகின்றன.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே காசிபாளையம் கிராமத்தில் வெங்கடாச்சலம் (90), பேபி (65) தம்பதியினர் அவர்களது 3 மகன்களுடன் பரம்பரையாக ‘தொட்டி கட்டு வீட்டில்’ வசிக்கின்றனர். மூத்த மகன் விவசாயத்தை கவனிக்க, மற்ற இருவர் திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறும்போது, ‘நகரத்து வாசனை இல்லாமல், இயற்கையுடன் இணைந்து வாழ்வது மகிழ்ச்சியாக உள்ளது. விவசாயம் மூலம் கிடைக்கும் வருவாய், மளிகை உள்ளிட்ட பொதுச் செலவுக்கு பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட பிற செலவுகளுக்கு அவரவர் பெறும் மாதச் சம்பளம் பயன்படுகிறது. இதனால், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகரிக்கிறது’ என்றனர்.
வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த நாட்டுப்புறவியல் கள ஆய்வாளர் சு.வேலுச்சாமி கூறும்போது, ‘தொட்டி கட்டு வீடுகள்” குறித்து கிராமம் கிராமாகச் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இத்தகைய வீடுகளில் வசிப்போரின் பண்பாடு, கலாச்சாரம் பெருமைக்குரியது. கூட்டுக்குடும்ப முறையை பறைசாற்றியதால் இதற்கு தனிப்பெருமை உண்டு. பெரும்பாலான வீடுகளுக்கு ஒன்று அல்லது இரண்டு பிரதான வாயில் கதவுகள் உள்ளன.
உட்புறம் நேர் எதிர் திசையில் அறைகள் அமைந்துள்ளன. நடுவில் மழை நீர் சேகரிக்கும் வகையில் தொட்டி, நீர் வெளியேற பாதை (ஜலதாரை) அமைக்கப்பட்டுள்ளன. வீடுகள் வெவ்வேறாக இருந்தாலும், ஒரே வாயில் கதவு வழியாகத்தான் வந்து செல்ல முடியும். எந்தவொரு பிரச்சினையும் உடனடியாக பேசி தீர்க்கப்பட்டு விடும். கலாச்சாரம், பண்பாடு, பாசம் போன்ற நல்ல பழக்க வழக்கங்களை பெரியவர்களிடம் இருந்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள முடிந்தது.
பகைமை மறந்து சுமுக வாழ்வு நிலவியது. கணவன், மனைவி வேலைக்கு சென்றாலும், பிள்ளைகளை கவனித்துக் கொள்ளும் தாத்தா, பாட்டி உறவுகள் இக்குடும்ப வாழ்க்கையில் இருந்தன.
ஆனால், தற்போதைய சூழலில் பல்வேறு காரணங்களால், ‘தொட்டி கட்டு வீடுகளில்’ வசிப்போர் குறைந்து பல கிராமங்களில் அவை கேட்பாரற்று கிடக்கின்றன. இவ்வீடுகள், எப்போது அதன் பொலிவை இழக்க தொடங்கியதோ, அப்போதே கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையும் மறையத் தொடங்கியது எனலாம். இதனால், முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள் பெருகி வருகின்றன. மனித வாழ்க்கை சீரழிந்து, மனித நேயம் மறைந்து வருவதில் ஐயமில்லை’ என்றார்.

source.hindu

Post a Comment

0 Comments