கார்பைடு கற்களால் பழுக்க வைத்த மாம்பழங்கள், கெட்டுபோன இறைச்சி பார்சல்கள், சுகாதரமில்லாத சாலையோர உணவுகள் என நமது உடல் நல, ஆரோக்கியங்களோடு விளையாடும் வர்த்தக நடவடிக்கைகளை தினசரி பார்த்தே வருகிறோம். சுகாதாரத் துறை அதிகாரிகள் அவ்வப்போது இவற்றை கண்டுபிடித்து அழிப்பதும், மீண்டும் வழக்கமாக நடப்பதும் சகஜமாகிவிட்டது.
இது உள்ளூர் அளவிலான பிரச்சி னைகள். ஆனால் இந்த இடத்தில் மக்களின் நம்பிக்கை சார்ந்தவையாக இருக்கின்றன பெரு நிறுவனங்கள். பெரு நிறுவனங்கள் தயாரிக்கும் அனைத்து உணவுப்பொருட்களும் தரமானவையாக இருக்கும் என்கிற நம்பிக்கை மக்களிடம் ஆழமாகப் பதிந்துள்ளது.
சிறு வணிகர்கள், சிறு உற்பத்தி யாளர்கள் செய்யும் தவறுகள் உடனடியாக கண்ணுக்குத் தெரிவது போல பெரு நிறுவனங்களின் தவறுகள் தெரிவதில்லை. தொடர் கண்காணிப்பு மற்றும் பல அழுத்தங்களையும் தாண்டிதான் பெரிய நிறுவனங்களின் தவறுகள் தெரிய வருகின்றன, அந்த வகையில் சமீபத்தில் சிக்கலில் மாட்டியுள்ளது நெஸ்லே நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான மேகி நூடுல்ஸ்.
மேகி நூடுல்ஸ் மசாலாவில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக ரசாயன உப்பு (மோனோசோடியம் க்ளூட்டமேட்) மற்றும் ஈயம் (லெட்) இருப்பதாக ஆய்வறிக்கை வெளிவர இந்தியாவின் பல மாநில அரசுகளும் மேகி நூடுல்சுக்கு தற்காலிக தடையும், தரப் பரிசோதனைக்கான பரிந்துரையும் செய்துள்ளன.டெல்லி, தமிழ்நாடு, மத்திய பிரதேசம், கேரளா, குஜராத் மாநிலங்களிலும், நேபாளத்திலும் உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களில் அனுமதிக் கப்பட்ட அளவைவிட அதிக ரசாயனம் கலந்திருப்பது சட்ட ரீதியாக குற்றம் என உணவுத்துறை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். மேகி நூடுல்ஸை துரித உணவாக மட்டும் பார்க்காமல், குழந்தைகள் அதிகம் விரும்பி உண்ணும் பிராண்டாகவும் இருந்ததைக் கவனிக்க வேண்டும்.
குழந்தைகள் விரும்பும் உணவிலேயே ரசாயனம் என்கிறபோது, அந்த குழந்தையின் ஆரோக்கியம் சமச்சீரான வளர்ச்சி எல்லாவற்றுக்கும் யார் பெறுப்பேற்பது?
முன்னணி நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனமே இந்த தவறுகளை செய்கிற பட்சத்தில் இவர்களின் உணவுப்பொருட்கள் மீது எப்படி நம்பிக்கை வைப்பது? என்று கேள்வி எழுப்புகின்றனர் மக்கள்.
சாக்லேட்டில் புழு
2003 ஆம் ஆண்டு தீபாவளி சமயத்தில் கேட்பரீஸ் சாக்லேட் பாக்கெட்டில் புழுக்கள் இருப்பதாக மகாராஷ்டிர மாநில உணவுதுறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தவறு நிகழ்ந்துள்ளதை ஒப்புக் கொண்டு 6 லட்சம் டெய்ரி மில்க் சாக்லேட் பாக்கெட்டுகளை நிறுவனம் திரும்ப பெற்றது.
நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்தது மகாராஷ்டிர அரசு. சில மாதங்களே டெய்ரி மில்க் சாக்லேட்டுகள் சந்தையில் கிடைக்கவில்லை. நிறுவனத்தில் உற்பத்தி ஆலையையோ அல்லது உற்பத்தி அனுமதியையோ ரத்து செய்யவில்லை. சில மாதங்களுக்கு பிறகு விற்பனைக்கு வந்துவிட்டது அந்த நிறுவனம்.
குளிர்பானங்களில் ரசாயனம்
ஏற்ெகனவே இந்தியாவில் முன்ன ணியில் உள்ள பெப்சி மற்றும் கோக் குளிர்பானங்களில் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் ஆசிட் மற்றும் ரசாயனங்கள் போன்றவை அதிகம் உள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட 27 சதவீதம் அதிகமாக இந்த பானங்களில் ரசாயனம் இருக்கிறது என்றது அந்த அறிக்கை. இவற்றில் சேர்க்கப்பட்டிருக்கும் மூலக்கூறுகளை தொடர்ந்து சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்தாகக்கூட முடியலாம் என்றும் அந்த ஆய்வு சொன்னது. 2006-ல் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு பிறகு அமைதியாகி விட்டது பிரச்சினை.
இது போன்று நுகர்வோரின் உயிரோடு விளையாடும் முன்னணி நிறுவனங்களின் நடவடிக்கைகள் குறித்து சென்னையில் உள்ள நுகர்வோர் அமைப்பினரிடம் பேசினோம்.
உணவுப் பொருள் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் (2006) இந்தி யாவில் விற்பனையாகும் உணவுப் பொருட்களை தீவிரமாக கண்காணிக் கிறது. மக்களின் உடல்நலனுக்கு கேடாகும் எந்த உணவுகளையும் அனுமதிப்பதில்லை. உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் அந்த உணவு குறித்த, சேர்க்கப்பட்டுள்ள முழு விவரங்களையும் நுகர்வோர் தெரிந்து கொள்வதற்கு ஏற்ப அச்சிடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. ஆனால் எந்த நிறுவனங்களும் இதை ஒழுங்காகக் கடைபிடிப்பதில்லை.
பொதுமக்களைப் பொறுத்தவரை துரித உணவுகள் தீங்கு விளைவிப்பவை என்கிற புரிதல் இருந்தாலும், அவற் றை தவிர்க்க முடியாத உணவுப் பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இரண்டு நிமிட தயாரிப்பு என்றோ, குழந்தைகள் விரும்பி உண்கிறார்கள் என்றோ சமரசம் செய்து கொள்ளக்கூடாது. நமது உடல்நலம், ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வும் எச்சரிக்கையும் நமக்குத்தான் இருக்க வேண்டும்.
துரித உணவுகள் இந்திய உணவு பழக்கத்துக்கு ஏற்றத்தல்ல, பாரம்பரிய உணவுகளே சிறந்தது என்று பலரும் இந்த நேரத்தில் சொல்லி வருவதையும் கவனிக்க வேண்டும்.
இன்னொரு புறம் அரசும் இந்த விஷயத்தில் தீவிரம் காட்ட வேண்டும். விதிமுறைகளை மீறுகிற நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உற்பத்தி செய்யும் இடங்களில் தொடர்ச்சியாக தரப்பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றால் அதை அதிகாரிகள் செய்ய வேண்டும். பெருநிறுவனங்களுக்கு சாதகமாகக் செயல்படும் போக்கு இருக்கக்கூடாது.
இந்த விஷயத்தில் அரசு, நுகர்வோர் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் யாவருக்குமே கூட்டுப்பொறுப்பு இருக்கிறது. இதை உணர்ந்து செயல்படும்போது இது போன்ற சிக்கல்களை தவிர்க்க முடியும் என்கின்றனர்.
மற்றொரு சிக்கலில் நெஸ்லே
இதற்கிடையே நெஸ்லே நிறுவனத்தின் நான் ப்ரோ 3 பால் பவுடர் குறித்து இன்னொரு புகார் எழுந்துள்ளது. கோவையை சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் தனது குழந்தைக்கு வாங்கிய பால்பவுடரில் புழுக்கள் இருந்ததாக புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக நிறுவனத்திடம் புகார் அளித்ததுடன் கோவையிலுள்ள உணவு பகுப்பாய்வு கூடத்தில் சோதனை செய்துள்ளார்.
அந்த ஆய்வறிக்கையில் பால் பவுடரில் உயிருடன் 28 புழுக்களும், 22 சிறு வண்டுகளும் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 29 ஆம் தேதி தமிழ்நாடு உணவு பாதுகாப்பு, மருந்து கட்டுப்பாட்டு துறையில் புகார் அளித்துள்ளார்.
புகார் தொடர்பாக விசாரிக்க வந்த நிறுவனத்தின் அதிகாரிகள் பால் பவுடருக்கு பதிலாக வேறு பவுடர் டின்னை கொடுப்பதாகவும், புழுக்கள் உள்ள டின்னை திரும்ப பெறுவதாகவும் கூறியுள்ளனர். ஆய்வறிக்கை குறித்த தகவல்களுக்கு தகுந்த பதிலை சொல்லாமல் தங்களது தவறை மூடி மறைக்கவே முயற்சி செய்துள்ளனர். தற்போது இந்த பால் பவுடர் விவகாரம் விசாரணையில் உள்ளது.
தவறுகள் நேர்கிற பட்சத்தில் மட்டும் அரசு நடவடிக்கை எடுக்கிறது. சம்பந்தப்பட்ட (நெஸ்லே) நிறுவனமோ தாங்கள் தவறே செய்யவில்லை என்கிறது. நிறுவனங்கள் சமூக பொறுப்புக்கு (சிஎஸ்ஆர்) தனியாக கோடி கோடியாக கொட்டிக் கொடுக் கின்றன. சமூக பொறுப்பு என்பது தனியாக பணம் செலவு செய்வது மட்டுமல்ல, தரமான உணவுப்பொருட்களை தயார் செய்வதும் சமூக பொறுப்புதான் என்பதை நிறுவனங்கள் மறந்துவிடக் கூடாது.
source.hindu
0 Comments