திருமண உறவுகளில் நம்பிக்கை....தீபிகா படுகோன் விளக்கம்

மை சாய்ஸ்' குறும்படம் உருவாக்கிய சர்ச்சைகள் குறித்து நடிகை தீபிகா படுகோன் தனது மவுனத்தைக் கலைத்தார்.
திருமண உறவுகளில் நம்பிக்கை துரோகத்தை தான் ஆதரிக்கவில்லை என்ற அவர், அந்தக் குறுப்படத்தின் உண்மையான அர்த்தம் புறக்கணிக்கப்பட்டு விட்டதாகவும் கவலை தெரிவித்தார்.
பிரபல பாலிவுட் நடிகை தீபிகோ படுகோனை முன்வைத்து முற்போக்கான பெண்ணிய சிந்தனை எனக் கருதப்படும் வாசகங்களைத் தாங்கிய வண்ணம் உருவாக்கப்பட்டிருந்தது 'எனது விருப்பம் / தெரிவு' (My choice) குறும்படம்.

ஹொமி அதாஜானியா இயக்கத்தில், பெண்கள் ஃபேஷன் இதழான 'தி வோக்' வெளியிட்ட இந்தக் குறும்படம், சாதக - பாதக எதிர்க் கருத்துகளுக்கு வித்திட்டது.
அந்தக் குறும்படம் பேசும் பெண்ணிய வாசகங்களில் உடல் சார்ந்த விருப்பங்களை மட்டுமே சுட்டிக்காட்டி, இணையத்தில் எதிர்க் கருத்துகள் பரவலாக பதிவு செய்யப்பட்டது. அதேவேளையில், "என் விருப்பம்... என் கைரேகையைப் போன்றது. அதை ஒருபோதும் மாற்ற முடியாது" என்று அழுத்தமாக பதிவு செய்திருந்தார் தீபிகா படுகோன்.
                குறிப்பாக, திருமண உறவைத் தாண்டிய பாலுறவு குறித்த அம்சம் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. பலருக்கு அதில் இடம்பெற்ற கருத்துக்கள் வெறுப்பை கிளப்பினாலும், தான் அத்தகைய குடும்ப உறவின் நம்பிக்கை துரோகத்தை ஆதரிக்கவில்லை என்று தீபிகா படுகோன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

             இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "மை சாய்ஸ் வீடியோ குறித்து எழுந்த முரண்பட்ட கருத்துகள் என்னை பாதிக்கவில்லை. சில வரிகள் அந்தக் குறிப்பிட்ட சூழலிலிருந்து வெளியே இழுக்கப்பட்டு ஊதிப் பெருக்கப்பட்டன, ஆனால், அந்த வீடியோ கூறவந்த பரந்துபட்ட விஷயங்களை கவனிக்காமல் விட்டது ஏமாற்றமளிக்கிறது. மேலும், நம்பிக்கைத் துரோகத்தை நான் ஆதரிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது எனக்கு முட்டாள்தனமாகவே படுகிறது.
நான் ஒருபோதும் திருமண உறவுகளில் நம்பிக்கை துரோகத்தை ஆதரிக்கவில்லை. திருமணம் என்ற நிறுவனம் எனக்கு என்ன பொருள் தருகிறது என்பது நன்றாகத் தெரியும். அது மிகவும் புனிதமானது. உறவுகளில் நேர்மையாகவும் நம்பகத்தன்மையுடன் நடந்துகொள்வதையும் நான் பெரிதும் நம்புகிறேன். திருமணம், குடும்பம் என்ற நிறுவனம் மீது நான் உண்மையாகவே நம்பிக்கை வைத்திருக்கிறேன்.நான் எதையும் ஆதரித்துப் பேசவில்லை. நான் ஆதரித்துப் பேசாத ஒரு விஷயத்தை ஆதரித்துப் பேசியதாக சிலர் கருதியது எனக்கு ஏமாற்றமளிக்கிறது. இப்போது நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆண் - பெண் உறவுகளில் நான் நம்பிக்கைத் துரோகத்தை ஆதரிக்கவில்லை, ஒருபோதும் ஆதரிக்கவும் மாட்டேன் என்பதை மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.

இதற்கான திரைக்கதை என்னிடம் பகிர்ந்து கொள்ளப்பட்ட போது, என்னால் சில வரிகளை ஒப்புக்கொள்ள முடியவில்லை என்பதே உண்மை. ஆனால் அந்தப் படம் சொல்லும் பரந்துபட்ட மற்ற செய்திக்கு நான் தேவைப்படுகிறேன் என்று என்னை அணுகியிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். அந்த வீடியோவில் தோன்றிய மற்ற 98 பெண்களைப் போலவும், அதன் ஒரு பகுதியாக ஒத்துழைப்பு வழங்க நானும் ஒப்புக் கொண்டேன்" என்றார் தீபிகா படுகோன்.
தீபிகோ படுகோனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், அவரைத் தாண்டி பல தரப்ப்பட்ட துறைகளில் சாதித்த பெண்கள் தங்களது விருப்பம் என்ன என்பதை வெளிப்படுத்துகின்றனர். ஆனால், இந்த முயற்சியில் கொண்டிருக்கும் முற்போக்கான பெண்ணிய வாசகங்களை சிலர் ஏற்றுக் கொண்டாலும், சமூக வலைதளங்களில் பலர் இதனை கடுமையாக எதிர்த்தனர். முக்கியமாக இளைஞர்கள் எதிர்ப்பு காட்டினர்.

பெண்ணியம் அல்லது பெண் உரிமை என்ற கோட்பாட்டில் கல்வி உரிமை, சம வாய்ப்புகள் போல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டிய இந்த நேரத்தில், உதாரணமாக திருமண பந்தத்தைத் தாண்டிய உறவு போன்ற விஷயங்களை முன்னிறுத்தி தீபிகா அண்ட் கோ பெண்ணியம் பேசியிருப்பதை கடுமையாக எதிர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments