கமல்ஹாசன்....ஒரு பார்வை

"உன் நண்பன் யார் என்று சொல், நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்" என்று சொல்வது உண்டு. இது, தமிழ்த் திரையுலக நட்சத்திரங்களுக்கு மட்டும் பொருந்தாது. நண்பர்கள் எனச் சொல்லிக் கொள்பவர்களிடம் பெயரளவுக்கு மட்டுமே பழகும் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் பெரும்பாலானோர் தங்களது மேனேஜர், பி.ஆர்.ஓ. ஓட்டுநர், ஒப்பனைக் கலைஞர் முதலானோரிடம்தான் நெருக்கமாக இருக்கிறார்கள். நம்பிக்கையின் அடிப்படையில், இவர்களில் யாரோ ஒருவர்தான் குறிப்பிட்ட நட்சத்திரங்களின் டைரியாகவும் மாறுகிறார்கள். இத்தகைய உள்வட்டாரங்கள் மூலமாக அதிகாரபூர்வமாக கிடைத்தத் தகவல்களின் சுவாரசிய தொகுப்புதான் இந்த 'ஸ்டார் டைரி' தொடர். நிழலில் மட்டுமல்ல... நிஜத்தில் பல சுவாரசியங்களை தன்னகத்தே கொண்டுள்ளதால்தான் நடிகர் கமல்ஹாசனில் இருந்து தொடங்குகிறேன்.

            ட்விட்டர், ஃபேஸ்புக், கூகுள் ப்ளஸ், வாட்ஸ்-அப், மெசேஜ் இடையே வரும் போன் கால்கள் என அனைத்திலும் எப்போதுமே பிஸியாக இருப்பவர் நிகில். ட்விட்டர் தளத்தில் ட்வீட் போட்டுவிட்டு, வாட்ஸ் அப்பில் வரும் மெசேஜ்களுக்கு பதில் அனுப்பிக் கொண்டிருப்பார். இடையே காதில் உள்ள ஹெட்போன் மூலமாக ஏதாவது ஒரு நடிகரிடம் பேசிக் கொண்டிருப்பார். கமல்ஹாசனின் தினசரி கால அட்டவணையை ஒருங்கிணைப்பது இவர்தான். ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த 'நளதமயந்தி' மற்றும் கமல்ஹாசன் நடித்த 'பம்மல் கே சம்மந்தம்' படங்களில் தொடங்கிய நெருக்கம், 'உத்தம வில்லன்' வரை அப்படியே நீடிக்கிறது.
"அப்போதைய கமல் சார் பற்றி அப்புறம் பேசுறேன்... இப்போதைய கமல் சாரை முதலில் தெரிஞ்சுக்கலாம்" என்று சொல்லத் தொடங்கினார், தமிழ்த் திரையுலகின் 'ஹை-டெக்' என்று சொல்லப்படும் நிகில். இனி அவர் கூறியவை நம் நடையில்...


'அப்டேட்' நாயகன்
சினிமா தொடர்பாக மட்டும் அல்லாமல், அன்றாட வாழ்வில் புதிதாக அறிமுகமாகமும் தொழில்நுட்ப மாற்றங்களை உடனுக்குடன் ஆர்வத்துடன் அப்டேட் செய்துகொள்வதில் வல்லவர் கமல்ஹாசன். அந்தத் தொழில்நுட்பம் தனது படங்களுக்கு உறுதுணைபுரியும் என்றால், அதனை உடனே செய்யச் சொல்வார்.
                 தான் மட்டுமின்றி, தன்னிடம் பணிபுரியும் ஊழியர்கள், இணை இயக்குநர்கள், டிரைவர் உள்ளிட்ட அனைவரையும் ஹை-டெக் ஆர்வலர்களாக மாற்றிவிடுவார். அப்படி மாறியவர்களில் ஒருவர்தான் நிகிலும். 'விஸ்வரூபம்', 'தசாவதாரம்', 'உத்தம வில்லன்' உள்ள சமீப கால படங்களை எடுத்துக் கொண்டால் தொழில்நுட்பத்தில் பல புதுப்புது அம்சங்களைக் கையாண்டிருப்பார் கமல்.
உங்களுக்கு நடிகர் கமல்ஹாசனை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவர் வெறும் 5 நிமிடம் மட்டும்தான் நேரம் ஒதுக்கியிருக்கிறார். அந்த 5 நிமிடத்தை உங்களால் 50 நிமிடமாக்க முடியும். எப்படி?
              கமல்ஹாசன் உடனான சந்திப்பின்போது, புதுப்புது தகவல்களை, சுவையான அனுபவங்களையும் அவரிடம் அந்த 5 நிமிடத்தில் பகிருங்கள். ஒருவேளை, நீங்கள் பகிரும் விஷயங்கள் அவருக்குத் தெரியாதவையாக இருந்தால், உங்களை 50 நிமிடங்கள் ஆனாலும் அவர் விடமாட்டார். உங்களிடம் இருந்து முழுமையாக விஷயங்களைப் பெற்றுக்கொண்டு, அதன் மூலம் தன்னை அப்டேட் செய்துகொண்ட பின்னர்தான் நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள்.
தனக்குத் தெரியாதவற்றை தெரிந்தவர்களின் பின்னணி பற்றிய எவ்வித கவலையும் இல்லாமல், அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் தன்னைத்தானே அப்டேட் செய்துகொள்ளும் அந்த முனைப்பும் பண்பும்தான், 'தல - தளபதி' சீசனிலும் நடிகர் கமல்ஹாசனை 'உலக நாயகன்' என்ற உயரிய இடத்தைத் தக்கவைக்க வழிவகுக்கிறது.
*
தி பெர்ஃபக்‌ஷனிஸ்ட்
'உத்தம வில்லன்' இசை வெளியீட்டு விழா, சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இப்போதெல்லாம் இசை வெளியீட்டு விழா காலை 9 மணிக்கு வைத்தால், அப்படம் சம்பந்தப்பட்ட நடிகர்கள் வருவதற்கு 10 மணி ஆகும். ஆனால், கமல் என்ன செய்தார் தெரியுமா? 'என் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் பணிகளை நான் கவனிப்பேன்' என்றார். விழாவுக்கு முந்தைய நாள், இசை வெளியீட்டு விழா செட் பணிகள் நடைபெற்றன. அப்போது முதலே 'செட் இப்படி போட்டால் நன்றாக இருக்கும்... பத்திரிகையாளர்களை இங்கே அமர வைக்கலாம்... விஐபிக்கள் இங்கே இருக்கட்டும்... இது ரசிகர்கள் பக்கம்' என அனைத்தையுமே கமல் தீர்மானித்தார்.
              மாலையில்தான் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. ஆனால், அன்று காலையில் நிகழ்ச்சி ஒத்திகை பார்க்க வேண்டியிருந்தது. அன்றைய தினம் கமல் காலையிலேயே வந்துவிட்டார். அனைத்து ஒத்திகை நிகழ்ச்சிகளையும் பார்த்து, விழாவுக்கு வருபவர்கள் ஒரு நிமிடம் கூட சோர்வடையக் கூடாது என்று கூறி நிகழ்ச்சியை வடிவமைத்தார். மதிய உணவு அங்கே முடித்து, ஒரு கேராவேன் போட்டு தங்கிவிட்டார். ஏனென்றால், ஆபீஸுக்கோ, வீட்டுக்கோ போனால் திரும்பிவர தாமதாகி விடும். தன்னால்தான் தாமதம் என்று யாருமே சொல்லிவிட கூடாது என்பதுதான் அதற்கு காரணம்.
             நிகழ்ச்சி ஒத்திகை... மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின் கடிதம் ஒலிபரப்பட்டது. அனைவரும் ஒத்திகைப் பார்த்து கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென்று கமல் எழுந்து 'ஆடியோ எங்கேயோ தவறுகிறது' என்றார். 'இல்லை சார்... சரியாக இருக்கிறது' என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். 'இல்லை... தப்பு, பாருங்கள்' என்று கமல் கூறியதும், அங்கிருந்த ஆடியோ தொழில்நுட்ப கலைஞர்கள் ஆராயத் தொடங்கினார்கள். அப்போதுதான் தெரிந்தது, ஆடியோவுக்கும் வீடியோவுக்கும் இரண்டு புள்ளிகள் ஒற்றுமையில்லாமல் இருந்தது. அதைக் கண்டிபிடித்துச் சொன்னவர். தான் செய்யும் எந்த விஷயத்திலும் பிழை வந்திடக் கூடாது என்பதற்காக, கூர்ந்து கவனிப்பதில் வல்லவர் என்பதற்கு இதைவிட சிறந்த அண்மைகால உதாரணம் ஏதும் இல்லை. கமல்ஹாசன் எனும் அர்ப்பணிப்பு மிக்க கலைஞனின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பதும் இந்தத் துல்லியத்தன்மை மீதான அக்கறைதான்.

நிகில் விவரித்த கமல் தொடர்புடைய சில முக்கிய சந்திப்புகள்... அடுத்த அத்தியாயத்தில்!

courtesy...hindu

No comments: