மோடி, சச்சினுக்கு நடிகையின் பகிரங்க கடிதம்!

by 9:26 PM 2 comments


டிராவல் ரைட்டர், நடிகை , மாடல், என பலமுகம் கொண்டவர் ஷெனாஸ் டிரசரிவாலா. இப்போது மெய்ன் ஆர் மிஸ்டர் ரைட் என்ற படத்தில் பரூன் சோப்தி என்பவருடன் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படத்தின் புரோமோவில் பிசியாக இருக்கிறார் ஷெனாஸ். அவரை உபேர் டாக்சி பாலியல் பலாத்கார சம்பவம் ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. கூடவே இந்தியாவில் அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார சம்பவங்களும் அவரை பாதிக்கவே, பிரதமர் நரேந்திர மோடி, நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக் கான், சல்மான் கான், ஆமிர்கான், தொழிலதிபர் அனில் அம்பானி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு பகிரங்கமாக ஒரு கடிதம் எழுதியுள்ளார் ஷெனாஸ். 


          அன்பிற்குரிய நரேந்திர மோடி, அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், ஷாருக் கான், சல்மான் கான், ஆமிர்கான், அனில் அம்பானி, நீங்கள் நாட்டின் முன்னணியான, சக்தி வாய்ந்த ஆண்கள் என்ற அடிப்படையில் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன். மும்பையில் நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பெண் என்ற அடி்பபடையில் இதை எழுதுகிறேன். உங்களது உதவி கோரி இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். எனது பெற்றோர்கள் இதை விரும்ப மாட்டார்கள். இதை அவர்கள் படிக்க நேர்ந்தால் அதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் இது எனது அவமானமல்ல. அவர்களது அவமானம்தான்.
   நான் 13 வயதாக இருந்தபோது பாலியல் அக்கிரமத்தை சந்திக்க நேரிட்டது. 


ஒரு ஆண் (அவனது முகத்தை நான் பார்த்தது கூட கிடையாது, ஆனால் அவனது கையை என்னால் மறக்க முடியாது) என்னைத் தொட்டு அக்கிரமம் செய்தான். எனது தாயாருடன் காய்கறிக் கடைக்குப் போய்க் கொண்டிருந்தபோது அந்த செயலை அவன் செய்தான். எனது தாயார் எனக்கு அப்போது செய்திருந்த ஹேர்கட் மோசமாக இருந்தது. நான் ஒரு கோபக்கார இளம் பெண்ணாக அப்போது இருந்தேன். நான் கோபமாக எனது தாயாரைப் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். நான் அப்போது அணிந்திருந்த ஆடை கூட எனக்கு ஞாபகம் உள்ளது. அது எனக்குப் பிடிக்காத டிரஸ். ஆனால் அந்த ஆடையை குறை சொல்லிப் புண்ணியமில்லை. என்னை அந்த நபர் தொட்டு சீண்டியபோது நான் அதிர்ச்சி அடைந்தேன். பேசக் கூட முடியவில்லை. அவன் ஓடி விட்டான். நான் அப்படியே அதிர்ந்து போய் நின்று விட்டேன். எனது கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.
               எனது தாயாரிடம் நடந்ததைச் சொன்னேன். அவர் கத்திக் கூச்சல் போட்டார். ஆனால் தவறு செய்தவன் தான் ஓடிப் போய் விட்டானே. அந்த அசிங்கமான உணர்வு எனக்குள் இன்னும் இருக்கிறது. நான் வீட்டுக்கு வந்து குளியலறையில் பலமுறை குளித்தும் கூட அந்த நினைவு போகவில்லை. அதன் பிறகு அது தொடர்ந்தது. இதை நான் எனது பெற்றோரிடம் கூறினேன். எனது தாயார் புரிந்து கொண்டார். ஆனால் எனது தந்தையும், சித்தப்பா, பெரியப்பாக்களும் நான் சும்மா கற்பனை செய்து கொண்டிருப்பதாக கூறினார்கள். 
    அந்தப் பிரச்சினையை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று நினைக்கிறேன். உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? நான் 15 வயதாக இருந்தபோது, செயின்ட் சேவியர் கல்லூரிக்கு தினசரி பேருந்தில்தான் செல்வேன். அப்போது பலமுறை என்னை பல ஆண்கள் உடலைத் தொட்டுள்ளனர், தடவியுள்ளனர், உரசியுள்ளனர். தொடாத இடம் இல்லை. இப்படித்தான் நான் வளர்ந்தேன். நான் மட்டுமல்ல, வசதியான கார்களும், கார்களை ஓட்ட டிரைவர்கள் வசதியும் இல்லாத என்னைப் போன்ற பல இந்தியப் பெண்கள் இப்படித்தான் வளர்கிறார்கள். 

பதின் பருவப் பெண்ணாக இருந்த போது நான் பல கனவுகளைக் கண்டேன். என்னைத் தொட்டுத் தடவியவர்களை மெஷின் கன்னால் சுட்டுத் தள்ள வேண்டும் என்று கூட கனவு கண்டேன். ஒரு சிறுமியின் வயதில் அத்தகைய கனவு எவ்வளவு கொடுமையானது. உங்களால் அதை நினைத்துப் பார்க்க முடிகிறதா? நான் மாடலாக மாறியபோது, பல ஸ்கிரீன் டெஸ்ட்டுகளுக்குப் போக வேண்டியிருந்தது. அழகாக ஆடை உடுத்திக்கொண்டு நான் போக வேண்டியிருந்தது. ஒரு ஆடிஷனுக்கு நான் போயிருந்தபோது சிவப்பு நிற பாடி சூட்டில் போயிருந்தேன். கருப்பு நிற லாங் ஷர்ட்டும், ஸ்லிட்டுகளும் அடங்கியது அது. அது நரகம். அதை நான் மறுபடியும் அணியவே இல்லை. அதன் பின்னர் என்னைக் காத்துக் கொள்ள நானே கற்றுக் கொள்ள வேண்டி வந்தது. என்னிடம் எப்போதும் ஒரு பை இருக்கும். வளர வளர நான் சுதாரிக்க ஆரம்பித்தேன். எனக்குப் பின்னால் யாராவது வருகிறார்களா என்று பார்த்துக் கொள்வேன். என்னைத் தொட்ட சிலரை நான் அடித்து கூட இருக்கிறேன். சில நேரம் பொதுமக்கள் என்னைக் காப்பாற்றியுள்ளனர். ஆனால் பலமுறை நானேதான் போராட வேண்டியிருந்தது. 
               உன்னை யாராவது தொட்டால், சீண்டினால் சண்டை போடாதே என்று எனது தாயார் என்னிடம் கெஞ்சுவார். அவர் பயப்படுவார். யாராவது ஆசிட் ஊற்றி விட்டால் என்னாவது என்று அவரு்க்குப் பயம். இன்னும் கூட அவர் பயப்படுகிறார். உபேர் டாக்சியில் போகாதே என்று இப்போது கூறுகிறார். கொடுமை. உபேர் டாக்சியை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். எனது சகோதரி சோபியா கல்லூரியில் சேர்ந்தபோது முதல் நாள் கல்லூரி முடிந்து வீடு திரும்பியபோது விடாமல் அழுதாள். என்ன என்று கேட்டபோது, ஒரு ஆண், அவளது டி சர்ட்டின் கைப் பகுதி வழியாக கையை விட்டு சில்மிஷம் செய்ததாக கூறினாள். பேருந்து பயணம் முழுவதும் அவனது சில்மிஷம் தொடர்ந்துள்ளது. 

            அவள் அப்படியே உறைந்து போயிருந்தாள். அவள் குழந்தை. என்ன நடக்கிறது என்று கூட அவளுக்குப் புரியவில்லை. இதைச் சொன்னதற்காக எனது தங்கையிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் வேறு வழியில்லை. இது நமது அவமானம் இல்லை. அவர்களது அவமானம். எனது கல்லூரித் தோழி ஒருநாள், வீடு திரும்பியபோது பெண்கள் கம்பார்ட்மென்ட்டில் ரயிலில் பயணம் செய்தபோது பலாத்காரம் செய்யப்பட்டாள். அவளைக் காக்க யாரும் வரவில்லை. அது சூப்பர் பாஸ்ட் ரயில். பல இடங்களில் அது நிற்காது. பெட்டியில் அவள் மட்டும்தான் இருந்தாள். அதை சாதமாக பயன்டுத்தி பலாத்காரம் செய்து விட்டனர். ரத்தம் சொட்டச் சொட்ட அவள் பந்த்ரா ரயில் நிலையம் வந்து சேர்ந்தாள். அவளுக்கு வயது 16தான். இதை யாரிடமும் அவள் சொல்லவில்லை. ஆனால் அது அவளது அவமானம் அல்ல, அவர்களது அவமானம். ஹைதராபாத்துக்கு படப்பிடிப்புக்குப் போன போது எனது தாயார் உடன் வந்தார். சூரி பஜாரில், ஒரு சைக்கிளில் போன ஆண், எனது தாயாரைத் தொட்டுத் தடவி சில்மிஷம் செய்தான். என் அன்புக்குரிய தாயாருக்கு நேர்ந்த கதி அது. மன்னித்து விடு அம்மா, இது நமது அவமானம் அல்ல, அவர்களது அவமானம். 
          எனது பெர்சனல் சம்பவங்களை நான் ஏன் கூறுகிறேன்.? அனைத்துப் பெண்களும் வெளிப்படையாக பேச வேண்டும். இதை நமது கொள்கையாக மாற்றுவோம். இது நமது அவமானம் அல்ல, அவர்களது அவமானம். "அவர்கள்" யார் ..? "அவர்கள்" - இந்த நாட்டின் ஆண்கள். இந்த பாலியல் பலாத்கார குற்றவாளிகளும், பெண்களை உரசுவோரும், தடவுவோரும், ஏன், நமது தந்தைகளும், சித்தப்பாக்கள், பெரியப்பாக்கள், சகோதரர்கள், சினிமா நடிகர்கள், கிரிக்கட் வீரர்கள், அரசியல்வாதிகள்.. யாரெல்லாம் நம்மைக் காக்கத் தவறுகிறார்களோ அத்தனை ஆண்களும், குற்றவாளிகள்தான். 
              ஏன் பெண்களை இவ்வளவு தூரம் இவர்கள் விரட்டி விரட்டி மிரட்ட வேண்டும். ஏன் யாருமே நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்கிறார்கள். ஏன் கடுமையான தண்டனை தரப்படுவதில்லை. இது பல காலமாக நடந்து வருகிறதே.. டெல்லியில் மட்டுமல்ல, நாடு முழுவதும் நடக்கிறது. மும்பையிலும் நடக்கிறது, பிற ஊர்களிலும் நடக்கிறது. பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை, நிச்சயமாக இல்லை. இப்போதும் கூட எனக்குப் பாதுகாப்பு இல்லை. யோகா முடிந்தோ, ஷூட்டிங் முடிந்தோ இரவில் நான் தனியாகச் சென்றால், பத்திரமாக போய்ச் சேருவேன் என்பது உத்தரவாதம் இல்லை. நானும் பலாத்காரம் செய்யப்படலாம். எனக்குப் பாதுகாப்பு இல்லை. இன்னும் நான் பாதுகாப்புடன்தான் செல்ல வேண்டியுள்ளது. நாம் டெல்லியைப் பற்றிப் பேசுவோம். 2 நாட்களுக்கு முன்பு நான் அங்கு இருந்தேன். உபேர் டாக்சி டிரைவர் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்த அன்று நான் அங்கு இருந்தேன். இந்தியா கேட்டுக்கு வாங்கிங் செல்ல விரும்பினேன். ஆனால் என்னால் போக முடியவில்லை. ஏன்..?? பிரதமர் அவர்களே, நீங்கள் அமெரிக்காவிலும், ஜப்பானிலும், ஆஸ்திரேலியாவிலும் நன்றாகப் பேசினீர்கள். ஆனால் டெல்லியில் பட்டப் பகலில் கூட ஒரு பெண்ணால் பாதுகாப்பாக போக முடியாவிட்டால், அது யாருடைய அவமானம். உங்களது அவமானம் சார் அது. இதுதான் நமது முதல் பிரச்சினை. இதை முதலில் சரி செய்யுங்கள். இது அவமானம், உங்களது அவமானம். நீங்கள்தான் இதற்குப் பொறுப்பு. நீங்கள் சக்தி வாய்ந்த ஆண்கள். தவறு செய்தவர்களை, பெண்களைத் தடவுபவர்களை கடுமையாக தண்டியுங்கள். அவர்களைக் கொல்லுங்கள். பொது இடத்தில் அவர்களை நிறுத்தி அவர்களது ஆணுறுப்பைத் துண்டியுங்கள் என்று நான் கேட்க மாட்டேன். ஆனால் அதைத்தான் நானும் சரி, அனைத்துப் பெண்களும் சரி விரும்புவார்கள். ஆனால் இது நிஜத்தில் நடக்க முடியாதது. அவர்களுக்கு மரண தண்டனை கொடுங்கள். விரைவாக கொடுங்கள். அதுவம் கொடுமையானதாக இருந்தால் ஆயுள் தண்டனையாவது கொடுங்கள். அவர்களை நிரந்தரமாக சிறையில் அடையுங்கள். உங்களைப் போல நான் பெரியவள் இல்லைதான். ஆனால் எங்களைக் காக்க எதைச் செய்யவும் நான் தயாராக இருக்கிறேன். எங்களைக் காப்பாற்றுங்கள், அவர்களுக்கு ஜாமீனே கொடுக்காதீர்கள் தண்டியுங்கள். சூப்பர் ஸ்டார்களே, உங்களை கெஞ்சிக் கேட்கிறேன். ஒரு நிலை எடுங்கள். உங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி, பணத்தைப் பயன்படுத்தி இந்த நாட்டின் பெண்களைக் காப்பாற்றுங்கள். நீங்கள் போராட வேண்டும். உண்ணாவிரதம் இருக்க வேண்டும். ஏதாவது செய்யவேண்டும். 

மரியாதையுடன், ஷெனாஸ் டிரசரிவாலா.


source.oneindia

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

2 comments:

M.Mani said...

நீதி மன்ற விசாரணை பகிரங்கமாக இல்லாமல் in camera விசாரணை நடைபெறவேண்டும். வழக்கை இழுத்தடிக்க விடக்கூடாது. நிரூபிக்கப்பட்டால் மிகக் கடுமையான தண்டனை தரப்படவேண்டும். குறைந்தபட்சம் 15 ஆண்டுகள்.அப்போதுதான் மகளிர்க்கு பாதுகாப்பு கிடைக்கும். காவல்துறை அல்லது நிறுவன மேலாளர்கள் குற்றவாளிகள் என்றால் தண்டனை இருமடங்காகப்படவேண்டும்.

Anonymous said...

correct mani sir...