இணைய பயனாளர்களால் நெருக்கடி


இந்த உலகம் எப்படி மக்கள் ஜனத்தொகையால் திணறுகிறதோ, அதே போல, இணையமும் பயனாளர்களால் நெருக்கடியைச் சந்திக்க இருக்கிறது. இன்னும் மூன்று ஆண்டுகளில், 2018ன் தொடக்கத்தில், இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 360 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
                                            பல லட்சம் கம்ப்யூட்டர்களும், கோடிக்கணக்கான ஸ்மார்ட் போன்களும், டேப்ளட் பி.சி.க்களும் இந்த நெருக்கடியைத் தர இருக்கின்றன. இணையச் சந்தைப் பயன்பாட்டினைக் கணக்கெடுத்த eMarketer என்ற அமைப்பு இந்த தகவலைத் தந்துள்ளது. வரும் 2015 ஆம் ஆண்டில், இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 289 கோடியாக இருக்கும். இது உலக மக்கள் தொகையில், ஏறத்தாழ 43% ஆகும். இந்த ஆண்டைக் காட்டிலும் இது 6.2% கூடுதலாகும்.
                            இன்னும் சில தகவல்களை இந்த அமைப்பு கண்டறிந்துள்ளது. வரும் 2018 ஆம் ஆண்டில், உலகில் வாழும் மக்களில் பாதிப்பேர், மாதம் ஒரு முறையாவது இணையத்தைப் பார்ப்பார்கள் என்றும் அறிவித்துள்ளது.
இதற்கு அடிப்படைக் காரணம், மக்கள் அனைவரும் வாங்கக் கூடிய விலையில், இணையத் தொடர்பினைத் தரக் கூடிய மொபைல் போன்கள் மற்றும் சீனா, இந்தியா மற்றும் இந்தோனேஷியா போன்ற வளரும் நாடுகளில், குறைவான கட்டணத்தில் கிடைக்கும் இணைய இணைப்புகளே. குறிப்பாக, வயர் வழி இணைப்பு தர முடியாத இடங்களில், மொபைல் போன்கள் இணைய இணைப்பினை எளிதாக வழங்குவது, இந்த வளர்ச்சிக்கு ஓர் அடிப்படை காரணமாகும்.
                        அடுத்ததாக, உலக அளவில் இயங்கும் பல தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் இந்த நோக்கில் எடுத்துவரும் முயற்சிகளாகும். இந்நிறுவனங்கள், மக்களை இணையப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதில் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. எடுத்துக் காட்டாக, பேஸ்புக் நிறுவனர் மார்க் நோக்கியா மற்றும் சாம்சங் நிறுவனங்களுடன் இணைந்து, தென் ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் மக்களுக்கு இலவச இணைய இணைப்பு வழங்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதைக் குறிப்பிடலாம்.
             2013 ஆம் ஆண்டில், சீனா 62.07 கோடி இணையப் பயனாளர்களைக் கொண்டு இவ்வகையில் முதல் இடத்தினைப் பெற்றிருந்தது. அடுத்ததாக, அமெரிக்கா 24.6 கோடி பேரைக் கொண்டுள்ளது. இந்தியா மூன்றாவது இடத்தில் தற்போது இருந்தாலும், விரைவில், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில், இரண்டாவது இடத்திற்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரேசில் விரைவில் ஜப்பானை முந்திக் கொண்டு நான்காவது இடத்திற்கு வரும் எனவும் கருதப்படுகிறது.
இந்தியாவினைப் பொறுத்தவரை, 2016ல் இணையப் பயனாளர் எண்ணிக்கை 28.38 கோடியாக உயரும். அப்போது அமெரிக்க இணைய மக்கள் 26.49 கோடியாக இருப்பார்கள். இதுவே, 2018ல், இந்தியா 34.63 கோடி பேரையும், அமெரிக்கா 27.41 கோடி பேரையும் இணையத்தில் கொண்டிருக்கும்.

courtesy.dinamalar

No comments: