கூகுள் பைபர்

கூகுள் நிறுவனம் புதிய தொழில் நுட்பம் ஒன்றினை உருவாக்கி முடித்துள்ளது. இது வர்த்தக ரீதியாகப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தால், நாம் இணையத்தைப் பயன்படுத்துவதில், மாபெரும் மாற்றம் ஏற்படும்.
ஏற்கனவே அமெரிக்காவில் கேன்சஸ் நகரத்தில், கூகுள் பைபர் என்னும் திட்டத்தின் கீழ், அங்கு வசிக்கும் மக்களுக்கு நொடிக்கு ஒரு ஜிபி டேட்டா பரிமாற்ற வேகத்தினைத் தந்து வருகிறது. தற்போது இதனை 10 கிகா பிட்ஸ் வேகத்திற்குக் கொண்டுவரும் தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளது கூகுள். அண்மையில் இணையம் குறித்து நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பேட்ரிக் இதனைத் தெரிவித்தார்.
இது இணைய வேகத்தில் அடுத்த தலைமுறை வேகமாகவும் தொழில் நுட்பமாகவும் இருக்கும் எனக் கூறினார். இந்த அளவு வேகத்தில் டேட்டா பரிமாற்றம் செய்யப்பட்டால், சாப்ட்வேர் சேவை மிக எளிதாக அனைவருக்கும் இணைய வழியில் கிடைக்கும் என விவரித்தார்.
இந்த உலகம் ஒரு நாள் இப்படிப்பட்ட வேகத்தினையும் இணையத்தினையும் பெறும். ஆனால், இன்றைய தொழில் நுட்பக்கட்டமைப்பில் இதற்கு பத்து ஆண்டுகள் ஆகலாம். கூகுள் இதனை மூன்று ஆண்டுகளில், பொதுமக்கள் அனைவருக்கும் கொண்டு செல்லும் வகையில் உழைத்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். இதில் கூகுள் மட்டும் தனியே செயல்படவில்லை. இதனுடன் வேறு சில நிறுவனங்களும் இணைந்துள்ளன. 
சென்ற ஆண்டில், பிரிட்டன் நாட்டு விஞ்ஞானிகள், ஒளி மூலம் டேட்டாவினை அதிக வேகத்தில் பரிமாறிக் கொள்ள முடியும் என நிரூபித்தனர். இந்த தொழில் நுட்பத்தினை "lifi” என அழைத்தனர். 
வெரிஸான் நிறுவனம், முன்பு தன் 10 கிகா பிட் டேட்டா பரிமாற்ற சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது. 2.3 கிகா பைட் அளவிலான, திரைப்பட பைல் ஒன்றை, நான்கு விநாடிகளில், இந்த தொழில் நுட்பம் கொண்டு பரிமாற்றம் செய்தது.
வேறு சில அமெரிக்க நகரங்களிலும் இந்த அதிவேக டேட்டா பரிமாற்றத்தினைப் பல இணைய சேவை நிறுவனங்கள் அவ்வப்போது காட்டி வருகின்றன. கூகுள் இதனை முறையான ஆய்வு மூலம் மேற்கொள்வதால், இந்த ஆய்வில் வெற்றி பெற்று, பொதுமக்களுக்கு இதனைத்தரும் என எதிர்பார்க்கலாம்.

No comments: