"பெண்ணை பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்தால், குறைந்தபட்சம், ஓராண்டு சிறை தண்டனை முதல், அதிகபட்சம், மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். கற்பழித்தால், ஆயுள் தண்டனை, கற்பழிப்பின் போது பெண் இறந்தால் மரண தண்டனை விதிக்கப்படும்' என, பெண்கள் பாதுகாப்பிற்கான அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பிற்காக, கிரிமினல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, நேற்று முன்தினம், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி பிறப்பித்த அவசர சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
பெண்ணை வலுக்கட்டாயமாக கற்பழித்தததால், அந்த பெண் இறக்க நேரிட்டாலோ அல்லது அந்த பெண் செயல்படாத நிலையை அடைந்தாலோ, குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.டூ பிரிந்து வாழும் மனைவியை கணவன் வலுக்கட்டாயமாக கற்பழித்தால், அதிகபட்சம், ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
கற்பழித்தால் ஆயுள் முழுக்க சிறை : கற்பழிப்பு சட்டத்தின் பிரிவு 1, 2ன் கீழ், பெண்ணுக்கு காயம் ஏற்பட்டு, அந்த காயத்தால், அந்த பெண் இறக்க நேரிட்டால், குறைந்தபட்சம், 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். அந்த நபரின் எஞ்சிய ஆயுள்காலம் முழுவதும் சிறையிலேயே அடைக்கப்படுவார்.கும்பலாக சேர்ந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தால், கும்பலில் இருந்த ஒவ்வொருவருக்கும், குறைந்தபட்சம், 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, நிவாரணமும் வழங்க வேண்டும்.ஆசிட் போன்ற ரசாயனம், பொடிகளை வீசி, பெண்ணுக்கு நிரந்தரமாகவோ அல்லது கொஞ்சமாகவோ பாதிப்பு ஏற்பட்டால், குறைந்தபட்சம், 10 ஆண்டு சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, 10 லட்ச ரூபாய் வரை இழப்பீடும் வழங்க வேண்டும்.
பெண்ணை பின் தொடர்ந்து சென்று, தொந்தரவு செய்வதற்கு, குறைந்தபட்சம், ஓராண்டு சிறை தண்டனை முதல், அதிகபட்சம் மூன்றாண்டு சிறை தண்டனையுடன் அபராதம் விதிக்கப்படும்.ஆண் குறியை காண்பித்தல், பிறரின் உடலுறவு காட்சிகளை காட்டுதல் போன்ற, முதல் முறையாக செய்யும் குற்றங்களுக்கு, குறைந்தபட்சம், ஓராண்டு முதல், அதிகபட்சம், மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.மீண்டும் அதே குற்றங்களை செய்தால், குறைந்தபட்சம், மூன்றாண்டுகள் முதல், அதிகபட்சம், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
அவிழ்த்து மானபங்கம் :
பெண்ணின் ஆடையை தவறான நோக்கத்தில் அவிழ்த்து மானபங்கம் செய்தால், குறைந்தபட்சம், மூன்றாண்டுகள் முதல், அதிகபட்சம், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் கிடைக்கும். பாலியல் நோக்கத்தில் எழுதப்பட்ட, வரையப்பட்ட ஏதாவது ஒன்றை காண்பித்தல், நிர்வாண படங்களை காண்பித்தல் போன்ற குற்றங்களுக்கு, ஓராண்டு சிறை தண்டனை, சிறை தண்டனையுடன் அபராதம் விதிக்கப்படும்.பாலியல் நோக்கத்தில் பெண்ணை தொடுவது, அவர் மீது படர்வது, கெஞ்சுவது போன்ற குற்றங்களுக்கு, அதிகபட்சம், ஐந்தாண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும், இரண்டும் சேர்ந்தும் விதிக்கப்படும். போலீஸ் துறையை சேர்ந்தவர், அரசு ஊழியர், ராணுவ படை வீரர் போன்றவர்கள், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தால், குறைந்தபட்சம், 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, அதிகபட்சம் ஆயுள் தண்டனை, அபராதம் விதிக்கப்படும்.
குற்றச்சட்டம், 376 (கற்பழிப்பு) படி, கற்பழிப்பு குற்றத்திற்கு, குறைந்தபட்சம், ஏழு ஆண்டு முதல், ஆயுட்காலம் வரையிலும் சிறையில் இருப்பதற்கான, ஆயுள் தண்டனை, அபராதம் விதிக்கப்படும். கற்பழிப்பு குற்றத்தை கும்பலாக சேர்ந்து செய்பவர்களுக்கு, ஆயுள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்.அதிகாரத்தில் உள்ளவரின் கீழ் வேலை பார்க்கும் பெண், உடலுறவுக்கு உட்படுத்தப்பட்டால், குறைந்தபட்சம், ஐந்தாண்டுகள் முதல், அதிகபட்சம், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
மைனர் பெண்களை கடத்தினால்: மைனர் பெண்ணை கடத்திய நபர், ஒரு முறைக்கு மேல், அதே குற்றத்தை செய்தால், அவர் ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்கப்படுவார். அவ்வாறு கடத்தி வரப்பட்ட மைனர் பெண்ணை வேலைக்கு அமர்த்தினால் அல்லது கடத்தலுக்கு உதவினால், குறைந்தபட்சம், ஐந்தாண்டுகள் முதல் அதிகபட்சம், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணை கடத்தினால், குறைந்தபட்சம், 10 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரையும், அபராதத்துடன் விதிக்கப்படும்.ஒன்றுக்கு மேற்பட்ட மைனர் பெண்களை கடத்தினால், குறைந்தபட்சம், 14 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் ஆயுள் முழுக்க சிறை தண்டனை நிச்சயம்.இவ்வாறு, பல திருத்தங்கள், அவசர சட்டத்தில் இடம்பெற்றுள்ளன
1 Comments